காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த சி.புத்தூர் கிராமத்தில் கோமாரி நோய் தாக்குதலால் ஆடு, மாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தும் மருத்துவர்கள் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சி.புத்தூர் கிராம மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். மேலும், கால்நடை வளர்ப்பதையும் பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மாடுகளும், 100க்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகின்றனர்.
கடந்த மாதம் 29ம் தேதி இப்பகுதியில் இருக்கும் பாராகுளத்தால் கிராமமக்களுக்கும், கால்நடைகளுக்கும் மர்மகாய்ச்சல் பரவியது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து அடுத்த நாளே நடமாடும் மருத்துவ குழுவினர் சி.புத்தூருக்கு வந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை அளித்து சென்றனர்.
ஆனால் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவில்லை. 
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 30 மாடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. கால் பாதத்தில் இருக்கும் குளம்பு கழன்று விழுந்துள்ளது. ஒரு ஆடு, ஒரு கன்றுக்குட்டியும் இதற்கு பலியாகியுள்ளது. மூக்கு மற்றும் பாதங்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டு புழுக்கள் உற்பத்தியாகி மாடுகள் மற்றும் இளங்கன்றுகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடாத காரணத்தால் கோமாரி நோய் அதிகளவில் தாக்கியுள்ளது என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி கூறுகையில், தடுப்பூசி போட சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் கால்நடைகளை கொண்டாயிருப்பு கிராமத்தில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் அங்கு மருத்துவர் இருக்கமாட்டார். அவர் எப்போது வருவார் என்று யாருக்கும் தெரியாது. மருத்துவ உதவியாளர் தான் கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பார். கடந்த மாதம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் சிறுகாட்டூரில் நடந்தது. இந்த தகவலையும் சி.புத்தூர் மக்களிடம் தெரிவிக்கவில்லை. இதனால் தடுப்பூசி போட முடியவில்லை. கிராமத்தில் உள்ள அதிகப்படியான மாடு, ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி சாகும் நிலையில் இருக்கிறது. இதுகுறித்து கால்நடை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தால், மாடுகளை மருத்துவமனைக்கு அழைத்து வர கூறுகின்றனர். 
கோமாரி நோய் தாக்கி நடக்க முடியாத நிலையில் இருக்கும் மாடுகளை 4 கிலோ மீட்டர் தூரம் எப்படி நடத்தி அழைத்து செல்ல முடியும். கால்நடைகள் படும் துன்பத்தை கண்டு எங்களுக்கு அன்றாடம் உணவு, தண்ணீர்கூட சாப்பிட முடியவில்லை என கண்ணீர் மல்க கூறினார்.ஒரு சிலர் தனியார் மருத்துவர்களை வரவழைத்து ரூ500 செலுத்தி ஊசிபோட்டும் எந்த பலனும் இல்லை என்றும் கூறினர்.
மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சி.புத்தூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமை நடத்தி கோமாரி நோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது ஒரு மாடு அல்லது ஆடு நோயால் இறந்தால் அனைத்து குடும்பங்களின் குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்டவைகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுவோம் என்று கிராம மக்கள் கூறினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
