×

முத்துநாயக்கன்பட்டியில் செம்பு, பித்தளை பொருட்கள் தயாரிக்கும் தொழில் மந்தம்

ஓமலூர்: ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் செம்பு, பித்தளை பாத்திரங்கள் மற்றும் சுவாமி சிலை தயாரிப்பு தொழில் நலிவடைந்ததால், வருவாயின்றி தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக செப்பு மற்றும் பித்தளை உள்ளிட்ட உலோகங்களில் சுவாமி சிலைகள், ஆலயமணி, பூஜை பாத்திரங்கள், கலசங்கள், தீர்த்த குடங்கள் உள்ளிட்டவற்றையும், வீட்டிற்கு தேவையான குடம், அண்டா, சொம்பு, குவளை உள்ளிட்ட பாத்திரங்களையும் செய்து வருகின்றனர். பித்தளை மற்றும் செம்பு பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாலும், நவீனமயத்தின் காரணமாகவும், பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாத்திரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் செம்பு மற்றும் பித்தளை பாத்திரம் செய்யும் தொழில் நலிவடைந்து வருகிறது. முத்துநாயக்கன்பட்டியில் தயாரிக்கப்படும் செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் விற்பனை குறைவாகவே உள்ளது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களின் வாரிசுகள் இத்தொழிலை விட்டு விட்டு, மாற்று தொழிலை நாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த 3 ஆண்டுகளாக பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்கள் விற்பனை சரிந்துள்ளது.

இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி, ஒரு நாளைக்கு காலையில் இருந்து மாலை வரை இரண்டு குடங்கள் மட்டுமே செய்ய முடியும். எந்தவித உபகரணமும் இல்லாமல் கைகளிலேயே செய்வதால், ஒரு நாளைக்கு 300 முதல் 400 வரை தான் வருமானம் கிடைக்கிறது. அது போதுமானதாக இல்லை. எனவே, இத்தொழிலை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muthuyanickenpatti, copper, industry
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...