சென்னை: வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ என்ற படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதில் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கும் படம், சிம்புவின் 50வது படமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு அப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சிம்புவின் 51வது படமாக அறிவிக்கப்பட்ட அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படம், தொடர்ந்து அடுத்தக்கட்ட பணிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. முன்னதாக வெளியான அறிவிப்பு போஸ்டரில், ‘காட் ஆஃப் லவ்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. காதல் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக மிருணாள் தாகூரையும், இசை அமைப்பாளராக அனிருத்தையும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்றை அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ளார். சிம்பு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, படப்பிடிப்புக்கு தயாராகி வருவதாக சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். மேலும், சிம்பு விரைவில் படப்பிடிப்புக்கு வருவார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ‘ஓ மை கடவுளே’, ‘ஓரி தேவுடா’, ‘டிராகன்’ ஆகிய படங்களை அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருந்தார்.

