மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து ‘தாய் கிழவி’ என்ற படத்தை பார்த்து ரசித்த இப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் சில நிருபர்கள், ‘அஜித் குமாரை ஹீரோவாக வைத்து படம் தயாரிப்பீர்களா?’ என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், ‘நான் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு சிறிய தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறேன். அது நன்கு வளர்ந்த பின்பு, அஜித் சார் ஓ.கே சொன்னால், கண்டிப்பாக அவரை வைத்து படம் தயாரிப்பேன். இப்படம் அவரது ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் போல் இருக்கும். ஆனால், அது இப்போதைக்கு வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது’ என்றார்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சில கலைநிகழ்ச்சிகளில் மேடையில் மிமிக்ரி செய்ததுடன், சில டி.வி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற சிவகார்த்திகேயன், சில விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிம்பு, ெஜய் நடித்த ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவகார்த்திகேயன், நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் அஜித் குமார், நயன்தாரா நடித்த ‘ஏகன்’ என்ற படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். தொடர்ந்து அஜித் குமாருடன் நட்புடன் பழகி வரும் சிவகார்த்திகேயன், சந்தர்ப்பம் அமையும்போது அவரை சந்தித்து பேசுவார். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த கார் ரேஸ் பந்தய டிராக்கில், அஜித் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
