×

அடுத்த 48 மணி நேரத்தில் அரபி கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தென்மேற்கு பருவமழை அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தொடங்கியுள்ளதால் அடுத்த 48 மணி நேரத்தில் அரபி கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: தென்மேற்கு பருவமழை அந்தமான் மற்றும் நிக்கோபார்  தீவுகளில்  இன்று முதல் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அடுத்து வரும் 48மணி நேரத்தில்  தென்மேற்கு பருவ மழையானது தெற்கு அரபி கடலில் சில பகுதிகளிலும், குமரி கடல், மாலத்தீவு பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடலில் சில பகுதிகளில்  தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதையோட்டி கேரள, கர்நாடக, குமரி  கடலோர மற்றும் லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால்  மீனவர்கள் வருகிற 30ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.  மேலும், தமிழக பகுதிகளில் வழி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு கூறினார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...