×

புனர்பூச நட்சத்திரமும் புனிதன் ஸ்ரீராமபிரானும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் வளர்பிறை நவமி நன்னாள் என்றாலே நமக்கு ஸ்ரீராம நவமி உற்சவம் தான் நினைவுக்கு வரும். ஸ்ரீராமனின் அவதார நன்னாள் அந்த நாள்.  ஸ்ரீராமநவமி உற்சவம் இந்த ஆண்டு பங்குனி மாதம் 16ஆம் தேதி 30.3.2023 வியாழக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் வசந்த நவராத்திரி நிறைவு பெற்று ஸ்ரீராம நவமி தொடங்குகிறது. ஸ்ரீராம நவமி உற்சவத்தை இரண்டு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.

கர்ப்போச்சவம் என்று ஒருசில ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. குறிப்பாக சிதம்பரம் கோதண்ட ராமர் கோயிலில் கர்ப் போச்சவமே அனுஷ்டிக்கப்படுகிறது.  பொதுவாக வீடுகளிலும் சில ஆலயங்களிலும் ஜனன உற்சவம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒன்று நவமியில் முடியும். இல்லை நவமியில் தொடங்கும்.

ராமருடைய அவதாரத் திருநாள் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் என்று தானே சொல்லுகின்றார்கள். ஆனால் சில வருடங்களில் பங்குனியில் வருகிறதே என்று ஒரு கேள்வி எழலாம். பொதுவாக திருக்கோவில் உற்சவங்கள் எல்லாமே சாந்த்ரமான முறைப்படியே நடைபெறும். அதாவது ஒரு மாதத்தினுடைய அமாவாசைக்கு அடுத்த நாள் அடுத்த மாதம் துவங்கிவிடும். அந்த அடிப்படையில் பங்குனி மாத அமாவாசையானது, மார்ச் 21ஆம் தேதி வருவதால், அதற்கு அடுத்தநாள் முதல், சித்திரை (சைத்ர மாதம்) துவங்கி விட்டதாகக் கணக்கு. அதனால்தான் இந்த ஆண்டு பங்குனியில் ராம நவமி தொடங்குகிறது.

சித்திரை மாதம் தமிழ் வருடத்தின் முதல் மாதம். ஆண்டின் முதல் காலமான வசந்த காலத்தின் தொடக்கம்.சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்துள்ளவர் என்று பொருள். பகவத்கீதையில் மாதங்களில் நான் மார்கழி மாத மாக இருக்கிறேன் என்று சொன்ன பகவான், ‘‘காலங்களில் நான் வசந்த காலமாக இருக்கிறேன்” (மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம் ருதூநாம் குஸுமாகர:) என்று சொல்வதால், சித்திரை மாதம் பகவானுக்கு உகந்த மாதமாகிறது.

சித்திரை என்பது முதல் மாதம் அல்லவா! ஸ்ரீராமபிரான் அன்பிலும் பண்பிலும் முதலாகவே இருப்பதால், சித்திரை மாதத்தில் அவர் அவதரித்தது மிகவும் பொருத்தமானதாகும். அவர் அவதரித்த புனர்பூச நட்சத்திரம், 27 நட்சத்திரங்களில் ஏழாவது நட்சத்திரம்.ஆன்மிகத்தில் ஏழு என்கின்ற எண் மிக உயர்ந்தது. ராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்யா காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தரகாண்டம் என்று ஏழு காண்டங்கள் இருக்கின்றன.

ஏழு என்கிற எண் ஸ்ரீராமனுக்கு மிகவும் பிடித்தமான எண்.சப்த பிராகாரம் என்று சொல்லப்படுகின்ற ஏழு பிராகாரங்களை உடைய திரு வரங்கநாதன் ஸ்ரீராமன் தனது இஷுவாகு குலதனமாக எண்ணி வழி பட்ட பெருமாள். ஸ்ரீராமபிரானை வைணவத்தில் பெருமாள் என்றும், அவர் வழிபட்ட ஸ்ரீரங்கநாதனை பெரிய பெருமாள் என்றும் சொல்லுவார்கள்.

சப்தம் என்கிற வார்த்தை பிரணவத்துக்கும் வேதத்துக்கும் பொருந்தும். வேதம்தானே ராமாயணம்.சப்தம் என்கிற வார்த்தை ஏழு என்கிற எண்ணைக் குறிக்கும். ஆழ்வார்களுக்கும் இந்த ஏழு என்கிற எண் மிகவும் பிடித்தமானது. ‘‘எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்’’ என்பது ஆண்டாள் பாசுரம்.‘‘எந்தை தந்தை தந்தை நம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி வந்து வழி வழி ஆட்சி செய்கின்றோம்’’ என்று பெரியாழ்வார் பாடுவதும் ஏழு என்கிற எண்ணின் பெருமையைக் குறிக்கும். ஸ்ரீராமபிரான் விபீடணனைத் தனது சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் பொழுது ஏழாவது சகோதரனாக ஏற்றுக்கொள்கிறான்.

குகனோடும் ஐவரானோம் முன்பு; பின்
குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம்;
அகனமர் காதல் ஐய!
நின்னோடும் எழுவரானோம்

 - என்று பாடுகின்றான்.

ராமருடைய வீரத்தில் சுக்ரீவன் சந்தேகப்பட்டு மராமரத்தை துளைக்கச் சொல்ல, அவன் விட்ட பாணமானது ஏழு மரங்களைத் துளைத்தது.

அதை அவையடக்கப் பாடலிலேயே கம்பன் பாடுகிறார்.
நொய்தின் நொய்ய சொல் நூல் கற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்வதற்கு எய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொல் நின்ற தேயத்தே

சான்றோர்கள் ஒருவரை சபித்து விட்டால், அந்தச் சாபமானது எப்படித் தப்பாமல் போய்ச் சேருமோ, அப்படி ராமன் விட்ட பாணமானது ஏழு மரங்களையும் துளைத்தது - என்று இந்த இடத்தில் கம்பன் காட்டுகின்றான்.ஏழு உலகங்கள், ஏழு கடல்கள், என்று ஏழு என்ற எண் இருக்கும் இடமெல்லாம் சென்று தேடி, பின் வந்து ராமனை அடைந்ததாம். ஏழு என்கிற எண் ஆன்மிகத்திலும் சரி குறிப்பாக ராமாயணத்திலும் சரி, மிக சிறந்த இடத்தைப் பெற்றிருப்பதால், ஏழாவது நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கும் அந்தச் சிறப்பு வந்து விடுகிறது.

புனர்பூசம் நட்சத்திரம் முதல் மூன்று பாதங்கள் மிதுனராசியிலும், கடைசி பாதம் கடகராசியிலும் இடம் பெறும். புனர்பூச நட்சத்திரம் குருபகவானுக்கு உரிய நட்சத்திரம். குரு பகவான் தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் உரியவர். தனுசு ராசி என்பது வில் அம்பை சின்னமாக உடைய ராசி. ஸ்ரீராமன் கையில் எப்பொழுதும் வில்லேந்தி கோதண்டராமராக இருக் கிறார். குருவின் இன்னொரு வீடு மீன ராசி. அது 12 வது ராசி. அதனை மோட்ச ராசி என்று சொல்வார்கள். மோட்சம் என்பது விடுதலையைக் குறிக்கும். விமோசனத்தைக் குறிக்கும்.

ராமாயணம் முழுமைக்கும் பலருடைய சாபங்களும் பாவங்களும் விமோசனம் அடைந்து நற்கதி பெறுவதைப் பார்க்கின்றோம். அது மட்டும் இல்லை; ஆழ்வார் வாக்கிலே ராமன் தன்னுடைய திருவடிச் சோதிக்கு அதாவது வைகுந்தத்துக்குச் செல்லுகின்ற பொழுது சர அசரங்கள் என எதையும் விட்டு வைக்கவில்லையாம். எல்லோரையும் அழைத்துச் சென்றான் என்பதை நம்மாழ்வார் பாடுகின்றார்.

கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான் முகனார் பெற்ற நாட்டுளே

புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு. அந்த குருவுக்குரிய ராசி பாக்கிய ராசி (9) மோட்ச ராசி (12). குருவின் அருளால் யாருக்கெல்லாம் பாக்கியம் இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் நற்கதி அடைகிறார்கள் என்பது தான் ராமருடைய புனர்பூச நட்சத்திரமும், அந்த புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதியான குருவும், அந்த குருவுக்குரிய 9, 12 வீடுகளும் காட்டுகின்றன. புனர்பூச நட்சத்திரத்தின் சிறப்பை ஜோதிட நூல்கள் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஸ்ரீராமன் புனர்பூச நட்சத்திரத்தின் நாலாம் பாதம் என்பதால் கடக ராசியில் அவதரித்தார். புனர்பூச நட்சத்திரத்திற்குரிய குரு அதே கடக ராசியில் உச்சம் பெறுகிறார்.

நான்காம் இடத்தில், நான்காம் இடத்தின் அதிபதி சந்திரன் ஆட்சி பெறுகிறார். அழகிலும், பெருமையிலும், வீரத்திலும், புகழிலும் தன்னிகரற்றவனாக விளங்குகின்றான் ராமன். காரணம் ஆட்சி பெற்ற சந்திரனும், உச்சம் பெற்ற குருவும் இணைந்து இருக்கின்றார்கள்.இவர்கள் இருவரும் இணைந்து பத்தாம் ராசியான மகரத்தைப் பார்ப்பதால் ராமருக்கு தோல்வி என்பதே கிடையாது. அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். 10 என்பது கர்ம ராசி. செயலைத் தவிர வேறு எதுவுமே இல்லை ராமனிடத்திலே.

புனர்பூச நட்சத்திரத்தின் சிறப்பை ஜோதிட நூல்கள் எப்படி எடுத்துக் காட்டுகின்றதோ அந்த குணாம்சங்கள் எல்லாம் பொருந்தி இருப்பது ஸ்ரீராமன் இடத்திலே.

1. புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர்கள், தந்தை சொல் காப்பார்கள். ராமன் அப்படித்தானே இருந்தான். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை; தாய் சொல் மிக்க வேதம் இல்லை என்பதை பிறந்ததிலிருந்து நடந்து காட்டியவன் ராமன்.

2. புனர்பூச நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கஷ்டங்களை சகித்துக் கொள் வார்கள். எளிதில் வெளிக்காட்ட மாட்டார்கள். பொறுமையுடன் இருப்பார்கள். ஸ்ரீராமனின் இந்த இயல்புகள் ராமாயணத்தில் பல இடங்களில் வருகின்றது.

3. புனர்பூச நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் எதையும் விட்டுக் கொடுப்பார்கள் தியாகம் செய்வார்கள். “என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ”.  நான் ஆண்டால் என்ன? பரதன் ஆண்டால் என்ன? என்று சொல்வதும், சுக்ரீவனுக்கும் விபீடணனுக்கும் பட்டா பிஷேகம் செய்து அழகு காண்பதும்  ராமனுக்குரிய குணம்.

4. சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்படுபவர்கள் புனர்பூச நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் என்கிற குறிப்பு ஜோதிட நூல்களில் இருக்கிறது. அதுவும் முழு மையாக ராமனுடைய குணத்தோடு பொருந்துகிறது. சத்தியமும் தர்மமும் ராமாயணம் முழுக்கவே பார்க்கலாம். பரதன், ஸ்ரீராமனை திரும்பவும் வந்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஆள வேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது, ‘‘அப்படி நான் செய்தால் தசரதனுடைய சத்தியம் என்ன ஆவது? தசரதனுக்கு நான் கொடுத்த சத்தியம் என்ன ஆவது? தர்மத்துக்கு மாறான நிகழ்ச்சியாக அல்லவா போய்விடும்” என்று சொல்லி தர்மத்திற்கும் சத்தியத்திற்கும் மிகவும் முக்கியம் கொடுத்தவன் ஸ்ரீராமன்.

5. வீரம் என்று வருகின்ற பொழுது, மிகச் சிறந்த வீரர்களாக திகழும், இவர் கள் மிக மிக பொறுமைசாலிகளாகவும் திகழ்வார்கள். ராமனுடைய சாந்த குணத்தை ராமாயணத்தில் பல இடங்களிலே காணலாம். ஏன், இராவண னோடு சண்டையிடுகின்ற பொழுது கூட அவன் சிரித்த முகத்தோடு, அம்பு தொடுக்கும் காட்சியைக் கண்டு இராவணனே மயங்கி நிற்கிறான். ஆண்டாளும் மனத்துக்கு இனியான்   என்று பாடுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

6. புனர்பூச நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை மிகவும் மென்மையாக அதே சமயத்தில் உறுதியுடன் சொல்வார்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத. விபீஷண சரணாகதியின் போது அவனை சேர்த்துக் கொள்ளலாமா என்று மந்திர ஆலோசனை நடைபெறுகிறது. ஒவ்வொருவரிடமும் பொறுமையாக ராமன் கருத்து கேட்கிறான். கடைசியில் தன்னுடைய கருத்தைச் சொல்லுகின்ற போது மிக உறுதியாக சொல்லுகின்றான்.

‘‘நான் தீர்மானித்துவிட்டேன். அவன் நண்பனைப் போல வந்த எதிரியாக இருந்தாலும் கூட ஏற்றுக் கொள்வேன். ஏன் இராவணன் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்’’ என்று சொல்வதில் இருந்து ராமனின் உறுதிப்பாடு தெரிகின்றது.மித்ர பாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சனதோஷோ யதியபி தஸ்ய ஸ்யாத் ஸதாதம் ஏதத் அகர்ஹிதம் - (யுத்த காண்டம் 18.3)

7. புனர்பூச நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தூரம் நடந்து செல்வதில் விருப்பமுடையவர்கள் என்ற ஒரு கருத்தும் சில ஜோதிட நூல்களில் உண்டு. இது அப்படியே ராமனுக்குப் பொருந்துகிறது. அயோத்தியில் கிளம்பி, கங்கையைக் கடந்து, பல்வேறு நதிகளையும் மலைகளையும் கடந்து, தென்னகம் வந்து, இலங்கைக்குச் போவது வரை, அவன் நடக்காத இடமில்லை. 14 ஆண்டுகள் காடுகளிலும் மலைகளிலும் அவன் நடந்து, நடந்து சென்ற தூரம் அதிகம். “நடந்த கால்கள் நொந்தவோ” என்று திருமழிசை ஆழ்வாரே மனம் பொறாமல் பாடுகிறார்.

8. புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குருபகவானாக இருப்பதால் எப்பொழுதும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டவராகவே இருப்பார்கள். ஸ்ரீராமன் எந்தச் சூழலிலும் அறம் தவறிய காரியத்தைச் செய்ததில்லை. தர்மத்திற்கு விரோதமாக நடந்து கொண்டதில்லை.

9. புனர்பூச நட்சத்திரத்திற்கு இன்னொரு குணமும் உண்டு. மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஏதேனும் ஒரு ஆபத்து என்றால், அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

தாயின் மீதும் தந்தையின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். நட்பினை மதிப்பார்கள். ராமன் தந்தை தாய் மீது கொண்ட அன்பையும், சகோதர பாசத்தையும், சீதையின் மீது கொண்ட அளப்பரிய காதலையும், சீதையை பிரிந்தபோது தவித்த தவிப்பையும், சில நேரங்களில் அவன் தன்னிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டு பேசியதையும் நாம் ராமாயணத்தில் காண முடியும்.

10. புனர்பூசம் 4-ம் பாதம்நட்சத்திர அதிபதி - குரு; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - சந்திரன். கடக ராசி அல்லவா. மிகச் சிறந்த கற்பனை ரசனை மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்றும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீராமன் கலைஉணர்வு மிக்கவனாகவும் ரசனை மிக்கவனாகவும் இருந்தான். தாயைக் குறிக்கக்கூடிய ராசி கடக ராசி. காரகோ பாவநாஸ்தி என்பது போல அங்கு சந்திரன் ஆட்சி பெற்று அதிக பலத்தோடு இருப்பது என்பது, ஒரு விதத்தில் தாயினுடைய அன்பையும் அளவற்ற நன்மதிப்பையும் புகழையும் பெற்றுத் தருவதாக இருந்தாலும் கூட, தாய்க்கும் தனயனுக்கும் ஏற்படுகின்ற சில இழப்புகளையும் தவறான புரிதலையும் மனவருத்தங்களையும் சுட்டிக்காட்டும் என்பது அடிப்படை ஜோதிட விதி. அந்த அடிப்படையில் மிக மிக அன்பு பாராட்டிய வளர்ப்புத் தாயான கைகேயியே ராமபிரான் காட்டுக்குச் செல்ல காரணமாக இருக்கிறாள். ராமன் காட்டுக்குச் செல்வதை குறித்து பெற்ற தாய் கோசலை வருந்துகிறாள். தசரதனுடைய இறப்பால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, புனர்பூச நட்சத்திரத்தின் குணங்கள் ஸ்ரீராமனுக்கு வந்ததா, அல்லது ஸ்ரீராமபிரான் குணங்கள் அவர் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்றதா என்பது குறித்து நுட்பமாக ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, ஸ்ரீராமபிரானுடைய குணங்கள்தான் புனர்பூச நட்சத்திரம் தனக்குரிய குணங்களாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இப்படி சிறப்பு பொருந்திய புனர்பூசமும் வளர்பிறை நவமியும் இணைந்து வரும் ஸ்ரீராமநவமியை அவசியம் கொண்டாடவேண்டும். விடியற் காலையில் எழுந்து நீராடி ஸ்ரீராமனின் அருட்பாடல்களைப் பாடவேண்டும். ராமன் உச்சி காலத்தில் அவதாரம் செய்தான். அதனால் நண்பகல் வேளையில் ராமநவமி பூஜையைச் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் ஸ்ரீராமருடைய படத்திற்கு சந்தனம் குங்குமம் அணி வித்து மலர் மாலைகளை சாற்றி ஸ்ரீராம நாமத்தைச் சொல்ல வேண்டும். பஞ்சாமிர்தம், பானகம், நீர் மோர் பாயாசம், வடை போன்றவற்றை நிவேதனமாகச் சமர்ப்பிக்கலாம். ராம நாம ஜபம் செய்யலாம். இந்த ஜபத்திலும் வாயால் சொல்லுகின்ற ஜபம் உண்டு. கையால் எழுதுகின்ற ஜபம் உண்டு. கையால் ராமஜெயத்தை எழுதுவதை லிகித ஜபம் என்பார்கள்.

ஸ்ரீராமாயணத்தை பாராயணம் செய்யலாம். குறிப்பாக சுந்தர காண்டம் படித்து பட்டாபிஷேகம் படிக்கலாம். இப்படிக் கொண்டாடுவதால் என்ன பலன்களை அடையலாம் என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

1. குடும்ப ஒற்றுமை நீடிக்கும்
2. நல்ல உறவுகள் தேடி வரும்
3. உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் வரும்
4. செல்வம் கூடும்.  

இதைச் சொல்லும் கீழ்க்கண்ட பாடலையும் ஓதலாம்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித்   தீருமே
இம்மையே ராமா என்றிரண்டு எழுத்தினால்.

தொகுப்பு: தேஜஸ்வி

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்