வட சென்னையை மையப்படுத்திய ‘அரசன்’ என்ற படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி நடிக்கின்றனர். வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். அதேவேளையில், கென் கருணாஸ் நடிக்கும் ‘ராஜன் வகையறா’ என்ற வெப்தொடரின் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடித்த ‘வட சென்னை’ என்ற படத்தில் அமீர் நடித்திருந்த ‘ராஜன்’ என்ற கேரக்டரின் 15 முதல் 24 வயது வரையிலான வாழ்க்கையை இத்தொடர் சொல்கிறது. இளம் வயது ராஜனாக கென் கருணாஸ் நடிக்கிறார்.
ராஜன் கேரக்டர், கேரம் பிளேயராக சித்தரிக்கப்பட்டு இருக்கும். அதற்காக கென் கருணாஸ், ஒன்றரை வருடம் கேரம் விளையாட பயிற்சி பெற்றார். சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் வட சென்னையில் நடக்கும் கதை என்பதால், அப்படத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்குகளிலேயே ‘ராஜன் வகையறா’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ என்ற படத்தில் சிதம்பரம் கேரக்டரில் அசத்தியிருந்த கென் கருணாஸ், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் ராஜனாக நடிக்கிறார். அவர் எப்படி வட சென்னையின் அசைக்க முடியாத தலைவனாக மாறினார்? அவரது ஆரம்பகால அரசியல் மற்றும் அதிகார போராட்டங்கள் என்ன என்பதை இத்தொடர் விரிவாக பேசுகிறது. ‘வட சென்னை’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ கிஷோர் ஆகியோர், இதில் மீண்டும் அந்தந்த கேரக்டரில் நடிப்பார்கள் என்று தெரிகிறது.
