லாஸ்ஏஞ்சல்ஸ்: 40 வினாடிகள் ஓடும் வீடியோவில் வெறும் 5 வார்த்தைகள் பேசிய கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு தரப்பட்ட சம்பளம் பேசுபொருளாக மாறியுள்ளது. டாம் ஹாலண்ட், சென்டயா, ஜேக்கப் பேட்டலான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்பைடர் மேன் – ப்ரண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் புரமோ வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, வைரலாகிவிட்டது. காரணம், இதில் ஸ்பைடர்மேன் நடிகர் டாம் ஹாலண்ட் உடன் இணைந்து கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியும் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 40 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், 5 வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார் மெஸ்ஸி. அவருக்கு சம்பளமாக 15 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.143 கோடி. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
