
முன்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக்கச்சேரி, சென்னையில் வரும் 14ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள அவரிடம், ‘நீங்கள் யாருடைய ரசிகர்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘நான் நிறையபேருக்கு ரசிகன். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. மேலும், பாடல் போட்டிகளில் யார், யார் தோற்கின்றனர் என்று கவனிப்பேன். சில நேரங்களில் நன்றாக பாடும் நபர்களை, ஸ்ருதியில் பாடவில்லை என்று விட்டுவிடுவார்கள். அவர்களை சில வருடங்கள் கழித்து அழைத்து பாட வைக்கலாம். அவர்களும் தங்களை மேம்படுத்திக்கொண்டு இருப்பார்கள். வெற்றிபெற்றவர்களை விட எனக்கு பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும்.
நரேஷ் அய்யர் கூட அப்படித்தான். 33 வயதில் ஒரு போட்டியில் தோற்றுவிட்டார். ஆனால், அவரது குரலில் இருந்த தரம் எனக்கு பிடித்திருந்தது. அவரை அழைத்து, `நீ தோற்றுவிட்டாய். ஆனால், உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். எனக்கு ட்ராக் பாடுவதற்காக உடனே சென்னைக்கு கிளம்பி வா’ என்று சொன்னேன். அவருக்கு முதல் பாடலிலேயே தேசிய விருது கிடைத்தது’ என்றார். ‘ரங் தே பசந்தி’ என்ற இந்தி படத்தில் இடம்பெற்ற ‘ரூபாரூ’ என்ற பாடலுக்காக நரேஷ் அய்யர் விருது பெற்றார்.

