×

சேலம், தர்மபுரி உள்பட 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு நடவடிக்கை: விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி அதிகாரிகள் தீவிரம்

சென்னை: பசுமைவழிச்சாலை திட்டத்திற்காக  5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு  செய்துள்ளது.  சென்னையிலிருந்து சேலத்துக்கு செல்லும் நேரத்தை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா  திட்டத்தின்கீழ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சென்னையையும் சேலத்தையும் இணைக்கும் 277.3 கிலோ மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலை  அமைக்கப்பட உள்ளது.இதற்காக  திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது.  சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையாக அமைக்கப்படும் இந்த பசுமை வழிச்சாலையில் மணிக்கு  120 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களில் செல்ல முடியும்.
இந்த சாலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 159  கிராமங்களின் இடையே அமைக்கப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 179 மற்றும் 179 பி என பெயரிடப்பட்டுள்ள இந்த சாலையை அமைப்பதற்காக  இந்த 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பாணையின் அடிப்படையில் சேத்துப்பட்டு, செங்கம், வந்தவாசி, செய்யாறு, போளூர், திருவண்ணாமலை தாலுகாக்களில்  உள்ள 7,237 விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட  உள்ள பசுமை வழிச்சாலை திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  யாருக்கு தேவை இந்த சாலை: சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்வதால் யாருக்கு பயன் என்றும் சிலருக்காக விவசாய நிலங்களை அழிப்பதா என்றும்  நிலத்திற்கு சொந்தமான விவசாய மக்களும், சாலை செல்லும் வழியில் உள்ள கிராம மக்களும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகிறார்கள்.

அதே நேரத்தில், கையகப்படுத்தும் நிலத்திற்கு நிலத்தின் விலையிலிருந்து 2 முதல் 3 மடங்கு வரை இழப்பீடு தர நெடுஞ்சாலை ஆணையம் தயாராக  உள்ளதாகவும் இதற்காக, தனியாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளுக்கான நில அளவை பணிகளை மாவட்ட வருவாய்துறை  அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட  பல்வேறுவித போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.அலுமினியம், சிலிகான், கண்ணாடி, செராமிக், சிமென்ட் போன்ற தொழிற்சாலைகளை அமைக்க இந்த பசுமை வழிச்சாலை முக்கிய பங்கு வகிக்கும்  என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைத்து, விளை நிலங்களை பாழ்படுத்தும் இந்த திட்டம்  தேவையில்லை என்று விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...