தேனி: பிளாஸ்டிக் கூடைகள் வரவால் மூங்கில் கூடை உற்பத்தி பாதிக்கப்பட்டு விட்டதாக ஈத்தை மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
மூங்கில் கூடைகளின் பயன்பாடு பண்டைய காலம் தொட்டு, தற்போது வரை நீடிக்கிறது. மூங்கில் கூடை என்பது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புவரை வீடுகளில் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. அரிசி, பருப்பு உள்ளிட்ட பலசரக்கு மளிகை பொருள்களை சேமிப்பது, அழுக்குத் துணிகளை ஒதுக்கி வைப்பது, கோழி வளர்க்க, காய்கறி தூக்க என அன்றாட வாழ்க்கையின் அங்கமாக திகழ்ந்து மூங்கில் கூடைகள்.
தேனி நகரானது விவசாயம் சார்ந்த வணிக நகரமாக உள்ளதால், தேனியில் ஈத்தை மூங்கிலானாலான கூடைகள் முடையும் தொழில் அதிகம் இருந்தது. இத்தொழிலில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் கோழி பஞ்சாரம், தக்காளி கூடை, சாப்பாடு கூடை, மட்டை பஞ்சாரம் என பல்வேறு உபயோகத்திற்கான கூடைகள் முடைந்து விற்பனை செய்யப்பட்டது. மேலும், தேனியில் பருத்தியை உடைத்து பஞ்சாக பிரிக்கும் ஜின்னிங் பேக்டரிகள் ஏராளமாக இருந்தன. அப்போது பருத்தி சுமக்க கூடைகள் தேவை அதிகம் இருந்தது. ஆனால் தற்போது, தேனியில் ஜின்னிங் பேக்டரிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. மேலும் கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பும் குறைந்து விட்டது. காய்கறிகள் சுமக்க பிளாஸ்டிக் கூடை வரத்தும் அதிகரித்துவிட்டது. இதனால் மூங்கில் கூடை பயன்பாடு பெருமளவில் குறைந்து போய்விட்டது.
இதுகுறித்து தேனியில் ஈத்தை மூங்கில் கூடை முடையும் தொழிலாளி செல்வராஜ் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் பிளாஸ்டிக் கூடைகளின் பயன்பாடு இல்லை. இதனால் எங்களிடம் கூடைகள் கேட்டு ஆர்டர் குவியும். தற்போது பிளாஸ்டிக் வரத்து அதிகரித்து விட்டதால் மூங்கில் கூடைக்கான கிராக்கி குறைந்து விட்டது. கேரளாவில் இருந்து ஈத்தை மூங்கில் மரங்கள் வாங்கி வந்து அதனை பக்குவப்படுத்தி கிழித்து அதில் இருந்து மூங்கில் கூடைகள் முடையப்படுகிறது. ஒரு நாளைக்கு அதிக பட்சம் 5 கூடைகள் மட்டும் முடையப்படும். ஒரு கூடை ரூ.200 முதல் 500 வரை விற்கப்படுகிறது. தற்போது தேவை குறைந்து போனதால், இத்தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது என்றார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
