நடுத்தரக்குடும்பத்தின் தலைவர் சார்லியின் மகள் அனுபமா பரமேஸ்வரன், திருமணத்துக்கு முன் கர்ப்பம் ஆகிறார். அப்போது கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் கருக்கலைப்பு செய்கிறேன் என்று சொல்லும் ஃபிராடு டாக்டர், அனுபமா பரமேஸ்வரனின் வாழ்க்கையில் விளையாட, இதன் முடிவு நெஞ்சை கனக்க வைக்கிறது. தேசிய விருது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், கனமான கேரக்டரை சுமந்து டப்பிங் பேசி நடித்த அனுபமா பரமேஸ்வரன், எந்த படத்திலும் இவ்வளவு ‘சுதந்திரமாக’ தோன்றியது இல்லை. கேரக்டருக்காக அவர் இவ்வளவு துணிந்திருப்பது வியக்க வைக்கிறது. அவரது திரைப்பயணத்தில் இது ஒரு மைல் கல். மகளிடம் ஏற்படும் மாற்றத்தை ஒரு நல்ல தாயாக நிரோஷா கவனித்து கண்டிப்பதும், மகளிடம் கரிசனம் காட்டி சார்லி ஆறுதலாக இருப்பதும் நெகிழ வைக்கிறது.
தோழி பிரியா வெங்கட் கேரக்டரை மறக்க முடியாது. லிவிங்ஸ்டன், இந்துமதியின் மகள் பாசம் உருக வைக்கிறது. ஒன்சைடு லவ்வர் ராஜ்குமார் உள்பட மற்றவர்களும் நன்கு நடித்துள்ளனர். ஃபேமிலி சென்டிமெண்ட் திரில்லருக்கு பொருத்தமான ஒளிப்பதிவை கே.ஏ.சக்திவேல் கேமரா வழங்கியுள்ளது. என்.ஆர்.ரகுநந்தன், சித்தார்த் விபின் இணைந்து இசை அமைத்துள்ளனர். ஏ.ஆர்.ஜீவா எழுதி இயக்கியுள்ளார். பெண்கள் சந்திக்கும் சில பிரச்னைகளுக்கு ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் ஒரு காரணம் என்று சொல்லியிருக்கிறார். முடிவை மாற்றி யோசித்து இருக்கலாம். பட உருவாக்கம் டெலிபிலிம் பாணியில் இருப்பதை கவனித்திருக்கலாம்.
