மும்பை: பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’, ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2ம் பாகம் ஆகியவற்றில் இருந்து தீபிகா படுகோன் திடீரென்று விலகியதை தொடர்ந்து, திரைப்பட படப்பிடிப்பில் நடிகர்களுக்கான 8 மணி நேர வேலை குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், சோனாக்ஷி சின்ஹாவுடன் ‘சிஸ்டம்’ என்ற வெப்தொடரில் நடித்துள்ள ஜோதிகா கூறுகையில், ‘எனது முதல் இந்தி படம் வணிகரீதியாக வெற்றிபெறாததால், பாலிவுட் எனக்கான கதவுகளை மூடிவிட்டது.
எனது முதல் தமிழ் படம் சரியாக ஓடாதபோது கூட, எனது உழைப்பை மதித்து புதுப்பட வாய்ப்புகள் வழங்கினர். இதுவே பாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையே நான் பார்த்த முக்கிய வித்தியாசம். எனினும், இப்போது பாலிவுட்டில் 40 வயதை கடந்த பெண்களுக்காக எழுதப்பட்டு வரும் கதைகள் ஆரோக்கியமான மாற்றத்தை காட்டுகின்றன. தென்னிந்திய படவுலகில் வேலை நேரம் மிகவும் சரியாக திட்டமிடப்படுகிறது. இங்கு 99 சதவீத படங்களின் படப்பிடிப்பு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துவிடும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அல்லது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே படப்பிடிப்பு நடக்கும்’ என்றார்.
இதையடுத்து சோனாக்ஷி சின்ஹா பேசுகையில், ‘நாம் ஏன் இதை இன்னும் ஒரு கேள்வியாகவே பார்க்கிறோம்? இங்கு பல முன்னணி ஆண் நடிகர்கள், 8 மணி நேரத்துக்கு மேல் ஒரு நிமிடம் கூட பணியாற்றுவது இல்லை. அவர்களின் ஷாட் முடிந்ததோ இல்லையோ, அவர்கள் தங்கள் காரில் ஏறி கிளம்பிவிடுகின்றனர். அவர்களை யாரும் கேள்வி கேட்பது இல்லை. சினிமாவில் குறிப்பிட்ட நிலையை அடைந்து, இவ்வளவு காலம் உழைத்த ஒரு நபர், 8 மணி நேர ஷிப்ட் கேட்பதில் எந்த தவறும் இல்லை’ என்றார். பிறகு பேசிய ஜோதிகா, ‘குறிப்பாக, தாயாக இருக்கும் பெண்களுக்கு இந்த வேலை நேர தளர்வு மிகவும் அவசியமானது’ என்றார்.

