மும்பை: பாட்னாவில் நீட் தேர்வுக்கு படித்து வந்த 17 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதே அவரது மரணத்துக்கு காரணம் என காவல்துறை போலி தகவலை தயார் செய்தது. மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உடற்கூராய்வில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இது குறித்து டாப்ஸி கூறியிருப்பதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்தபடிதான் இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த அதே நாளில் 79 பாலியல் குற்றங்கள் நாடு முழுவதுமே நடந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்து கொதிக்க வேண்டிய நாம், இவற்றை கடந்து சென்றுகொண்டே இருக்கிறோம். இது பற்றியெல்லாம் நாம் ஏன் பேச வேண்டும், எதற்காக பிரச்னையில் சிக்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணாக இந்த சம்பவம் எனக்கு பேரதிர்ச்சி தந்தது. அதுபோல் எத்தனை பேர் இதை கண்டித்தார்கள் எனத் தெரியவில்லை. இதுபோன்ற கொடுமைகளை நார்மல் என நினைத்து அமைதி காப்பவர்களை பார்க்கும்போது கோபம்தான் வருகிறது. இன்னும் எத்தனை நாளுக்கு இதையெல்லாம் நார்மலைஸ் செய்யப்போகிறோம்? என டாப்ஸி ஆவேசமாக கேட்டிருக்கிறார்.

