×

ஐயம் தெளிவோம்

அரசமரத்தையும், வேப்பமரத்தையும் குறிப்பிட்ட நாட்களில்தான் வலம் வரவேண்டும் என்கிறார்களே, அப்படியா? அப்படி அவற்றை வலம் வருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?

அரசமரத்தையும், வேப்பமரத்தையும் குறிப்பிட்ட நாளில்தான் வலம் வரவேண்டும் என்பதில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வலம் வந்து வணங்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையுடன் வலம் வரும்போதுதான் பார்க்க வேண்டும். அரசமரம் என்பது இறைசக்திகளில் புருஷ ரூபமாகவும், வேப்ப மரம் என்பது பெண் ரூபமாகவும் பார்க்கப்படுகிறது. தனக்கு அருகில் வேறெந்த மரத்தையும் வளரவிடாத அரசமரம், வேப்பமரத்தினை மட்டும் தனக்குள்ளேயே வரை அனுமதிப்பது இந்த விஞ்ஞான உலகிலும் நாம் காணும் இயற்கை அதிசயங்களில் ஒன்று.

அரசும், வேம்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தாலும், அவற்றின் கிளைகளும், இலைகளும் அவற்றிற்குரிய தனித்தன்மையோடுதான் இருக்கும். இவை இரண்டும் ஒன்றாக கலந்து, ஒரு புதிய கலப்பின மரத்தினை உருவாக்குவதில்லை. இங்கே ஆண்வடிவம் ஆணாகவும், பெண்வடிவம் பெண்ணாகவுமே வளர்கின்றன. ஆனால், வேம்பின் வேர்கூட அரசமரத்தினை ஒட்டியவாறே வளர்வது ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் கடந்த உண்மை. சிவசக்தியின் ஐக்கியமாக அரசு - வேம்பின் இணைவினை நாம் காண்கிறோம். இறைசக்திகள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றின் தனித்துவம் மறையவில்லை.

ஆணாதிக்கமாக அரசமரம் வலிமையோடு பிரமாண்டமாக காணப்பட்டாலும், அதனுடனேயே செழித்து வளரும் வேம்பின் வடிவில் எல்லா இடங்களிலும் ஒன்றாக இணைந்து வளருவதில்லை. இறை சாந்நித்தியம் நிறைந்த பகுதிகளில் மட்டுமே இவை இரண்டும் இயற்கையாக ஒன்றோடொன்று இணைந்த நிலையில் வளர்ந்திருக்கும். அத்தகைய இடங்களில் வளர்ந்திருக்கும் மரங்களைச் சுற்றி வந்து வணங்கினால் மட்டுமே பலன் கிடைக்கும். இது சிவசக்தியின் இணைவாக இருப்பதால், இவற்றைச் சுற்றி வந்து வணங்குவோரின் குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

கணவன் - மனைவிக்குள் பிணக்கு காணாமல் போகும். தம்பதியருக்குள் சண்டை சச்சரவுகள் நீங்கி தாம்பத்யம் மேம்படும். திருமணத்திற்காக காத்திருப்போருக்கு மனதிற்கு பிடித்த வரன் வந்து சேரும். முக்கியமாகப் பிள்ளைப்பேறு வேண்டிக் காத்திருப்போர், அமாவாசை நாளில் நீராடி வலம் வந்து வணங்குவதால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை என்பது சூரியனும், சந்திரனும் இணையும் நாள்.

அதாவது, பசுபதி எனும் ஈசனை பிரத்யதி தேவதையாகக்கொண்ட சூரியனும், கௌரீ எனும் அம்பிகையை பிரத்யதி தேவதையாகக் கொண்ட சந்திரனும் ஒன்றாக இணைகின்ற நாள் அமாவாசை என்பதால், இந்நாளில் பிள்ளைப்பேறு கிட்டாத தம்பதியர் நீர்நிலைகளில் ஒன்றாக ஸ்நானம் செய்து கரையோரத்தில் ஒன்றாக இணைந்து வளர்ந்திருக்கும் அரச-வேம்பு மரங்களைச் சுற்றி வந்து வணங்கினால், சிவசக்தியின் அருளால் விரைவில் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதுவும், சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமை நாளில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமான நாளாகும். பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்போர் அமாவாசை நாளிலும், திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்கள் திங்கட்கிழமையிலும், திருமணத்தடை காணும் பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், குடும்ப ஒற்றுமைக்காக பிரார்த்திப்பவர்கள் எல்லா நாட்களிலும் இணைந்திருக்கும் அரச-வேப்பமரத்தைச் சுற்றி வந்து வணங்கலாம். இயற்கையின் அதிசயத்தில் ஒன்றான இந்த இணைவு இரு உள்ளங்களை ஒன்றாக இணைக்கும் வல்லமை பெற்றது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தொகுப்பு: ஹரிபிரசாத்சர்மா

Tags :
× RELATED சுந்தர வேடம்