×

கொரோனாவால் நிதி நெருக்கடி: பெரிய படங்களின் பட்ஜெட் குறைப்பு

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக பல பெரிய படங்களின் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, கடந்த 8 மாதத்துக்கு மேலாக திரையுலகம் முடங்கியுள்ளது. தியேட்டர்கள் திறந்தும் மக்கள் வராததால் படங்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. 45 படங்களின் படப்பிடிப்பு நடைபெற வேண்டிய இடத்தில் வெறும் 20 படங்களின் ஷூட்டிங்தான் நடக்கிறது. கொரோனாவால் நிதி நெருக்கடிக்கு தயாரிப்பாளர்கள் உள்ளாகியுள்ளனர். இதனால் தங்களது படங்களின் பட்ஜெட்டை குறைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டனர். அதன்படி 9 பெரிய படங்களின் பட்ஜெட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர். அஜித் நடிக்கும் வலிமை படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் சில ஆக்‌ஷன் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருந்தனர். கொரோனா ஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கியதும், அந்த திட்டத்தை கைவிட்டு விட்டனர். கடந்த மாதம் ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகளையும் ஐதராபாத்திலேயே படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு வருகின்றனர். அதேபோல் இந்த படத்தில் ஹாலிவுட் ஸடன்ட் கலைஞர்களை பயன்படுத்தவும் திட்டமிட்டு இருந்தனர். அந்த திட்டத்தையும் கைவிட்டுள்ளனர். இப்போது நம்மூர் ஸ்டன்ட் கலைஞர்களே இதில் பணியாற்ற உள்ளனர். தனது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை அஜித் விட்டுக் கொடுத்திருப்பதாகவும் பட வட்டாரம் கூறுகிறது.

இதேபோல் பட்ஜெட் குறைப்புக்கு ஆளாகியுள்ள மற்றொரு படம், பொன்னியின் செல்வன். லைக்கா நிறுவனம், மணிரத்னம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்துக்கான கிராபிக்ஸ் காட்சிகளை வெளிநாட்டில் உருவாக்க திட்டமிட்டனர். இப்போது மும்பையை சேர்ந்த நிறுவனமே அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. படத்தின் பட்ஜெட்டில் 20 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளனர். இதேபோல், இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டையும் குறைக்க லைக்கா நிறுவனம் அழுத்தம் தந்துவருகிறது. அதை இயக்குனர் ஷங்கர் ஏற்காததால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இந்த படத்திலிருந்து ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகர்களை நீக்கிவிட்டு, பெப்சியை சேர்ந்த ஸ்டன்ட் நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதேபோல் தமிழ், தெலுங்கில் உருவாகும் பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலும் பட்ஜெட்டில் 25 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்திலும் பட செலவுகளை கணிசமாக குறைத்துள்ளனர். இது மட்டுமின்றி பல படங்களில் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் ஆகியோரின் சம்பளமும் குறிப்பிட்ட சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அக்னி சிறகுகள், கோடியில் ஒருவன் படங்களில் நடிக்கும் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டுள்ளார். கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் கல்யாண், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரும் தங்களது படங்களில் சம்பளத்தை குறைத்துள்ளனர்.

Tags : crisis ,Corona ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...