
திங்க் மியூசிக் தயாரிப்பில் சாய் அபயங்கர் இசை அமைத்து, ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பாடிய ‘பவழ மல்லி’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சாய் அபயங்கர் கூறுகையில், ‘எனக்கு இதுபோன்ற தளத்தை வழங்கிய சந்தோஷ், மகேஷுக்கு நன்றி. அவர்கள் எனது தொழிலை வடிவமைப்பதில் வலுவான தூண்களாக இருக்கின்றனர். நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம், வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. தனுஷ் நடிக்கும் ‘D 55’ என்ற படத்துக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்கிறேன். முதலில் அட்லீ என்னை சந்தித்தபோது, எனது தனி பாடலை இசைத்தேன். உடனே அவர், தனது அடுத்த படத்துக்கு இசை அமைக்க விருப்பமா என்று கேட்டார். அவர் என்மீது வைத்த நம்பிக்கைக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். ரசிகர்கள் எனது இசையை ரசிக்கின்றனர். அது எனக்கு எல்லாவற்றையும் அர்த்தப்படுத்துகிறது. தொடர்ந்து கடினமாக உழைத்து சிறந்த இசையை வழங்குவேன். வெற்றிபெற வேண்டும் என்றால், இன்னும் நாம் கடினமாக உழைக்க வேண்டும்.
45 விநாடிகள் ஸ்கிராட்ச் இசையை இசைத்து காட்டினேன். உடனே ‘பவழ மல்லி’ பாடலுக்கான வாய்ப்பு அமைந்தது. அழகாக உயிர்ப்பித்த தேஜோ பரத்வாஜ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இயக்குனர் கீர்த்திஸ்வரன், நடன இயக்குனர் ஷெரீஃப் ஆகியோருக்கு எனது நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி’ என்றார்.

