×

மறைந்த என்.டி.திவாரியின் உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி மன்மோகன் அஞ்சலி

புதுடெல்லி: உ.பி, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர், என்.டி.திவாரி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். டெல்லியில் அவரது உடலுக்கு ஐ.மு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வராக பதவி வகித்தவர் என்.டி.திவாரி(92). ஆந்திர மாநில கவர்னராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட என்.டி.திவாரி, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார். என்.டி.திவாரிக்கு நேற்றுமுன்தினம் பிறந்தநாள். அன்றே அவர் காலமானார்.  

டெல்லியில் அவரது உடலுக்கு சோனியா காந்தி, ராகுல், மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் டெல்லியிலில் இருந்து இன்று உ.பி கொண்டுவரப்பட்டு, லக்னோவில் உள்ள விதான் பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. திவாரியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “என்.டி.திவாரியின் மறைவு செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். சிறந்த தலைவரான திவாரி, தனது நிர்வாகத்திறனால் அறியப்பட்டவர். தொழிற்துறை மேம்பாடு மற்றும் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sonia Gandhi ,Manmohan ,ND Tiwari , Sonia Gandhi, Manmohan, ND Tiwari's body
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!