×

அஷ்டபந்தனம் என்றால் என்ன?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆலயங்களில் நடைபெறும் மிகப் பெரிய நிகழ்ச்சி குடமுழுக்கு எனப்படும் கும்பாபிஷேகமேயாகும். இது அநாவர்த்தம், ஆவர்த்தனம், புனராவர்த்தனம், அந்தரிதம் என நான்கு வகைப்படும். கோயில்கள் இல்லாத இடத்தில் புதியதாக ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்வது அநாவர்த்தனம் என்றும், கோயில் இருந்து கால ஓட்டத்தில் மண்மேடாகி காடு அடர்ந்த இடங்களில் இருக்கும் பழைய கோயிலைப் புதுப்பித்து பொலிவு பெறச்செய்வது ஆவர்த்தம் என்றும், நடைமுறையில் அன்பர்களால் வழிபடப்பட்டு பூசைகள் நடைபெறும் கோயிலில் செய்யப்படுவது புனராவர்த்தனம் என்றும் அழைக்கப்படும்.

கோயிலுக்குள் மக்கள் இறந்துபோதல், உயிர்கள் கொல்லப்படுதல், பன்றி, குரங்கு, நாய், கழுதை போன்றவை புகுந்து சேதப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளால் உண்டாகும் குற்றம் நீங்கச் செய்யப்படுவது அந்தரிதம் எனப்படும். இந்த நான்கிலும் குடமுழுக்கு விழாவின் முதன்மை அங்கமாக இருப்பது பந்தன மருந்திடுதல் எனப்படும் மருந்து சாத்துதலாகும். இந்த பந்தனமருந்து எட்டுப்பொருட்களை இடித்துச் சேர்த்து கலந்து செய்யப்படுவதால் `அஷ்டபந்தன’ மருந்து என்னும் பெயர் பெற்றது. இதற்கு அஷ்டபந்தனம் என்பதே பெயராகும் என்றாலும், மக்கள் பேச்சு வழக்கில் இதனை மருந்து என்று அழைக்கின்றனர்.

பந்தனம் என்பது இணைப்பதைக் குறிக்கிறது. எட்டுப் பொருட்களின் கலவையாக இருப்பதால் இது அஷ்டபந்தனம் எனப்படுகிறது. இது பீடத்தையும், சிலையையும் உறுதியாக இணைப்பதால் அஷ்டபந்தனம் எனப்பட்டது. குடமுழுக்குவிழா அழைப்பிதழில் இந்த அஷ்டபந்தனத்திற்கு மதிப்பளித்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் என்றே பொறிப்பது வழக்கம். குடமுழுக்கு நாளுக்கு முந்தைய இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்படும்.

இது கருவறையில் அமைந்துள்ள பெரிய பீடத்தில் தெய்வ விக்கிரகத்தை நிலைப்படுத்திய பின், பீடத்தையும் சிலையையும் இணைக்கும் உருண்டைகளாக இருக்கும் அஷ்டபந்தனத்தை, உரலில் இட்டு எருமை வெண்ணெய் சேர்த்து இடிப்பர். இப்படி இடிப்பதால் உறுதியான கல்போல் கெட்டியான அஷ்டபந்தனம் இளகும். இது பிசைந்து உருட்டித் திரட்டும் வகையில் வந்தபின், அதை எடுத்து பலகையில் வைத்து உருட்டி நீண்ட கயிறுபோல் ஆக்கி பீடத்திற்கும் சுவாமிசிலைக்கும் உள்ள இடைவௌியில் நன்கு அழுத்தி திண்டுபோல் அமைப்பர். இதுவே, அஷ்டபந்தனம் சார்த்துதலாகும். இப்போது சிலையும் பீடமும் ஒன்றாக இடைவெளியின்றி இருக்கும்.

இந்த திண்டுக்கு மேல் செந்தூரத்தை வெண்ணெயில் கலந்து பூசுவர். சற்று நேரத்தில் இந்த மருந்துக்கலவை இறுகிக் கெட்டியாகிவிடும். அஷ்டபந்தன மருந்து அணிவிக்கப்பட்டதும், சிலைகளுக்கு நல்லெண்ணெய் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். அன்பர்கள் வரிசையில் நின்று சிலைகளுக்கு எண்ணெய் வைப்பர். அஷ்டபந்தனம் என்பது தெய்வச்சிலையையும், பீடத்தையும் மந்திரப்பூர்வமாக இணைப்பதன் அடையாளமாக அணிவிக்கப்படுவதாகும். இது பன்னிரண்டு ஆண்டுகள் வரை விண்டு உடைந்து போகாமல் இருக்கும். அஷ்டபந்தன மருந்து இளகிவிட்டாலோ, சிதைந்தாலோ துண்டு துண்டாகப் பெயர்ந்துவிட்டாலோ, பிராயச்சித்தம் செய்து மீண்டும் மருந்து சார்த்த எளிய நிலையில் மந்திரஜெபம் செய்து கலசநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

அஷ்டபந்தனம் அணிவிப்பது முக்கிய மந்திர நிகழ்வுகளில் ஒன்றாக இருப்பதால், அதற்கான அஷ்டபந்தன மருந்தை இடித்து இளகச்செய்யும் பணியைத் தூய்மையான இடத்தில் செய்ய வேண்டும். நல்ல நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு கோயிலின் முற்றத்தில் இடத்தைப் பெருக்கித் துடைத்து மந்திரநீர் தெளித்து மந்திரப் பூர்வமாகவும், செயல் பூர்வமாகவும் தூய்மை செய்ய வேண்டும். இதில் தேவைக்கு ஏற்ப மரத்தாலான உரல்கள் உலக்கைகளை வைத்து பின்னர் சிவாச்சாரியாரைக்கொண்டு உரல், உலக்கை ஆகியவற்றையும் மருந்தை ஏந்திச் செல்லும் தட்டையும் உரிய மந்திரங்களால் பூஜை செய்ய வேண்டும்.

பின்னர் மருந்து உருண்டைகளை உரலிலிட்டு எருமை வெண்ணெயைச் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும். பெண்களுக்கு முக்கியம் அளிக்கும் வகையில் பெண்களைக்கொண்டு மருந்துகளை இடிப்பர். இந்த மருந்து இடிக்கும் பணி செய்வதால் நல்ல மணவாழ்வும் குழந்தைப்பேறும் கிடைக்கும் என்பதால், பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொள்கின்றனர். ஒரே உரலில் இரண்டு உலக்கைகளைக் கொண்டு மாறிமாறி இடிப்பதால் வேலை எளிதில் முடியும் என்பதால் அம்முறை கையாளப்படுகிறது.

பொதுவாக அஷ்டபந்தனம் அணிவிப்பதே சிறந்ததாகும். என்றாலும், அன்பர்கள் தங்களுக்குள்ள வசதி வாய்ப்புகள் ஏற்ப மெல்லிய வெள்ளி தங்கத் தகடுகளில் கொடி பூவேலைகளைச் செய்து அஷ்ட பந்தனத்தின் மீது பதிக்கின்றனர். வெள்ளியை பதிப்பது அஷ்டபந்தன ரஜிதபந்தம் என்றும், தங்கத்தைப் பதிப்பது அஷ்டபந்தன சுவர்ணபந்தனம் என்றும் அழைக்கப்படும். (சிலர் வெள்ளியை உருக்கி ஊற்றவேண்டும் என்பர். அது சரியானதல்ல. அஷ்ட பந்தனம் இன்றி செய்யப்படும் வெள்ளி பந்தனத்தால் பயனில்லை என்பதே பலரது கருத்தாகும்.) அஷ்டபந்தனம் செய்வதால் மந்திரப் பூர்வமாக நிலைப்படுத்தப்படும். இறைசக்தி அந்ததெய்வச் சிலை வடிவில் நீங்காது இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இனி, அஷ்டபந்தனத்தில் இடம் பெறும் பொருட்களையும், அவற்றை கலந்து மருந்து தயாரிக்கும் முறைகளையும் சிந்திக்கலாம்.அஷ்டபந்தனத்தில் இடம்பெறும் எட்டுபொருட்கள்
1. கொம்பரக்கு, 2. சுக்காங்கல், 3. குங்கிலியம், 4. நற்காலி, 5. செம்பஞ்சு, 6. ஜாதிலிங்கம், 7. தேன்மெழுகு, 8. எருமை வெண்ணெய் என்பனவாகும்.இதில் பரக்கு என்பது ஒருவகை மரத்தின் பிசின். இது சிவப்பாக இருக்கும். பட்டையுடன் இருப்பதே உயர்ந்ததாகும். இந்த பொருளே மற்ற பொருட்களை ஒன்றாக இணைத்துப் பிடிக்கும் அடிப்படை ஒட்டுப்பொருளாகும். எனவே இதை வாங்கும் போது தரமானதாகவும், உயர்ந்ததாகவும் வாங்க வேண்டும்.

சுக்கான் என்பது ஒருவகை கல்லாகும். சுண்ணாம்புக்கல் இனத்தைச் சேர்ந்தது. இதில் வெள்ளைச் சுக்கான், கருப்புச் சுக்கான் என்று இருவகைப்படும். இதில் வெள்ளைச் சுக்கான் கல்லே சிறந்ததாகும். இதனைச் சுட்டுப் பொடியாக்கிக் கொள்வர். ரவைமணல் போல் இருக்கும். சுண்ணாம்பைக் கொண்டு செய்வதைவிட சுக்காங்கல் பொடியைக் கொண்டு செய்யப்படும் சிலைகள் அதிக நாள் இருக்கும்.குங்கிலியம் தேவதாரு மரத்தின் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதுவும் கெட்டி யாக ஒட்டுவதற்கு உபயோகமாகும். குங்கிலியத்தை நெருப்பில் இட்டால் எரிந்து பெரும் புகையை உண்டாகும். காவி என்பது ஒருவகை மண்ணாகும்.

காவி தீயசக்திகளை விரட்டும் சக்தி கொண்டது. அதனால் வீட்டின் முன்புறம் இடப்படும் கோலத்திலும் கோயில்களின் வெளிச்சுவரிலும் பட்டையாகத் தீட்டுகின்றனர். தெய்வவடிவத்திற்குள், தீயசக்திகள் வந்து அமர்ந்து விடாதிருக்கவே காவி சேர்க்கப்படுகிறது. இந்த மண் பலவகை சிவப்பு நிறங்களைக் கொண்டது. இதில் அடர் சிவப்பான அரக்கு நிறத்தில் இருப்பதைத் தேர்ந்தெடுத்து அஷ்டபந்தனத்திற்கும் சேர்ப்பர். ஜாதிலிங்கம் என்பது இரும்பு போல் கனமானது. விலை உயர்ந்து. அஷ்டபந்தனத்தில் முக்கியமான பொருள் இதுவேயாகும். இதிலும் பல வகைகண்டு. தேன்மெழுகு, தேன்அடையில் இருந்து பெறப்படுவதாகும். இது வெள்ளை, மஞ்சள் என்று இருவகையாக உள்ளது. மஞ்சள் வகையில் தேனும், அதன் பிசுபிசுப்பும் இருக்கும். அதனால், வெள்ளைத் தேன் மெழுகைப் பயன்படுத்துகின்றனர்.

எட்டாவதான பொருள், எருமை வெண்ணெயாகும். இதில் பசும்பாலில் இருப்பதை விட கொழுப்பு குறைவு. அத்துடன் நீர்ச் சத்தும் குறைவாக இருக்கும். நீர்ச்சத்தையும் அகற்றியே பயன்படுத்த வேண்டும். புதிய மண் சட்டியில் இட்டுவைத்தால் சட்டி வெண்ணெயில் உள்ள ஈரப் பதத்தையும், நீர்ச்சத்தையும் இரண்டொரு நாளில் இழுத்துக் கொள்ளும். இதற்காக பெரிய பானையைக் கவிழ்த்து அதன் மேற்பரப்பில் வெண்ணெயை அதில் தட்டி வைப்பர். இதனால் வெண்ணெயில் இருந்து நீர்ப்பகுதி விரைவில் இழுத்துக் கொள்ளும்.

முதலில் மேலே சொன்னவற்றில் அரக்கு, நற்காவி, சுக்காங்கல், குங்கிலியம், ஜாதிலிங்கம் ஆகியவற்றை தூளாக்கி தூசு தும்பு நீக்கி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். உரல் குழியிலும், உலக்கையிலும் வெண்ணெயைப் பூசிக் கொண்டு ஒன்றையடுத்து ஒன்று ஒவ்வொரு பொருளாக இட்டு இடிக்க வேண்டும். இவை திரண்டு, களிமண் போல் ஆகும். அதை உருண்டையாக்கி சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் பொருளின் தூய்மை, சேர்மான அளவு, இடிக்கும் காலம் ஆகியவை முக்கியமானதாகும்.அஷ்டபந்தனத்தைக் குறித்த பாடல் ஒன்று, அதிலுள்ள பொருட்களைப் பட்டியலிட்டுக் கூறுவதை பார்ப்போம்;

கொம்பரக்கு சுக்கான்தூள்
குங்கிலியம் நற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம்
தேன்மெழுகு - தம்பழுது
நீக்கிஎருமை வெண்ணெய்
கூட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்.

என்பதாகும்.

மேலும், நடராஜ சதகம் எனும் நூல், அஷ்டபந்தனத்தில் உள்ள எட்டுப் பொருட்களையும், எந்தெந்த விகிதத்தில் கலந்து இடிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது;

கொம்பரக்கு ஒருபங்கு திரிபங்கே கரும்
குங்கிலியம் மூன்று சுக்கான்
கொண்ட முக்காற்பங்குகாவிக்கல்வெண் மெழுகு
கூறு நவனிதம் மூன்று
செம்பஞ்சு அத்தொகை இலிங்கமே காற்பங்கு
சேர்த்திடித்து இளமெழுகுபோல்
செய்வது உயர் அட்டபந்தனவித்யதென்றுமறை
செப்பினை லிங்கமாதி
விம்பீடத்தணிந்துயர் சம்பரோட்சணம்

அயன்பொழுதில் அபிஷேக மாமம்
விதிசெய அமந்தனைகொல் அதுபெயர்ந்திடில் அரசு
வியன்ராஜ்ய விநாசம்
செம்பதுமவல்லி தனது அம்புய நல்வீடெனத்
தினமும் அகலாதுவாழும்
சிவசிதம்பர வாச சிவகாமி உமைநேச
ஜெகதீச நடராஜனே.

என்பதாகும்.

இதில் அஷ்ட பந்தனத்திலுள்ள பொருட் களில் அளவு முறைகளை கூறியதுடன், அஷ்டபந்தன மருந்து ெபயர்ந்து போனால் அரசுக்கு பெரிய அழிவை உண்டாக்கும் எனும் பலனும் சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அஷ்டபந்தனம் சாத்திய பிறகு நாற்பத்தெட்டு நாள்வரை தயிர், எலுமிச்சம்பழம் போன்ற புளிப்புத் தன்மையுள்ள பொருள்களால் அபிஷேகம் செய்யக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அஷ்டபந்தனம் என்பது இடித்து சாத்திய பின் சில மணி நேரத்தில் கல்போல் இறுகி விட வேண்டும். அதே இறுக்கம் பன்னிரண்டு ஆண்டு களுக்கு மேலாகத் தளராது இருக்கும். அஷ்டபந்தனத்தை மர உரலில் இட்டு இடித்தே சார்த்த வேண்டும். இப்போது அன்பர்கள் கல் உரலைப் பயன் படுத்துகின்றனர். அது சரியானதல்ல என்பது பலர்கருத்தாகும்.

நெருப்பில் காய்ச்சி அஷ்டபந்தனத்தை இளகச் செய்து அணிவிக்கும் முறையும் வந்துள்ளது. சூடுபடுத்துவதால் அஷ்டபந்தன மருந்தின் தெய்வீகத் தன்மை மாறிவிடுகிறது என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.அஷ்டபந்தனமே உறுதியானது என்றாலும், சிலைகளை பீடத்தோடு நன்கு அசையாமல் உறுதியாகப் பிடிக்க திரிபந்தனம் என்னும் கலவையையும் பயன்படுத்துகின்றனர். முதலில் திரிபந்தனத்தை இட்டு சிலையை நன்கு நிலைப்படுத்திய பின் பீடத்திற்கும் சிலைக்கும் உள்ள இடைவெளியில் அஷ்டபந்தனத்தை இட்டு உறுதிப்படுத்துகின்றனர். சிலைகளும் பீடங்களும் சிறியதாக இருப்பினும் பெரியதாக இருப்பினும் திரிபந்தனம் அஷ்டபந்தனம் அணிவிப்பதே வழக்கமாகும்.

அஷ்டபந்தனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாகவும், அவை மகிழும் பொருட்டு பூஜை செய்த பின்னரே இடிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். தஞ்சைப் பெருவுடையாருக்கு கருவூரார் செய்த அஷ்டபந்தனம் தஞ்சைப் பெரியகோயிலைப்பற்றி பல கதைகளில் ஒன்று, தஞ்சைப் பெருவுடையாருக்கு அஷ்டபந்தனம் சாத்தியது தொடர்பான ஒன்றாகும். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டுவித்த ராஜராஜன், அதில் எழுந்தருளியுள்ள தஞ்சைப் பெருவுடையார் அஷ்டபந்தனம் செய்தான். அஷ்டபந்தனம் உறுதியாகப் பிடிக்காமல் இளகி ஓடிய படியே இருந்ததாம். அவன் கருவூர்த் தேவரை அழைக்க விரும்பினான். ஒரு காக்கையின் காலில் செய்தி ஓலையைக் கட்டி அனுப்பினான்.

காகத்தின் மூலம் செய்தி அறிந்த கருவூரார் அவ்விடத்திற்கு வந்தார். தன் வாய்த் தம்பூலத்தை உமிழ்ந்து சார்த்த அஷ்டபந்தனம் கெட்டிப்பட்டதாம். (திருவானைக்காவில் சிலந்தியின்வாய் உமிழ் நீரால் உருவான சிலந்தி வலையைப் பெருமான் ஸ்ரீவிமானாக ஏற்று அருள்பாலித்ததைப் போலவே, சித்தர் கருவூரார் வாய்த் தம்பூலத்தையும் ஏற்று அருள்பாலித்தான் என்பர்)குங்கிலியம் என்பது தேவதாரு மரத்தின் பாலில் இருந்து பெறப்படுகிறது. தேவதாரு மரப்பாலைக் காய்ச்சி வடிப்பதன் மூலம் எண்ணெய் ஒன்றையும் அதிலிருந்து படியும் வண்டலையும் பெறுகிறோம். இந்த எண்ணெயைக் கற்பூரத்தைலம் என்றும் வண்டல் படிவை குங்கிலியம் என்றும் அழைப்பர். கற்பூரத் தைலத்தை ஆங்கிலத்தில் டர்பன்டைன் என்பர்.

சாதிலிங்கம் இயற்கைப் பொருள் அல்ல. இது சித்த முறைப்படி கட்டிய கட்டுச் சரக்காகும். கந்தகத்தையும், பாதரசத்தையும் கலந்து நன்கு தூளாகும் வரை குழி அம்மியில் இட்டு அரைத்து மேலும் கந்தகம், வெள்ளீயப் பொடி, பொட்டிலுப்பு சேர்த்து மண்சட்டியில் இட்டு வைத்து எரித்து ஆறியபின் எடுக்க சட்டியின் விளம்பில் சாதிலிங்கம் கட்டிகட்டியாக இருக்கும் இதை எடுத்து தூள் செய்து பயன்படுத்துவர், இது விலை உயர்ந்த சரக்காகும்.

ஜி.ராகவேந்திரன்

Tags : Ashtabandana ,
× RELATED திம்மராய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்