புதுடெல்லி: 134 திரைப்படங்களின் பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்தவும், உரிமம் வழங்கவும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. கடந்த 1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களின் பாடல்களுக்கான நிரந்தர காப்புரிமைகளை ‘சரிகாமா இந்தியா லிமிடெட்’ நிறுவனத்திற்கு சட்டப்பூர்வமாக மாற்றிக் கொடுத்துள்ளனர்.
இந்திய காப்புரிமைச் சட்டத்தின் படி, திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட இசைப் படைப்புகளுக்கு அதன் தயாரிப்பாளர்களே முதன்மையான காப்புரிமை உரிமையாளர்கள் ஆவர். மேலும், கடந்த 1977ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ‘ஐ.பி.ஆர்.எஸ். எதிர் ஈஸ்டர்ன் இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன்’ வழக்கில் வழங்கிய தீர்ப்பில், தயாரிப்பாளர்களுடன் தனியான மாற்று ஒப்பந்தங்கள் இல்லாத பட்சத்தில், இசையமைப்பாளர்கள் பாடல்களுக்கு தனிப்பட்ட முறையில் முழு உரிமை கோர முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பூர்வ பின்னணியில், இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவரது கோரிக்கையை நிராகரித்து இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், ‘அன்னக்கிளி’, ‘16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’, ‘ராஜ பார்வை’ மற்றும் ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ, பிறருக்கு உரிமம் வழங்கவோ அல்லது அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவன் போன்ற இணையதள டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பவோ இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக, கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட அவரது மிக முக்கிய இசைத் தொகுப்புகளை டிஜிட்டல் தளங்களில் விநியோகிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
