×

நடிக்க மறுத்த பாடகி ஸ்ரேயா கோஷல்

பல வருடங்களுக்கு முன்பு ஒரு டி.வி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பாடிய 16 வயது ஸ்ரேயா கோஷல், சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை அசத்தினார். இதையடுத்து ‘தேவதாஸ்’ என்ற இந்தி படத்தில் அவருக்கு ஐந்து பாடல்கள் பாடும் வாய்ப்பை சஞ்சய் லீலா பன்சாலி கொடுத்தார். இந்தியாவின் மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவராக புகழ்பெற்றுள்ள அவர், தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேசும்போது, ‘ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது, சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அள்ளித்தரும் லைக்குகளில் கிடையாது.

மேடைக்கச்சேரியில் அப்பாடல் ஒலிக்கும்போது, ரசிகர்களும் அதனுடன் இணைந்து பாடுவதுதான் உண்மையான வெற்றியாகும். ரசிகர்களின் உதடுகள் அப்பாடலை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் இசைக்கலைஞர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது மற்றும் அங்கீகாரம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துகள் கிடையாது. லைக்குகளை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், மேடைக்கச்சேரி நடக்கும்போது, ஒரு பாடலை கேட்டு ரசிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர், ரசிகைகளின் மனநிலையை வெல்வதுதான் அப்பாடலின் உண்மையான வெற்றி என்று சொல்வேன்.

ஒருவர் என்ன மனநிலையில் இருந்தாலும், அவரது மனதை அப்பாடல் துளைத்தெடுத்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் அப்பாடலுக்கு கிடைக்கும் உண்மையான வெற்றியாகும்’ என்றார். அவரை சினிமாவில் நடிக்க பாலிவுட் முன்னணி இயக்குனர்கள் பலர் அழைத்தும் கறாராக மறுத்துவிட்டார். தனக்கு நடிப்பு வராது என்று வெளிப்படையாக அவர் சொல்லிவிட்டார். தமிழில் இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் தொடர்ந்து பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Shreya Koshal ,D. Shreya Ghoshal ,Sanjay Leela Bhansali ,
× RELATED சொந்தப் படம் தயாரிக்கும் ஹீரோக்கள்