சென்னை: திரிஷா நடிப்பில் இருந்து விலகி சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் அளித்த பேட்டியில், ‘‘திரிஷா சினிமாவில் இருந்து விலகுவது உண்மைதான். சில தயாரிப்பாளர்கள் இந்த தகவலை எனக்கு உறுதி செய்தனர். அவர் கடந்த சில மாதங்களாக எந்தவொரு படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளவில்லை. புது படங்களிலும் கமிட் ஆகவில்லை. அவரை அணுகும் தயாரிப்பாளர்களிடம் நடிப்பில் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தி வருகிறார்’’ என்றார்.
இது தொடர்பாக சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது சூர்யாவுடன் ‘கருப்பு’ படத்தை முடித்துவிட்டார். மோகன்லாலுடன் ‘ராம்’ படத்தில் அவரது காட்சிகள் படமாக்கபட்டுவிட்டன. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ படப்பிடிப்பு மட்டும் பாக்கி உள்ளது. இதையடுத்து எந்த புது படத்திலும் திரிஷா கமிட் ஆகவில்லை. அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்தனர்.
