×

பயங்கர ஆயுதங்களுடன் காரில் உலா வந்தபோது சிக்கினர் கைதான வாலிபர்களை விடுவிக்கக்கோரி அதிமுக நிர்வாகி போலீசாருடன் ரகளை: டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பரபரப்பு

சென்னை: காரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து கைதான 3 வாலிபர்களை உடனே விடுவிக்கக்கோரி அதிமுக நிர்வாகி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷ் மற்றும் காவலர் வருண்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கீழ்ப்பாக்கம் கல்லறை சாலை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த உதவி ஆய்வாளர் சுபாஷ் மற்றும் காவலர் வருண்குமார் காரின் அருகே சென்று பார்த்தனர். காரில் 3 வாலிபர்கள் அமர்ந்து இருந்தனர். நள்ளிரவில் இங்கு காரை நிறுத்தக்கூடாது என்று கூறி போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.இதனால் சந்தேகப்பட்டு காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, காரில் கத்தி மற்றும் 2 இரும்பு ராடுகள் இருந்தன. இதையடுத்து, 3 வாலிபர்களையும் காருடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், துணிக்கடையில் வேலை செய்யும் செனாய் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (18), கால் டாக்சி ஓட்டுனர் கார்த்திக் (24), பெயின்டராக வேலை செய்து வரும் சார்லஸ் (22) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் மூன்று பேரையும் போலீசார் கைது ெசய்தனர்.

அவர்களிடம் இருந்து கார் மற்றும் கத்தி, இரும்பு ராடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேர் கைது செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த 102வது வட்ட அதிமுக செயலாளர் வசந்தகுமார் காவல் நிலையத்திற்கு வந்து 3 பேரையும் உடனே விடுதலை ெசய்ய கோரி போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதற்கு போலீசார் மூன்று பேரையும் விட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த வசந்தகுமார் போலீசாரை மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men ,AIADMK , To get rid ,young men,trapped ,car with terrific weapon,AIADMK police:
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்