சென்னை: நடிக்காத படத்துக்காக தனக்கு அஜித் குமார் சம்பளம் கொடுத்ததாக நடிகர் சிங்கம்புலி தெரிவித்தார். இது குறித்து யூடியூபில் பேசியுள்ள சிங்கம்புலி கூறியது: ‘பில்லா 2’ படத்தில் அஜித் குமார் நடித்துக்கொண்டிருந்தார். அந்த படத்தில் உங்களுக்கு ஒரு வேடம் இருக்கிறது. நடிக்கிறீர்களா? என அஜித் கேட்டதும், ஓகே சொல்லிவிட்டேன். அப்போது படப்பிடிப்பு கோவாவில் நடந்துகொண்டிருந்தது. உடனே நான் கோவாவுக்கு புறப்பட்டுச் சென்றேன். தன்னுடனே அஜித் என்னை தங்க வைத்தார். அங்கு சென்று ஒரு வாரம் ஆகியும் எனக்கான காட்சி எதையும் படமாக்கவில்லை. இதை எப்படி அஜித்திடம் கேட்பது என்றும் தெரியவில்லை. இப்படியே ஒரு மாதம் போய்விட்டது.
அப்போதுதான் படத்தில் சில மாற்றம் காரணமாக எனது வேடம் அதில் இல்லை என்பது தெரிந்தது. அப்போது, அஜித் என்னிடம் இது சம்பந்தமாக வருத்தப்பட்டார். அவர் இருக்கும் ஸ்டார் அந்தஸ்துக்கு அவர் அதுபோல் என்னிடம் தனது வருத்தத்தை தெரிவித்திருக்கவே வேண்டாம். ஆனாலும் அவர் அதை செய்தார். அதன் பிறகு அவர் செய்த செயல்தான் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. 30 நாள் ஒரு படத்தில் நான் நடித்திருந்தால் எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பேனோ அதை அவர் எனக்கு தந்தார். நான்தான் நடிக்கவில்லையே, இது எதற்கு எனக் கேட்டேன்.
நீங்கள் சில பட வாய்ப்புகளை இழந்துவிட்டு, இந்த படத்தில் நடிக்க வந்திருக்கிறீர்கள். இதில் நடிக்க நான்தான் உங்களை அழைத்தேன். அதனால் அதற்கு ஈடாகவே இந்த பணத்தை வையுங்கள் என்றார். அஜித்தின் இந்த செயலால் நான் நெகிழ்ந்து போனேன்.

