×

கெடுபிடி விதிமுறைகளால் மருந்து பொருட்கள் ஏற்றுமதி 3 சதவீதம் மட்டுமே உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து மருந்து பொருட்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதி தொடர்பான விவரங்களை வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் 2016-17 நிதியாண்டில் மருந்து ஏற்றுமதி 16.7 சதவீதம் சரிந்து 1,670 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் முன்னேற்றம் அடைந்ததாக கருதப்பட்டாலும் 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது 2017-18 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து மருந்து பொருட்கள் ஏற்றுமதி 1,730 கோடி டாலராக உள்ளது. இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 25 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. இதில், இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இதுதவிர, தென்னாப்ரிக்கா, ரஷ்யா, நைஜீரியா, பிரேசில் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு முறை விதிகளால் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் விதிகள் இந்திய மருந்து ஏற்றுமதிக்கு முக்கிய தடைக்கல்லாக அமைந்து விட்டது. இதை தொடர்ந்து, மாற்றி வழியாக ஜப்பான் மற்றும் சீனாவுக்கு மருந்து ஏற்றுமதி செய்வதற்கான வழி வகைகளை மத்திய அரசு ஆராய்ந்தது. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் மருந்து துறையின் பங்களிப்பு 6 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதி துறைகளில் முதல் 5 இடங்களில் ஒன்றாக மருந்து துறை விளங்குகிறது. ஜெனரிக் மருந்துகளை பொருத்தவரை 75 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன. எண்ணிக்கை மற்றும் மதிப்பு அடிப்படையில் 20 சதவீத ஜெனரிக் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 55 சதவீத மருந்துகள் விதிமுறைகள் கெடுபிடியாக உள்ள நாடுகளுக்கு செல்கின்றன. விதிகள் மட்டுமின்றி சர்வதே சந்தையில் மருந்து விலை மற்றும் ரூபாய் மதிப்பிலான திடீர் ஏற்ற இறக்கங்களும் ஏற்றுமதியை பாதித்துள்ளதாக மருந்து துறையினர் தெரிவிக்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pharmaceutical goods, exports, 3 percent, rise
× RELATED 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர...