பாலிவுட் முன்னணி ஹீரோ ஆமிர் கானின் ஆமிர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சுனில் பாண்டே இயக்கத்தில் ஆமிர் கான் மகன் ஜுனைத் கான் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி இந்தியில் அறிமுகமான ‘ஏக் தின்’ என்ற படம், கடந்த 1ம் தேதி திரைக்கு வந்தது. 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், கடந்த 2 வாரங்களில் ரூ.5 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வி அடைந்துள்ளது. ‘ஒன் டே’ என்ற தாய்லாந்து மொழி படத்தின் ரீமேக்காக இப்படம் உருவானது.
நேரடியாக ஆமிர் கான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியிருந்தாலும், அதற்குரிய பலன் கிடைக்கவில்லை. அவரது தயாரிப்பில் இதுபோல் ஒரு குறைந்த பட்ஜெட் படம் வெளியானதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தவிர, சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகம் தோல்வியுடன் தொடங்கியுள்ளதால், அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தற்போது ‘ராமாயணா’ என்ற 2 பாகங்கள் கொண்ட படத்தில் அவர் சீதை வேடத்தில் நடித்து வருகிறார்.
