தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் டாப்ஸி. அவர் தற்போது இந்தியில் திரைப்படங்கள், வெப் தொடர் என பிசியாக நடித்து வருகிறார். சினிமாவை தவிர்த்து தனது தனிப்பட்ட வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பார்க்க கூடியவர் டாப்ஸி. அவரது வெளிப்படையான கருத்துக்களால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவார். சமீபத்தில் நடிகையும், எம்பியுமான கங்கனா ரனாவத் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த டாப்ஸி அவரது வாழ்க்கை முறை குறித்து பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், ‘‘நாம் சம்பாதிக்கும் பணத்தை நன்றாக செலவு செய்யவே நான் விரும்புவேன். என் தாய், தந்தை, தங்கை ஆகிய 3 பேரும் எனக்கு முற்றிலும் எதிரான குணம் கொண்டவர்கள். அவர்கள் இறந்தப்பின் இந்த பணத்தை தங்களுடன் எடுத்து செல்பவர்களை போல் சிக்கனமாக செலவு செய்வார்கள்.இதில் பணத்தை செவழிக்க கூடாது, அதில் பணத்தை செலவழித்துவிட கூடாது, நமது பணம் மற்றவர்களுக்கு கிடைக்க கூடாது என்பது போல் அவர்கள் நடந்து கொள்வார்கள்.
ஆனால் நானோ, நாம் சம்பாதிக்கும் பணத்தை நமக்காகவே செலவழிக்க வேண்டும் என்று நினைப்பேன். நான் ஒரு ஏழையாக இறக்க தயாராக இருக்கிறேன். ஆனால் ஒருபோதும் ஏழையாக வாழமாட்டேன். இந்த எண்ணம் எனக்கு சிறுவயதில் இருந்தே தோன்றியது. அதன் காரணமாக தான் இன்ஜினியரிங் படிக்கும்போதே நான் மாடலிங் செய்ய தொடங்கினேன்.வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்பு ஏற்பட கூடாது என்ற சிந்தனையை வளர்த்து கொண்டேன். எந்த வேலையை செய்தால் எனக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் கிடைக்கிறதோ, அதையே செய்ய விரும்புகிறேன். வாழ்க்கை ஒருமுறை தான், அதனால் என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

