×

கிருஷ்ணகிரி சாலையோரங்களில் விவசாய உபகரணங்கள் தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சாலையோரங்களில் விவசாய உபகரணங்கள் தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் பெரும்பாலானோர் விவசாய தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் பயிர்களை அறுவடை செய்யவும், பிற பயன்பாட்டிற்கும் கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, ஒரப்பம், பர்கூர், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி போன்ற இடங்களில் நடைபெறும் வாரச்சந்தைக்கு சென்று, தங்களுக்கு தேவையான இரும்பு கருவிகளை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வடமாநில தொழிலாளர்கள் கிருஷ்ணகிரியில் பெங்களூர் சாலையில் சென்ட்ரல் தியேட்டர் எதிரில் முகாமிட்டு, விவசாய இரும்பு கருவிகளான அரிவாள், வெட்டுகத்தி, கோடாரி, கடப்பாரை உள்ளிட்டவற்றை அங்கேயே விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப தயாரித்து கொடுக்கின்றனர். இதனால் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து வடமாநில தொழிலாளர் செய்து கொடுக்கும் இரும்பு கருவிகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவாட் மாவட்டம் மனோர்தானா கிராமத்தை சேர்ந்த நாங்கள், அங்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதால் ஊர் ஊராக சென்று விவசாய கருவிகளை தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

விவசாய கருவிகள் புழக்கத்தில் குறைந்து, இயந்திரங்களின் வருகை அதிகரித்துவிட்டது. மேலும் விளைச்சல் நிலங்களும் குறைந்து போனதால் இரும்பினால் ஆன விவசாய கருவிகளை யாரும் வாங்குவதில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த நாங்கள் தற்போது இங்கு முகாமிட்டு, பொருட்களை தயாரித்து விற்று வருகிறோம். நாங்களே தயாரித்து விற்பனை செய்வதால் குறைந்த விலைக்கு கொடுக்க முடிகிறது. எங்கள் தொழிலுக்கான மூலப்பொருளான இரும்பு பட்டைகளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழைய இரும்பு வியாபாரிகளிம் பெற்று கொள்கிறோம். இதன் மூலம் அரிவாள், வெட்டுக்கத்தி, சுத்தியல், கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, களைக்கொத்தி, கதிர் அறுக்கும் அரிவாள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம். இங்கு வியாபாரம் குறைத் தொடங்கினால் வேறு இடத்திற்கு நாங்கள் சென்றுவிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் கூறுகையில், வடமாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விவசாய கருவிகள் ஆரம்பத்தில் தரமாக தெரிந்தாலும், நாளடைவில் உடைந்து விரிசல் ஏற்படுகிறது. உள்ளூர் பட்டறை தொழிலாளர்கள் போதிய வருமானம் இல்லாமல் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். இதனால் வடமாநில தொழிலாளர்களிடம் வாங்கும் பொருட்களில் விரிசல் ஏற்பட்டால் அதை சரிசெய்து கொடுக்க உள்ளூர் தொழிலாளர்கள் முன்வருவதில்லை. இதனால் நாங்கள் அதை பழைய இரும்பு கடைக்கு விற்றுவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் நல்ல தரமான பொருட்களா என பார்த்து வாங்க வேண்டும், என்றனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Western ,roads ,Krishnagiri , Krishnagiri, Agricultural Equipment, Northwestern Workers
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...