×

நாட்டில் 11 மாநிலங்களில் ஆய்வு பருத்தி சாகுபடியில் தமிழகம் பின்னடைவு

கோவை: நாட்டில் பருத்தி விளைவிக்கப்படும் 11 மாநிலங்களில் பருத்தி சாகுபடி பரப்பு, ஆண்டு உற்பத்தி, மகசூல் ஆகியவற்றில் தமிழகம் தொடர்ந்து  கடைசி இடத்திலேயே உள்ளது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.     நாட்டில் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்கள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. பருத்தி சாகுபடி காலம் 4 மாதம். ஆண்டுதோறும் தமிழகத்தில்  ஒரு முறையும், பிற மாநிலங்களில் 2 முறையும் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த அக்டோபர் முதல் வரும் செப்டம்பர் வரையிலான பருத்தி  சீசனில் விளைவிக்கப்படும் மாநிலங்களில் அவற்றின் சாகுபடி பரப்பு, ஆண்டு உற்பத்தி மற்றும் மகசூல் ஆகியவை குறித்து கடந்த வாரம் இறுதியில்  மத்திய அரசின் பருத்தி ஆலோசனை குழு ஆய்வு நடத்தியது.

 பின்னர் அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடப்பு பருத்தி சீசனில் 11 மாநிலங்களின் பருத்தி சாகுபடி பரப்பளவு (லட்சம் ஹெக்டேர் அளவில்) விபரம் வருமாறு: மகாராஷ்டிரா 42.07, குஜராத் 26.23,  தெலங்கானா 18.97,  ஹரியானா 6.69, ஆந்திரா 6.44, மத்தியபிரதேசம் 6.03, ராஜஸ்தான் 5.84, கர்நாடகா 5.46, பஞ்சாப் 2.91, தமிழ்நாடு 1.85, ஒடிசா 1.45.  11 மாநிலங்களின் நடப்பாண்டு உற்பத்தி (ஒரு பேல் 170 கிலோ வீதம் லட்சம் பேல் அளவில்) விபரம்: குஜராத் 104 , மகாராஷ்டிரா 85, தெலங்கானா 55,  ஹரியானா 22.50, ராஜஸ்தான் 22, மத்தியபிரதேஷ் 20.50, ஆந்திரா 20.50, கர்நாடகா 18, பஞ்சாப் 11.50, தமிழ்நாடு 5.50, ஒடிசா 3.50. 11 மாநிலங்களில் மகசூல் ஒரு ஹெக்டேருக்கு (கிலோ கணக்கில்) : குஜராத் 674, பஞ்சாப் 672, ஹரியானா 572, ராஜஸ்தான் 640, மத்தியபிரதேசம் 578,  கர்நாடகா 560, ஆந்திரா 541, தமிழ்நாடு 505, தெலங்கானா 493, ஒடிசா 410, மகாராஷ்டிரா 343. இதில் தமிழகம் 8வது இடத்தில் உள்ளது. இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஜவுளித்தொழில் துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் 2 ஆயிரம் எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர, பெரிய நூற்பாலைகள் உள்ளன. நாட்டின் நூல் உற்பத்தியில் 55 சதவீதத்திற்கு மேல்  தமிழகத்தில் உற்பத்தியாகிறது. தமிழக நூற்பாலைகளின் நூல் உற்பத்திக்கு தேவையான பருத்தியின் தேவை ஆண்டுக்கு 125 லட்சம் பேல். ஆனால், தமிழகத்தில் 5 லட்சம் பேல்களே  உற்பத்தியாகிறது. 120 லட்சம் பேல் குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. தமிழக நூற்பைாலகளுக்கு தேவையான  பருத்தியில் 5 சதவீதம் கூட தமிழகத்தில் விளைவிப்பதில்லை. இதனால் தமிழகத்தின் பருத்தி தேவைக்கு பிற மாநிலங்களையே சார்ந்திருக்க  வேண்டிய நிலை உள்ளது. நாட்டின் பருத்தி சாகுபடி பரப்பு, உற்பத்தி, மகசூலில் தமிழகம் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. தமிழகம்  பருத்தியில் தன்னிறைவு பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜவுளித்துறையினர் கூறுகின்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...