×

எம்.ஜி.ஆர், ஜெ.,-வை மறந்து மோடி, அமித்ஷா-வை வணங்கும் முதல்வர் பழனிசாமி : ஸ்டாலின் கிண்டல்

அரூர்; தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மணி மற்றும் தருமபுரி வேட்பாளர் செந்தில்குமார் ஆகியோருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கெண்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளோம். மறைந்த திமுக தலைவர் நின்று வென்ற சின்னம் உதயசூரியன் என்றார். எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மறந்து விட்டு முதல்வர் எடப்பாடி பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் வணங்கி வருவதாக சாடினார்.

அதிமுக-வை அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டதாக கூறினார். அதிமுக-வின் தேர்தல் அறிக்கைக்கும், முதல்வர் பழனிசாமியின் பிரச்சார கருத்துகளுக்கும் இடையே நிறைய முரண்பாடு நிலவுவதாக கூறினார். ஆளில்லாத ஆளுங்கட்சியாக திகழ்கிறது அதிமுக. முதல்வர் பழனிசாமி தனியாக வேனில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது திமுக ஆட்சி தான் என்றார். மத்தியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டிய தேர்தல் இது என்பதை நினைவில் கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

விலைவாசி குறைந்துள்ளதாக பிரசாரத்தில் பேசிய முதல்வர், தேர்தல் அறிக்கையில் விலைவாசி உயர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல தங்களை மிக கேவலமாக விமர்சித்த ராமதாசுடன் சேர்ந்து தான் தற்போது கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்எடப்பாடி. மேலும் ஜெயலலிதாவை திட்டி தீர்த்து புத்தகம் வெளியிட்டவர் தானே ராமதாஸ் என்றார். மோடியா இந்த லேடியா என கேட்டவர் ஜெயலலிதா. ஆனால் அதை மறந்துவிட்டு கட்சியை மோடியிடமும், அமித்ஷாவிடமும் அடகு வைத்து விட்டு முதல்வர் நிற்பதாக சாடினார். பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைக்கு செல்லாமல் தங்களை காப்பாற்றி கொள்ளவே அதிமுக தலைவர்கள், பாரதிய ஜனதாவின் மிரட்டலுக்கு பயந்து கூட்டணி வைத்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MGR ,J ,Palanisamy ,Modi ,Amit Shah ,Stalin , Stalin, election campaign, Jayalalitha
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...