×

வள்ளுவர் சொல்லும் வித்து!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்

மரம், செடி, கொடி முதலிய தாவரங்கள் பலவும் விதையிலிருந்து முளைக்கின்றன. விதையே அனைத்துத் தாவர வளர்ச்சிக்கும் அடிப்படையான ஆதாரம். விதை இல்லாவிட்டால் தாவரங்கள் இல்லை. விதையை வித்து என்ற சொல்லால் குறிப்பிடுகிறது வள்ளுவம். வித்து என்ற சொல்லை வள்ளுவர் திருக்குறளில் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து.

(குறள் எண் 24)

அறிவுத் திண்மை என்கிற அங்குசத்தால், ஐம்புலன்களாகிய யானைகளை அடக்கி ஆள வேண்டும். அவ்விதம், புலன்களை அடக்கி ஆள்பவன் மோட்ச உலகத்திற்கு வித்தாவான். இவ்விதம் நடப்பவன் பின்னர் வீட்டுலகில் சென்று முளைப்பான் என்பதால் அவனை வித்து என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
 
(குறள் எண் 138)

நல்லொழுக்கமே நன்மைக்கு வித்தாக அமையும். தீய ஒழுக்கம் எப்போதும் துன்பத்தையே தரும்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

(குறள் எண் 361)

அவா அல்லது ஆசை என்பது என்னவென்றால் எல்லா உயிர்க்கும் மறுபிறப்பு என்னும் துன்பத்தை ஓயாது கொடுப்பதற்கான விதையே அது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

(குறள் எண் 85)

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து, பின்னர் மிஞ்சியதையே உண்டு வாழ்கிறவனுடைய வயலில் விதையும் விதைக்க வேண்டுமா என்ன? விருந்தினரை உபசரிக்கும் அன்பர்கள், தங்கள் வயலில் விதையே விதைக்க வேண்டியதில்லை எனக் கூறி விருந்தோம்பல் நெறியைப் புகழ்கிறார் வள்ளுவர். விதைநெல்லையே சோறாக்கி விருந்திட்ட இளையான்குடி மாற நாயனாரின் சரிதத்தைப் பேசுகிறது சேக்கிழார் பக்திச் சுவை, நனி சொட்டச் சொட்ட எழுதிய பெரியபுராணம்.

மாபெரும் செல்வந்தராக வாழ்ந்தவர் மாற நாயனார். சிவனடியார்களுக்கு அன்னமளிக்கும் திருத்தொண்டை நாள்தோறும் மலர்ச்சியோடு புரிந்துவந்தார். இறைவன் அவரைச் சோதிக்க எண்ணினான். காலப் போக்கில் அவரை வறுமை வாட்டத் தொடங்கியது. செல்வம் சுருங்கினாலும் என்ன? கடன் வாங்கியும், பொருளை விற்றும் அவர் தம் அன்னதானப் பணியை அயராது தொடர்ந்து நிகழ்த்தி வந்தார். அவருக்கு அவரின் அன்பு மனைவியும் கைகொடுத்தாள்.

கடும் மாரிக் காலத்தில் ஒருநாள். கொட்டும் மழையில் நள்ளிரவில் அவரது வீடுதேடி வந்தார் ஒரு சிவனடியார். உணவு வேண்டி உரிமையுடன் கதவைத் தட்டினார். அந்தச் சிவனடியாருக்கு உணவளிக்க விரும்பியது இளையான்குடி மாற நாயனாரின் பக்தி மனம். இப்போது என்ன செய்வது? வீட்டில் மணி அரிசி கூட இல்லையே? மனைவியைக் கலந்தாலோசித்தார்.

அவள் நல்ல அறிவுரை தந்தாள். அவள் சொன்னபடி, அன்று காலை கழனியில் விதைத்த விதைநெல்லைக் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சென்று கூடையில் சேகரித்தார். இல்லத்திற்குத் திரும்பி வந்து, தாம் சேகரித்த விதைநெல்லை மனைவியிடம் தந்தார். நெல்லைக் குத்தி அரிசியாக்கினாள் மனைவி. வீட்டுத் தோட்டத்திலிருந்து கீரை பறித்து வந்தாள் அவள். அடுப்பெரிக்க விறகில்லையே? அதனால் என்ன? வீட்டின் சிதிலமடைந்த கூரையிலிருந்த மரக்கட்டைகளை உருவி எடுத்து விறகாக்கி அடுப்பெரித்தாள்.

விரைவில் விதைநெல் அரிசியைச் சோறாக்கி, கீரைக் கறிசமைத்து சிவனடியாரை உண்ண வருமாறு இலையிட்டு அழைத்தார் மாற நாயனார். சிவனடியாராக வந்தவர் அடியார் அல்ல, சிவனே அல்லவா? அவரைச் சோதிக்க வந்தவர் அல்லவா அவர்? விருந்துண்ண வந்த சிவன், நாயனாரின் பக்திச் சிறப்பைக் கண்டு நெக்குருகி உமாதேவியாரோடு காட்சியளித்து, அவருக்கு அருள்செய்தார் என்கிறது பெரிய புராணம்.

அன்பனே அன்பர் பூசை
அளித்தநீ அணங்கி னோடும்
என்பெரும் உலகம் எய்தி
இருநிதிக் கிழவன் தானே
முன்பெரு நிதியம் ஏந்தி
மொழிவழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே
அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான்.
என இளையான்குடி மாற நாயனாரின்


பக்திச் சிறப்பைப் பதிவு செய்கிறது தெய்வப் புலவர் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம். விதையின் அளவுகள் வேறுபடும். அவற்றில் சிறிய விதைகளும் உண்டு. பெரிய விதைகளும் உண்டு. பனைமரத்தின் விதையோ பெரியது.

ஆனால் பெரிய விதையால் விளைந்த பனைமரம் நிற்க நிழல் தராது. ஆலமரத்தின் விதை, குளத்தில் வாழும் சிறிய மீன் இட்டுவைக்கும் முட்டையை விடச் சிறியது. ஆனால், சிறிய விதையால் உருவான ஆலமரமோ ஒரு அரசன் தனது யானை குதிரை தேர் காலாட் படைகளுடன் நிற்கவும் நிழல் தருமளவு பரந்து விரிந்து வளரும்.

எனவே சிறியோரெல்லாம் சிறியோருமல்லர். பெரியோரெல்லாம் பெரியோருமல்லர்!என்ற கருத்தைப் பேசுகிறது அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை என்று சொல்லப்படும் வெற்றிவேற்கையில் வரும் ஒரு பாடல்;

‘தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலாகாதே!
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிய தாயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலாகும்மே.


`பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்!’


விதையின் அளவை வைத்து ஒரு அரிய நீதியை அழகாகச் சொல்லிவிட்டது இந்தப் பாடல்.

(வள்ளுவர் சொல்லும் வித்து தொடரும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Tags : Valluvar ,
× RELATED திருக்குறளில் வேள்வி!