×

ஏ.ஆர்.ரஹ்மான் மீது கங்கனா கோபம் ஏன்? எமர்ஜென்சி படத்தால் தாக்கு

சென்னை: பாலிவுட்டில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வரலாற்று படம், ‘சாவா’. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், ‘சாவா’ படம் பிரிவினையை உருவாக்கும் படம் என்றும், ‘மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி லாபம் ஈட்டுவதாகவே எனக்கு தோன்றுகிறது என்றாலும், அதன் மையக்கருத்து வீரத்தை கொண்டாடுவதே’ என்றும் சொல்லியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இக்கருத்து அரசியல் உள்நோக்கத்துடன் சொல்லப்பட்டதாகவும், படத்தை நியாயமற்ற முறையில் முத்திரை குத்துவதாகவும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானை கடுமையாக தாக்கிய கங்கனா ரனவத், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டிக்கான ஸ்கிரீன்ஷாட் டை பகிர்ந்து, ‘அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஜி, நான் காவி சிந்தனையை ஆதரித்து வருவதால் திரைத்துறையில் அதிக பாரபட்சத்தையும், பாகுபாட்டையும் சந்திக்கிறேன். என்றாலும், உங்களை விட அதிக பாரபட்சமும், வெறுப்புணர்வும் கொண்ட ஒருவரை இதுவரை நான் சந்தித்தது இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு ‘சாவா’ படத்தை தாண்டி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையே அவர் நினைவுபடுத்தி இருப்பதாக தோன்றுகிறது.

இந்தியில் கங்கனா ரனவத் தயாரித்து இயக்கி, இந்திரா காந்தி வேடத்தில் நடித்த ‘எமர்ஜென்சி’ என்ற படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க வேண்டும் என்று கங்கனா ரனவத் விரும்பினார். படத்தின் கதையை சொல்ல நேரில் சந்திக்க ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ‘நான் ‘எமர்ஜென்சி’ கதையை உங்களிடம் சொல்ல விரும்பினேன். என்னை நேரில் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். பிரச்சார படம் என்பதால், அதில் இணைய நீங்கள் விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது. ‘எமர்ஜென்சி’ படம் விமர்சகர்களாலும், எதிர்க்கட்சி தலைவர்களாலும், அதன் சமச்சீர் மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறைக்காக பாராட் டப்பட்டது. உங்களுடைய வெறுப்புணர்வு உங்கள் கண்களை மறைத்துவிட்டது. உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

* ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
இந்நிலையில், தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ‘இசை என்பது கலாச்சாரத்துடன் இணைவதற்கும், அதை கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு வழி. இந்தியா எப்போதுமே எனது வீடு, எனது ஆசிரியர் மற்றும் எனது உந்துகோலாக இருக்கிறது. சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே எப்போதும் எனது நோக்கமாக இருந்து வருகிறது. யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. எனது எண்ணம் புரிந்துகொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Kangana ,A.R. Rahman ,Chennai ,Bollywood ,Vicky Kaushal ,Rashmika Mandanna ,
× RELATED புரமோஷனுக்கு கூட வரவில்லை: மாயபிம்பம் இயக்குனர் புகார்