×

ரூ.100 கோடி சொத்துகளுக்காக மோதல் காவ்யா கவுடாவுக்கு கொலை மிரட்டல்

பெங்களூரு: கன்னட நடிகை காவ்யா கவுடா, பெங்களூரு பகுதியில் தனது கணவர் சோமசேகர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். அவர்களுக்கு இடையே, கே.ஆர்.புரம் பகுதியில் இருக்கும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், சொத்துகளுக்கு ஆசைப்படுவதாக தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள காவ்யா கவுடா, ‘நான் எனது சொந்த பணத்தை செலவிடுகிறேன்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், ‘கடந்த 18 ஆண்டுகளாக திரைத்துறையில் நான் சம்பாதித்த பணத்தில் வாழ்ந்து வருகிறேன். எனது கணவர் அல்லது மாமனாரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை. எனது மகளை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட சுமா என்ற பெண் மீது திருட்டு பட்டம் சுமத்தியதில் இருந்து, எங்கள் குடும்பத்தில் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது’ என்றார்.

இந்நிலையில், குடும்பத்துக்குள்ளேயே இருந்து வந்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது. சோமசேகரின் சகோதரர் நந்தீஷ், அவரது மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் சேர்ந்து தன்னையும், தனது கணவரையும் தாக்கியதாக காவ்யா கவுடா புகார் அளித்துள்ளார். இந்த தாக்குதலில் சோமசேகரின் தோள்பட்டையில் கத்திக்குத்து விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தனக்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்ததாகவும், தனது 2 வயது மகளையும் தாக்க முயன்றதால் நிலமை மோசமானதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருதரப்பிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Kavya Gowda ,Bangalore ,Somasekhar ,K. R. ,Puram ,
× RELATED ஹாலிவுட்டிலும் இதே நிலையா? நடிகைகளை...