
மும்பை: நடிகைகள் தொடர்ந்து லைம்லைட்டில் இருக்க சோஷியல் மீடியாவைத்தான் பாலமாக கருதுகிறார்கள். அதன் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். ஆனால் பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி, சோஷியல் மீடியாவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். சில வருடங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தார். அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி இந்த வழக்கில் தீவிரமாக விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு போதை மருந்து பயன்படுத்திய வழக்கிலும் ரியா சிக்கினார். இந்த வழக்குகளிலிருந்து மீண்டு வந்த அவர், நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
`
இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், ‘‘சமீப காலமாக, நான் என்னையே கொஞ்சம் இழக்கிறேன். இடைவிடாத இரைச்சல், இணையத்தில் உலவுதல், மற்றவர்களுடன் போட்டிப் போடுதல். இவை அனைத்தும் நான் எதிர்பார்த்ததை விட அதிக பாரமாக இருப்பதாக உணர்கிறேன். அந்தத் தருணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்காமல், நிகழ்காலத்தில் இருப்பதை நான் இழக்கிறேன். அதனால் சோஷியல் மீடியாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.

