×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் கூலி திரைப்படம் வெளியானது: தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சென்னை: சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் மிக பிரமாண்டமான முறையில் தயாரித்து பான் இந்தியா அளவில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக ரஜினிகாந்த், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். முதல் நாளான இன்று 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி காலை 9 மணி சிறப்பு காட்சியை காண சென்னை உள்பட பல இடங்களில் திரையங்கு வாசலில் ரசிகர்கள் கூடி மிக பெரிய அளவில் கட்டவுட்கள் வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், ரஜினி தனது திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை கடந்துள்ளதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் அதிரடி ஆக்ஷன் கலந்து எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள், இப்படத்தை மிக பிரமாண்டமாக ஹாலிவுட் தரத்தில் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், 74 வயதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினி மிரட்டியிருக்கிறார். முதன்முறையாக வில்லன் வேடத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உபேந்திரா, சத்யராஜ் மற்றும் கேமியோ ரோலில் ஆமிர்கான் என அனைவரும் தங்களின் பணிகளை சிறப்பாக செய்த்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இது முழுநீள ஆக்‌ஷன் என்டர்டெயினராக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என படம் பார்த்த ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

இதனால் படத்துக்கான அனைத்து டிக்கெட்டுகளும் தியேட்டர்களில் விறுவிறுப்பாக விற்றுத் தீர்ந்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது. ரஜினியின் திரைப்பயணத்தில் இது 50வது ஆண்டு என்பதால் அதனை கொண்டாடும் விதமாக இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்கு வாசலில் கூடி ஆட்டம், பாட்டத்துடன் சிலாகித்து வருகின்றனர். சென்னை, வெற்றி திரையரங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தனர். மேலும், ரோகிணி திரையரங்கில் லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மற்றும் அவரது மகன் யாத்ரா ஆகியோர் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். ஒரே படத்தில் ரஜினிகாந்த், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பெரும் நட்சத்திர பட்டாளம் சேர்ந்திருப்பதும் விஷுவல் ட்ரீட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. முன்னதாக, அமெரிக்காவில் ‘கூலி’ திரைப்படம் இந்திய நேரப்படி நேற்று இரவு வெளியானது. இதுவரை இல்லாத வகையில் மாஸ் ஆக்‌ஷன் கலந்த ரஜினி படமாக இது இருப்பதாக அமெரிக்க ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

‘கூலி’ ஆட்டோ
ரஜினிகாந்தின் திரைப்பயணத்தின் 50வது ஆண்டை முன்னிட்டு திருச்சியை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவில் முன் மற்றும் பின்பக்கத்தில் ரஜினியின் போட்டோவை ஒட்டி வித்யாசமான முறையில் அலங்கரித்து படம் பார்க்க வந்துள்ளார். இன்று ஒரு நாள் மட்டும் தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு சலுகை தருவதாக அந்த ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார்.

Tags : Rajinikanth ,Sun Pictures ,Chennai ,Sun Pictures' ,Sun TV Network ,Kalanithi Maran ,India ,Lokesh Kanagaraj ,Aamir Khan ,Nagarjuna ,Upendra ,Sathyaraj ,Soubin Sagir ,Shruti Haasan ,Tamil Nadu government ,
× RELATED நடிகர் சுஷாந்துடன் காதலா? மீனாட்சி சவுத்ரி பதில்