×

சின்ன திருத்தங்கள் செய்தால் சிறப்பான பலனை அடையலாம்!

நம்முடைய வீட்டில் நாம் சில விஷயங்களைக் கவனித்து சரிசெய்தால் அல்லது திருத்திக்கொண்டால், ஏராளமான நன்மைகளை அடையலாம். இவைகள் எல்லாம் நூதனமான விஷயங்கள் அல்ல. பரம்பரை பரம்பரையாக நம்முடைய முன்னோர்கள் சொன்னதுதான். ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் நேரடியாக இல்லாமல் வழிபாட்டு முறைகளில் இருக்கும். அல்லது ஜாதக சாஸ்திரத்தில் இருக்கும். இல்லாவிட்டால் தர்ம சாஸ்திரத்தில் இருக்கும், ஏன் வாஸ்து சாஸ்திரத்திலும் இருக்கும்.

என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் நம்முடைய நேயர்களுக்கு சில சின்ன விஷயங்களை இந்தப் பதிவில் வழங்குகின்றேன். இவைகள் ஒவ்வொன்றுக்கும் சாஸ்திர அடிப்படை இருக்கிறது என்பதையும் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன். இதைச் சரி செய்து வாழ்ந்தவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொண்டார்கள் என்பதையும் நான் சொல்ல விரும்புகின்றேன். இவைகளெல்லாம் பரிகாரங்கள். ஆனால் இவைகள் எல்லாம் அஞ்சு பைசா செலவில்லாமல் சிறிய திருத்தங்களால் வருகின்ற பரிகாரங்கள். அதில் முதல் விஷயத்தை இப்பொழுது நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

இது வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய மிகச் சின்ன பரிகாரம்தான். சக்தியுள்ள பரிகாரம். நம்முடைய வீட்டின் நடுப்பகுதிக்கு பிரம்ம பாகம் என்று பெயர். அந்தக் காலத்தில் வாசல் முற்றம் என்று வைத்து நான்கு பக்கங்களிலும் தாழ் வாரங்கள் அமைத்து நடுவில் திறப்பு வைத்திருப்பார்கள். நன்கு காற்று வரும். வெளிச்சம் நன்றாக இருக்கும்.
மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. தேவையில்லாத பொருள்களைப் போட்டு அடைக்கக்கூடாது. இப்பொழுது நாம் சிறிய வீடுகளிலே, அடுக்குமாடி குடியிருப்புகளிலே, குடியிருப்பதால் இது சாத்தியம் இல்லை.

ஆனாலும்கூட, உங்கள் ஹாலின் நடுப் பகுதியைத் தடைகள் இல்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர ஈசானியம் என்று சொல்லப்படுகின்ற வடகிழக்குத் திசையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இயன்றளவு அந்தப் பகுதியில் ஒரு சின்ன தண்ணீர் தொட்டியோ அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த இடம் ஈரத்தோடு பசை உள்ளதாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஈசானிய ஈரமானது எப்பொழுதும் பணப்புழக்கத்தை பணச்சுழற்சியை அதிகப்படுத்தும். வருமானத்தை அதிகப்படுத்தும். வருமானத்தை நோக்கி பெருக்கக்கூடிய வழியை புத்திக்குத் தரும்.

இதை எளிமையாகச் செய்யலாம்

இரண்டாவது விஷயம், சிலர் வீட்டில் எப்பொழுதும் ஏதாவது வேலை ஓயாமல் இருந்து கொண்டே இருக்கும். பணிச்சுமை மிக அதிகமாக இருக்கும். அவர்களே மாற்றிமாற்றி செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய வேலை 2 மணி நேரம் நடக்கும். திரும்பத் திரும்ப வேலை செய்ய வேண்டி இருக்கும். இவர்களுக்கு எளிய பரிகாரம் மேற்குப்
பக்கத்திலே பரண் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு அங்கே நீங்கள் கனமான பொருட்களை வையுங்கள். கிழக்குப் பக்கத்திலே கனமான பொருட்களை வைக்க வேண்டாம். மேல் மாடியிலே மேற்கு தெற்கு பகுதிகள் சற்று உயரமாக இருப்பது போல், குறைந்த பட்சம் ஒரு உயரமான கம்பியையாவது நட்டுவையுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டை விஸ்தரிக்கும் போது கிழக்குப் பக்கம் மிக உயரமான அறைகளையோ கட்டிடங்களையோ எழுப்ப வேண்டாம்.

மூன்றாவதாக, ஒரு வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட குற்றங்கள் இருந்தால், நீங்கள் சிறிய மீன் தொட்டி வைத்து கண்காணிக்கலாம். எவ்வளவு நன்றாகத் தண்ணீரை மாற்றினாலும் அதில் உள்ள மீன்கள் சில நேரங்களில் இறந்துவிடும். அதைப்போல நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகள் அல்லது தொட்டியில் உள்ள செடிகள் தண்ணீர் ஊற்றினாலும் வாடிப்போகும். வளர்ப்புப் பிராணிகள் நோய்வாய்ப்படும். அல்லது இறந்து விடும். இப்படிப்பட்ட சில குற்றங்கள் இருந்தால், நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். எளிமையான சில விஷயங்களைப் பின்பற்றி இவற்றை நீக்கிக்கொள்ளலாம். இவைகள் எல்லாம் ஒரு குறியீடுகள்.

நான்காவதாக, சில பேர் தங்கள் பூர்வீகச் சொத்தை பாகம்செய்து கொள்வார்கள். குறிப்பாகத் தந்தையின் வீட்டை பாகம் செய்யும் பொழுது, எப்படி பாகம் செய்ய வேண்டும் என்ற முறையை நம்முடைய முன்னோர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள். மூத்தவருக்கு மேற்கு அல்லது தெற்கு பாகத்தை வழங்க வேண்டும். இளையவருக்கு கிழக்கு அல்லது வடக்குப் பாகத்தை வழங்க வேண்டும். இது அந்த வீட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இருவருடைய பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஐந்தாவதாக, ஒரு வீட்டைக் கட்டுவது என்பது பெரிய விஷயம். அந்த வீட்டைக் கட்டி முடித்து நாம் கிரகப்பிரவேசம் செய்கின்றோம். அந்த கிரகப்பிரவேசம் செய்யும்பொழுது நல்ல ஜோதிடரிடம் காட்டி, நாள் குறித்துக் கொள்ளுங்கள்.

அது ரொம்ப முக்கியமான விஷயம். ஏதோ ஒரு முகூர்த்த நேரத்திலே கிரகப்பிரவேசம் செய்வதைவிட வீட்டினுடைய தலைவருடைய லக்னத்திற்கும் நட்சத்திரத்திற்கும் தோஷம் இல்லாத நாளாக இருக்க வேண்டும். பொதுவான முகூர்த்த நாட்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கும் இல்லை. குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தோஷத்தை தரலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஜாதகத்தை பார்த்து பலன் சொல்வதைவிட லக்கினத்தை குறித்துக் கொடுப்பது ஜோதிடர்களுக்கு சவாலான விஷயம். அதை மறந்துவிடாதீர்கள். சுற்றுச்சுவர் கட்டிக்கொண்டு கிரகப்பிரவேசம் செய்வது மிகச் சிறந்தது. ஆனால், முடியாவிட்டால் ஒரு வேலியாவது போட்டுக் கொள்ளுங்கள். இயன்றளவு சீக்கிரமாக சுற்றுச்சுவரைக்
கட்டிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

காரணம், பக்கத்து மனை அல்லது எதிர்மனையினுடைய தோஷங்கள் நம் வீட்டைப் பாதிக்காதவாறு இருப்பதற்கு இந்த காரியத்தைச் செய்யுங்கள். ஆறாவதாக, உள்ள ஒரு விஷயம். வீட்டில் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை வாயு மூலை என்று சொல்லப்படுகின்ற வடமேற்குத் திசையிலோ அல்லது தென்கிழக்குத் திசையாகிய அக்னி திசையிலோ படுக்க வைக்க வேண்டாம். தென்மேற்கு திசையான நைருதி திசையில் அவர்கள் படுக்கையை போட்டுக் கொள்வது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டு வடக்கு பக்கம் தலையை வைக்காமல் தெற்குப் பக்கம் தலையை வைத்து படுக்க வேண்டும்.

அவர்கள் மருத்துவம் செய்து கொள்வதோ மருந்து சாப்பிடுவதோ ஓய்வெடுப்பதோ நல்லது. சீக்கிரம் நோயிலிருந்து மீளலாம். தன்வந்திரி மந்திரம் தொடர்ந்து சொல்லவும். ஏழாவதாக, பலருடைய வீட்டில் கழிவறையை ஒட்டி பூஜைஅறையை அமைத்துக் கொள்ளுகின்றார்கள். இடம் இல்லை என்றாலும்கூட இதற்கு வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் பூஜை செய்யும்பொழுது பக்கத்தில் இருக்கக்கூடிய கழிவறை, குளியலறை ஈரம் இந்த சுவரில் வரும். தண்ணீர் ஓசை கேட்கும். இவைகள் சரியல்ல. அதைப்போலவே பூஜை அறைக்கு நேர் எதிரில் கழிவறையை அமைத்துக் கொள்ளாதீர்கள்.

நிறைவாக எட்டாவது விஷயமாக, இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சிலர் இடம் இல்லை என்று சொல்லி மாடிப்படியின் கீழ்பகுதியை வீணாக்காது பூஜை அறையை அமைத்துக் கொள்ளுகின்றனர். பூஜை செய்யும் பொழுது தலைக்கு மேல் மாடிப் படியில் நடந்து செல்லும் ஓசை கேட்கும். அந்தப் பகுதியை வேறு ஏதேனும் பொருள்களை வைத்துக்கொள்வதற்கோ மற்ற உபயோகங்களுக்கோ வைத்துக்கொண்டு பூஜை அறையை சிறிய அறையாக இருந்தாலும் வேறு இடம் பார்க்கவும்.

இயன்ற அளவு வடக்கு, வடகிழக்கு திசை உகந்தது. சமையல் அறையில்கூட ஒரு சிறிய அலமாரியை வைத்துக்கொண்டு நீங்கள் பயன்படுத்தலாம். அதில் என்ன சங்கடம் என்று சொன்னால், சமைக்கும்பொழுதும், பூஜை செய்யும் பொழுதும் தூய்மை அவசியம். அதிலும் பூஜை அறை தூய்மை மிகத் தேவையானது. பெரும்பாலும் சமையலறை அதற்கு ஏற்ற இடமாக இருக்காது என்பதால், தனி அறையை வைத்துக்கொள்ளுங்கள். வேறு இடமில்லை, சமையலறைதான் இடம் என்று சொன்னால், நீங்கள் அங்கே முக்கியமாகத் தூய்மையைப் பின்பற்ற வேண்டும்.

தொகுப்பு: தேஜஸ்வி

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!