கொச்சி: மலையாள நடிகரும், இயக்குனருமான ஜோஜு ஜார்ஜ், தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’, ‘தக் லைஃப்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஷாஜி கைலாஷ் இயக்கிய ‘வரவு’ என்ற மலையாள படம் அதிக வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் உரையாடிய ஜோஜு ஜார்ஜ், ‘சிலர் அதிக பணம் கொடுத்து தங்களை பற்றிய நல்ல செய்திகளையும், மற்றவர்களை பற்றிய எதிர்மறையான செய்திகளையும் பரப்புகின்றனர்.
எனக்கு எதிராகவும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடக்கின்றன. ஒரு முன்னணி நடிகரும், அவரது மனைவியும் இதன் பின்னணியில் இருக்கின்றனர். மலையாள படவுலகில் பணம் கொடுத்து பல பிரபலங்கள் தங்களை பற்றி பிரசாரம் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக தளங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை மாற்றும் முயற்சிகளும் நடக்கின்றன.
உண்மையை விட, உருவாக்கப்பட்ட பொய் பிம்பங்களே தற்போது அதிகமாக பேசப்படுகின்றன. நான் நடித்த ‘வரவு’ என்ற படம் வெளியானது முதல், அதற்கு எதிராகவும் திட்டமிடப்பட்ட எதிர்மறை பிரசாரங்கள் நடந்து வருகின்றன’ என்றார். ஜோஜூ ஜார்ஜின் கருத்து மலையாள படவுலகில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
