சென்னை: கடந்த ஓராண்டாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் மம்மூட்டி. சென்னையில் தங்கி அவர் தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோய் காரணமாகவே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இப்போது குணமாகி அவர் கேரளா திரும்பிவிட்டார். மலையாள படத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மம்மூட்டி பேசியது: எனக்கு சில காலமாக வாசனை மற்றும் சுவை அறிந்துகொள்ளும் உணர்வு இல்லாமல் போனது. எந்த வாசனையாக இருந்தாலும் அதை உணர முடியவில்லை. சாப்பிட்டால் உணவின் சுவை தெரியவில்லை. கொரோனா பாதிப்பாக இருக்கலாமோ என எண்ணியபோது, பரிசோதனைக்கு பிறகு வேறு பிரச்னை என்பது தெரிந்தது. நமக்கு பார்க்கும் திறன், கேட்கும் திறன் இவை இரண்டும் கடவுள் தந்த வரம். அதேபோல்தான் சுவை திறனும். இப்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன். இவ்வாறு மம்மூட்டி கூறினார்.

