×

மைலாஞ்சி விமர்சனம்…

மைலாஞ்சி என்ற பெயரில் ஊட்டியில் பறவைகள் பூங்கா நடத்தும் கிரிஷா குரூப், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞனை காதலிக்கிறார். அவரது காதலை சொல்வதற்கு முன்பே அந்த இளைஞன், பணி மாறுதல் காரணமாக சென்னைக்கு சென்றுவிடுகிறார். வனவிலங்கு புகைப்படக்கலைஞர் ஸ்ரீராம் கார்த்திக், ஒரு அரியவகை பறவையை போட்டோ எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அவருக்கு கிரிஷா குரூப் மீது காதல் ஏற்படுகிறது.

தனது காதலை அவரிடம் சொல்வதற்கு முன்பு, கிரிஷா குரூப் தனது காதலை சொல்லி, சென்னையில் குடியேறிய அந்த இளைஞனை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கெஞ்சுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. முழுநீள மென்மையான காதல் கதையில் ஸ்ரீராம் கார்த்திக் அழகாக பொருந்தி இருக்கிறார். அவருக்கும், கிரிஷா குரூப்புக்குமான நட்பும், காதலும் நாகரீகமாக கையாளப்பட்டுள்ளது.

குருவி தலையில் பனங்காய் வைத்த மாதிரி, கனமான வேடத்தில் கிரிஷா குரூப் கச்சிதமாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், சிங்கம்புலி, செந்தி, தட்சா பிள்ளை, கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் கேரக்டருக்கேற்ப நடித்துள்ளனர். ஊட்டியை கண்முன் கொண்டு வந்துள்ளது, ஒளிப்பதிவாளர் செழியனின் கேமரா. இளையராஜா எழுதிய பாடல்கள் கேட்கும் ரகம்.

பின்னணி இசையில் வழக்கமான முத்திரையை பதித்துள்ளார். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். எழுதி இயக்கியுள்ள அஜயன் பாலா, தான் காதலித்த ஒரு பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் ஹீரோவின் காதல் உணர்வுகளையும், அதுபோல் ஹீரோயினுக்கான காதல் உணர்வுகளையும் பதிவு செய்துள்ளார். அழகியல் இருந்த அளவுக்கு அழுத்தம் இல்லை.

Tags : Grisha Group ,Ooty ,Mylanchi ,Chennai ,Sriram Karthik ,
× RELATED ஸ்வீட்டி நாட்டி கிரேசி விமர்சனம்…