×

சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் செய்யூரில் 2வது விமான நிலையம்: 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேர்வு

சென்னை: சென்னை விமான நிலைய நெரிசலை தவிர்க்க இரண்டாவதாக ஒரு விமான நிலையத்தை அமைக்க செய்யூர் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வரும் விமான நிலையத்தில் தற்போது விமான சேவை அதிகரித்து வருவதாலும், சரக்குகளை கையாள்வது மற்றும் வெளியில் கொண்டு செல்வது போன்ற செயல்களில் கால தாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து இரண்டாவதாக ஒரு விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதையடுத்து மீனம்பாக்கம் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல், கவுல்பஜார் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தி விட்டு அங்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கடந்த 2005ம் ஆண்டு கைவிடப்பட்டது.

அதற்கு பிறகு மதுராந்தகம் மற்றும் உத்தரமேரூர் பகுதிகளை உள்ளடக்கிய 1500 ஏக்கர் நிலத்தை விமான நிலைய அதிகாரிகள் தேர்வு செய்தனர். ஆனால் அந்த இடமும் கைவிடப்பட்டது. பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்முடிப்பூண்டியில் 1250 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் தாலுகாவில் 2000 ஏக்கர் நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். அதில் 3 பெரிய கிராமங்கள் மற்றும் இரண்டு குக்கிராமங்கள் அடங்கும். அறப்பேடு, அயங்குன்னம் ஆகிய கிராமங்கள் பெயர்கள் மட்டும் தற்ேபாது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இங்கு விமான நிலையம் அமையும் பட்சத்தில் செய்யூரில் இருந்து சென்னை நகருக்கு பயண நேரம் 2 மணி நேரமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சர்வே எண்கள் படி மேற்கண்ட 2000 ஏக்கர் நிலத்தை அளவிடுவதற்கான எம்எம்பி புத்தகம் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் ஆர்ஜிதம் செய்ய வேண்டிய இடத்தை சரியாக அடையாளம் காணமுடியும். தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனி நபர் பட்டா இடங்களும், அரசு நிலமும் கலந்து வருகின்றன. செய்யூர் பகுதி ஏற்கெனவே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளை ஒட்டியுள்ள பகுதி என்பதால் உடனடியாக அந்த சாலைகளின் வழியாக சென்னைக்கு வந்து விட முடியும்.

 ஆனால் தூரம்தான் அதிகம். அதனால் புதியதாக அமைய உள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பிரத்யேகமாக ஒரு சாலை அமைத்தால் தான் விமானப் பயணிகள் தாமதம் இல்லாமல் சென்னைக்கு வந்து போக முடியும்.  இந்நிலையில்,  சர்வதேச விமான சேவைகளை செய்யூரில் அமைய இருக்கும் புதிய விமான நிலையத்துக்கு மாற்ற இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். பெங்களூரு விமான நிலையத்தை எடுத்துக் கொண்டால் அது நகர்ப்பகுதியில் இருந்து 35 கிமீ தொலைவிலும், ஐதராபாத் விமான நிலையம் நகர்ப்பகுதியில் இருந்து 27 கிமீ தொலைவிலும் இருக்கிறது.

 ஆனால் இந்த செய்யூர் விமான நிலையம் சுமார் 100 கிமீ தொலைவில் அமைவதால் சென்று வருவது  சிரமம். அதனால் கிழக்கு கடற்களை சாலை, மற்றும் ஜிஎஸ்டி சாலைகளை மேலும் விரிவு படுத்த தமிழக அரசு உதவினால் நன்றாக இருக்கும். இந்நிலையில், செய்யூர் விமான நிலையம் அமையும் இடத்தை சுற்றியுள்ள பகுதியை ஒருங்கிணைத்து அங்கு ஒரு ‘‘ஏரோ சிட்டி’’ உருவாக்க விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிடுகிறது. அது முடிந்தால் ஒரு ஆண்டுக்கு 4 கோடி பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து போவார்கள் என்று கணக்கிட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய...