சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடியன்- டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரமுடன் ஹீரோயினாக ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா நடிக்கிறார். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாகர் சந்தேஷ் – ஜி. திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், ‘‘2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன். இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள். எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இந்த படத்திலும் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவே வருகிறேன். ஆர்த்தியும் ஃபிட்னஸ் மாடலாகவே நடிக்கிறார். இருவருக்குமான காதல்தான் கதை’’ என்றார்.
