×

சுஜாதாவுக்காக உருகிய ஏ.ஆர்.ரெஹானா

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார், மணிசர்மா உள்பட ஏராளமான இசை அமைப்பாளர்கள் இசையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர், சுஜாதா மோகன். கடந்த 50 வருடங்களாக பல்வேறு மொழிகளில் பாடி வரும் அவர், ‘இன்னிசைக்குயில்’ என்று அழைக்கப்படுகிறார். ‘காதல் ஓவியம்’ என்ற பாடலின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பாடகியாக அறிமுகமான அவர், ரஜினிகாந்த் மற்றும் தேவி நடித்த ‘ஜானி’ என்ற படத்தில் ‘ஒரு இனிய மனது’ என்ற இனிமையான பாடலை பாடியிருப்பார். இதை மகேந்திரன் இயக்கியிருந்தார். ‘ரோஜா’ என்ற படத்தில் ‘காதல் ரோஜாவே’, ‘புது வெள்ளை மழை’ ஆகிய பாடல்களை சுஜாதா மோகன் பாடியிருந்தார்.

கடந்த 1981ல் இசை அமைப்பாளர் கிருஷ்ண மோகனை அவர் காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஸ்வேதா மோகன் என்ற மகள் இருக்கிறார். அவரும் முன்னணி பாடகியாக இருக்கிறார். இந்நிலையில், விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய சுஜாதா மோகன், ‘கடந்த ஐந்து வருடங்களாகவே எந்த மேடையிலும் நான் பாடவில்லை. காரணம், எனக்கு தொண்டையில் ஒரு பிரச்னை இருக்கிறது. அதனால், என்னால் முன்பு போல் பாட முடியவில்லை’ என்றார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாடகி மற்றும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசுகையில், ‘எனது தாயார் இப்போது இருந்திருந்தால், சுஜாதாவுக்காக பிரேயர் செய்து கண்டிப்பாக சரிசெய்து இருப்பார். அவர்களுக்கு சுஜாதா மீது அவ்வளவு பாசம் இருந்தது. வீடியோவை பார்க்கும் டாக்டர்கள் யாராவது இருந்தால், தயவுசெய்து சுஜாதாவுக்கு உதவி செய்யுங்கள். அவருக்கு தொண்டையில் ஏதோ பிரச்னை இருப்பதாக சொல்கிறார். அந்த குரல் மீண்டும் வரவேண்டும். ஆமாம், அவரது பாடல்களை மீண்டும் கேட்க வேண்டும்’ என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : A.R. Rehana ,Sujatha ,Sujatha Mohan ,Ilayaraja ,A.R. Rahman ,Vidyasagar ,M.M. Keeravani ,S.A. Rajkumar ,Manisharma ,Rajinikanth ,devi ,
× RELATED மஞ்சு வாரியர் படத்துக்கு யு/ஏ