×

மனநோயை போக்கும் தம்பிக்கலை ஐயன்

நம்ப ஊரு சாமிகள்

செட்டிக்காடு - ஈரோடு மாவட்டம்


ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் பாதையில் செட்டிக்காடு என்ற கிராமம். இங்கிருந்து தென்புறமாகப் பிரிந்து செல்லும் கிராமத்துச் சாலையில் தம்பிக்கலை ஐயன் கோயில் உள்ளது. வெகு காலத்திற்கு முன்பு ஸ்வர்ணபுரி என்றழைக்கப்பட்ட தங்கமேடு பகுதி, அடர்ந்த வனமாக இருந்தது. இப்பகுதியில்
இங்குமங்குமாக சில மக்கள் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து வந்த காலமது. இந்தக் குழுக்களில் ஒன்றின் பெருந்தனக்காரராக தம்பி என்பவர் இருந்து வந்தார். விவசாயியான இவருக்கு மாட்டுப்பண்ணை ஒன்று இருந்தது. இப்பண்ணையிலிருந்த காராம் பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று வரும் பொறுப்பைத் தன் தம்பியான நல்லய்யனிடம், தம்பி ஒப்படைத்தார்.

பசுவின் மடியில் பால் குடித்த பாம்பு


நாள்தோறும் ஸ்வர்ணபுரி வனத்திற்கு மேய்ச்சலுக்குப் பசுக்களை ஓட்டிச் செல்வான் நல்லய்யன். ஒருநாள் இவ்வாறு மேய்ச்சலுக்குப் மாடுகளை ஓட்டிச் சென்றுவிட்டுத் திரும்புகையில், ஒரு காராம் பசுவின் மடியில் மட்டும் பால் வற்றியிருந்தது. இதற்கான காரணம் நல்லய்யனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடு மாடுகளை பண்ணையில் கட்டிவிட்டு நல்லய்யன் திரும்பினான். மாடுகளை பார்வையிட வந்த தம்பி, ஒரு மாட்டின் மடி மட்டும் வற்றியிருப்பதைக் கண்டு திகைத்தார். நல்லய்யனை அழைத்து தம்பி விசாரித்தபோது, பதில்கூறத் தெரியாது தடுமாறினான்.

மறுநாள் வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு நல்லய்யன் ஓட்டிச் சென்றான். முதல்நாள் மடி வற்றியிருந்த மாட்டை மிகவும் உன்னிப்பாகத் தொடர்ந்து கவனித்தான். மேய்ந்து கொண்டிருந்த அம்மாடு ஒரு கட்டத்தில் கன்றினைத் தேடும் மாட்டைப் போன்று திடீரென்று குரல் கொடுத்தப்படி கள்ளி மரப் பத்தைக்குள் விரைந்தோடியது. மாட்டைப் பின்தொடர்ந்து நல்லய்யனும் சென்று மறைந்து நின்று அந்த மாட்டைக் கவனித்தான். கள்ளி மரப் பத்தைக்குள் ஓடிய மாடு அங்கிருந்த ஒரு புற்றின் அருகே சென்று நின்றது. அதற்காகவே காத்திருந்தது போன்று புற்றுக்குள்ளிருந்து நாகம் ஒன்று வெளிப்பட்டு மாட்டு மடியின் காம்பின் தனது வாயை வைத்துப் பாலை உறிஞ்சிக் குடித்தது.

இந்த நிகழ்வைப் பார்த்து அதிர்ந்த நல்லய்யன், நாகம் பால் குடித்ததால் அந்தக் காராம் பசுவுக்கு ஏதோ நடக்கப்போகிறது என்று கவலையுற்றான். மாலையானதும் மாடுகளை ஓட்டிக்கொண்டு திரும்பிய நல்லய்யன், தான் கண்ட காட்சியைத் தன் அண்ணன் தம்பியிடம் (அண்ணனின் பெயரே தம்பிதான்) கூறியழுதான். ஆனால் தம்பி, நல்லய்யன் கூறுவதை நம்ப மறுத்தார்.  நல்லய்யனே காராம் பசுவின் பாலைக் கறந்து குடித்துவிட்டுப் பொய் சொல்வதாக எண்ணி அவனைத் தன் தம்பி என்றுகூடப் பாராது அடித்து உதைத்தார்.

அடி தாங்க முடியாது, இங்குமங்குமாக ஓடிய நல்லய்யன் அங்குள்ளோரிடம் நடந்தவற்றைக் கூறியழுதான். தன்னுடன் வனத்துக்கு வந்தால் நடக்கப்போகும் நிகழ்வைப் பார்க்கலாம் என்றும் கூறினான். நல்லய்யன் கூறியதை ஏற்றுக்கொண்ட அக்கம்பக்கத்து மக்கள் மற்றும் தம்பி ஆகியோர் நல்லய்யனுடன் மாடுகளை ஓட்டிக்கொண்டு மறுநாள் வனத்துக்குச் சென்றனர். அனைவரும் கள்ளி மரப்பத்தையருகே மறைந்திருந்து பார்த்தபோது நல்லய்யன் கூறியதைப்போன்று அன்றும் நிகழ்ந்தது. இதனைக்கண்டு அனைவரும் மிரண்டனர். தம்பி, ஏதும் புரியாமல் சிலையாக நின்றுவிட்டார்.

கனவில் தோன்றிய நாகதேவதை

அனைவரும் அவரை ஆசுவாசப்படுத்தியவாறு ஊருக்குள் அழைத்துச் சென்றனர். உண்மை தெரியாமல் தன் தம்பியை, அடித்து உதைத்துவிட்டதை எண்ணி மனம் வருந்தினார் அண்ணன். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய நாகதேவதை, தம்பியாரே, காராம் பசுவின் மடியில் பாலை அருந்தியது நான்தான். எனக்குப் பால் கொடுத்துத் தாகம் தீர்த்ததற்காக உமது வம்சத்தைத் தழைத்தோங்க வைத்துப் பாதுகாப்பேன் என்று கூறியருளிவிட்டு மறைந்தாள்.

கனவிலிருந்து விடுபட்ட தம்பி, எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல், இரவு வேளை என்றும் பாராது தன்னந்தனியே வனத்துள் நடந்து சென்றார். பசுவிடம் பாலருந்திய நாகம் குடிகொண்டிருந்த புற்றின் அருகே சென்றவர் மனமுருக வேண்டிப் பணிந்து வணங்கியவர், அங்கேயே தியானத்தில் ஆழ்ந்தார்.

உயிரிருந்தும் அசையாப் பொருளாய் அமர்ந்தவர்


பொழுது விடிந்தது. தம்பியை காணாது பதறிய அவரது தம்பி நல்லய்யனும் மற்றவர்களும் அலைந்து திரிந்து இறுதியில் வனத்துக்குள் வந்து தேடினர். அப்போது தம்பி தவக்கோலம் கொண்டிருப்பதைக் கண்டனர். எவ்வளவோ முயற்சித்தும் அவரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. வேறு வழி தோன்றாது, அவரை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு ஊர் திரும்பினர்.

மன்னனின் மனம் கவர்ந்த தம்பிக்கலை ஐயன்


தெய்வத்தை நினைத்துத் தவக்கோலம் கொண்ட தம்பி, காலப்போக்கில் தனது தவவலிமையால் பற்பல அற்புதங்களை நிகழ்த்தினார். தம்பியின் தவத்தின் சக்தியைக் கேள்வியுற்ற மலையாள மந்திரவாதி ஒருவன் ஏளனம் செய்தான். முடிவில் அவனே தம்பியிடம் சரணடைந்தார். தம்பியின் மகிமையைக் கேள்விப்பட்ட கலிங்க வேந்தனான விஜயகர்ணன் என்பவன், ஸ்வர்ணபுரிக்கு வந்து அவரைப் பணிந்ததுடன் அவரது சீடனாகவும் ஆனான்.

ஊமையை பேச வைத்த அருட்பெருஞ்சுடர்

கலிங்கத்து வணிகன் ஒருவன், தன் மகள் பிறந்தது முதற்கொண்டு பேசாமடந்தையாக இருந்து வருவதை எண்ணி வருந்தினான். அவனும் தம்பியின் மகிமையைக் கேள்வியுற்று தன் மகளை அழைத்து வந்து அவர் எதிரே அமர வைத்தான். தம்பி, தன் தவவலிமையால் அதுவரையில் பேசாமடந்தையாக இருந்த அந்த பெண்ணை வாய் திறந்து பேச வைத்தார். இவ்வாறு பற்பல அதிசயங்களை நிகழ்த்திய தம்பி இறுதியில் அவ்விடத்திலேயே முக்தி அடைந்தார். அவரைத் தெய்வமாகப் போற்றி வணங்கியவர்கள், அவ்விடத்திலேயே அவருக்குக் கோயில் ஒன்றை எழுப்பினர்.

தம்பிக்கு அருளாசி வழங்கிய நாகதேவதைக்கும் சிலை வைத்து வழிபட்டு வரலாயினர். அதன்பின் தம்பி, தம்பிக்கலை ஐயன் என்றழைக்கப்பட்டார். கோயிலின் கருவறையில் தம்பிக்கலை ஐயன் வடதிசை பார்த்தபடி தவக்கோலம் கொண்டு அமர்ந்த நிலையில் உள்ளார். இந்த கருவறைக்குப் பக்கத்தில் நாகேஸ்வரியம்மன் சந்நதி உள்ளது. இச்சந்நதிக்குக் கீழே சுரங்க அறை ஒன்றுள்ளது. இதன் மேலாகத்தான் நாகேஸ்வரியம்மன் சிலை உள்ளது. கீழே உள்ள சுரங்க அறைக்குள் இன்றும்கூட நாகங்கள் உயிருடன் வாழ்ந்து வருகின்றன என்று கூறப்படுகிறது.

பாம்புக்கும் மயிலுக்கும் என்றுமே பகை என்று கூறுவர். ஆனால், மயிலும் பாம்பும் ஒன்றாக எவ்விதப் பகையும் இல்லாது இங்கு உலவுவதை நாம் கண்டு அதிசயிக்கலாம். நாகேஸ்வரியம்மன் சந்நதிக்குப் பின்பக்கமாக உள்ள சுரங்கத்தின் வாசலில் நாகலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன. இச்சந்நதியில் பூஜித்துக் கொடுக்கப்படும் தீர்த்தத்துக்கு அனைத்துவிதமான தோல் நோய்களையும் போக்கிக் குணமாக்கும் சக்தியுண்டு.

தோஷம் உள்ளவர்கள், தோல் நோயாளிகள் ஆகியோருக்கு இங்கு மண் சொம்பில் தீர்த்தம் மந்திரித்துக் கொடுக்கப்படுகிறது. இதேபோன்று வெளியிடங்களில் நாகம் தீண்டியவர்களை தம்பிக்கலை ஐயன் சந்நதியில் படுக்க வைத்துத் தலைக்கு வேப்பிலையை வைத்துவிட்டு அனைவரும் வெளியேறுகின்றனர். பத்தே நிமிடத்தில் விஷம் தீண்டியவர்களை விஷம் முறித்து மீண்டும் எழுப்பி வைத்து விடுகிறார் தம்பிக்கலை ஐயன் என்னும் நம்பிக்கை இப்பகுதியில் நிலவுகிறது.

மன நோய்களை போக்கும் ஐயன்

புத்தி சுவாதினமற்றவர்களை இங்கு அழைத்து அந்து தொடர்ந்து பத்து நாட்களுக்குத் தங்க வைப்பதுடன், தம்பிக்கலை ஐயனுக்கு மும்முறை பூசை செய்து வந்தால் அவர்களை தம்பிக்கலை ஐயன் குணம் அடையச்செய்கிறார்  என்ற நம்பிக்கையும் இங்குள்ளோருக்கு உள்ளது. ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் பாதையில் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செட்டிக்காடு என்ற கிராமம். இங்கிருந்து தென்புறமாகப் பிரிந்து செல்லும் கிராமத்துச் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தம்பிக்கலை ஐயன் கோயில் உள்ளது. தீராத மன நோய்களைப் போக்கவும்,  கொடிய விஷங்களை முறிக்கவும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கவும் தம்பிக்கலை ஐயனை நாடி வாருங்கள். மனத்தெளிவு பெற்று செல்லுங்கள்...

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?