×

வாகா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார் அஜித்

சென்னை: வாகா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார் நடிகர் அஜித். பல கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செல்வது அஜித்தின் ஹாபி. சமீபகாலமாக இதுபோன்ற பயணத்தில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். வலிமை படத்திற்காக ரஷ்யாவுக்கு சென்றபோது, அங்கு பைக்கில் பல்வேறு இடங்களுக்கு பயணமானார். அதற்கு முன்பாக இந்தியாவில் குஜராத், அதையொட்டிய கிராமங்களுக்கு சென்று வந்தார். பிறகு மத்திய பிரதேசத்திலும் பைக் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக அவர் பைக்கில் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றார். காத்மண்டு சென்றவர் பின்னர் அங்கிருந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு நேற்று முன்தினம் சென்றார். அஜித்தை பார்த்ததும் ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரை வரவேற்று தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அஜித்துடன் நீண்ட நேரம் ராணுவ வீரர்கள் உரையாடினர். பிறகு அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து அஜித் தரப்பில் கூறியதாவது: வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதையடுத்து கடந்த 10 நாட்களாக அஜித் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ஓரிரு தினங்களில் அவர் சென்னை திரும்புகிறார். அதற்கு பிறகு ஒவ்வொரு நாடாக சென்று, அங்கு பைக் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல் கட்டமாக அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். அடுத்த மாதம் அந்த பயணம் இருக்கலாம். உலகம் முழுக்க மோட்டார் பைக்கில் தனியாக சுற்றுப்பயணம் செய்த சாகசப் பெண்ணான மரல் யாசர்லூவை அஜித் டெல்லியில் சந்தித்து ஆலோசித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளுக்கு பைக் பயணம் செல்ல விருப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்காக திட்டமிட்டு அவர் பயணம் மேற்கொள்வார். இவ்வாறு கூறினர்.

Tags : Ajith ,Wagah border ,
× RELATED இனிமேல் அஜித்குமார் போதும்....தல...