×

துர்க்கை தரிசனம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நவராத்திரி ஒவ்வொரு நாளிலும் துர்க்கையை நவ வடிவில் துதிப்பதால் நவகிரகங்களின் அனுகிரகம் கிட்டும். மஹிஷாசுரனை பராசக்தி வதம் செய்த வரலாறு அனைவருக்கும் தெரியும். அந்த அசுரன் வீழ்த்தப்பட்ட இடத்திற்கு ‘மஹாபல கிரி’ என்று பெயர். விக்ரமாதித்த மஹாராஜா ஒரு சிறந்த காளி உபாசகர். இவர் மஹிஷன் சம்ஹரிக்கப்பட்ட அதே இடத்தில், பராசக்திக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டு அவ்வண்ணமே செய்தார். அதுதான் இன்று நாம் தரிசிக்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில்.

துர்க்கம் என்றால் கோட்டை என்று அர்த்தம். தன் பக்தர்களை துன்பங்கள் அணுகாமல் காவல் கோட்டையாக இருந்து காப்பாற்றும் கடவுளை துர்க்கை என்று சொல்கிறார்கள். துர்க்கமன் என்ற அசுரனை அழித்தாள் மகாசக்தி. எனவே அவளை துர்க்கை என்கிறார்கள். துர்க்கை மகிஷாசுரனை அழிக்கும் முன் ஒன்பது நாட்கள் தவமிருந்தாளாம். விஜய தசமி அன்று மகிஷனை அழித்து வெற்றி பெற்றாளாம். நவராத்திரி என்ற சொல்லில் உள்ள ‘ராத்திரி’ என்ற சொல்லுக்கு துர்க்கை என்ற பொருளும் உண்டு. துர்க்கைக்கு உரிய நாட்கள் நவராத்திரி என்று அர்த்தம்.

துர்க்கைக்கு ஏழு வகையான வடிவங்களை விசேஷமானதாகச் சொல்வார்கள். வனதுர்க்கை, சூலினி துர்க்கை, ஜாத வேத துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வால துர்க்கை, சுவர்ண துர்க்கை, தீப துர்க்கை, ஆசுரி துர்க்கை என்பனவாகும்.

அஷ்டபுஜ துர்க்கை

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில், வடக்கு வாயிலில் அஷ்டபுஜ துர்க்கா தேவி அருள்புரிகிறாள். இந்த துர்க்கையை விஷ்ணு துர்க்கை என்றும் சொல்வர். இங்கு வரும் பக்தர்களைக் காக்க உடனே புறப்படுகிற தயார்நிலைத் தோற்றத்தில் நிற்பது சிறப்பாகும். எட்டுக் கரங்களுடைய இந்த துர்க்கையின் கைகளில் ஒன்றில் கிளியை வைத்திருப்பது இன்னொரு சிறப்பாகும்.

சயன துர்க்கை

திருநெல்வேலியிலிருந்து தாழையூத்துக்குச் செல்லும் வழியில், கங்கை கொண்டான் திருத்தலத்திற்கு அருகில் உள்ள ‘பராஞ்சேரி’ என்னும் இடத்தில் படுத்துள்ள கோலத்தில் ‘சயன துர்க்கை’ அருள்புரிகிறாள்.

மேற்கு நோக்கிய துர்க்கை

திருவெண்காடு புதன் திருத்தலத்தில், துர்க்கை மேற்குத் திசை நோக்கி காட்சி தருகிறாள்.

தெற்கு நோக்கிய துர்க்கை

வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும், கும்பகோணம் அருகில் உள்ள அம்மன் குடியிலும், திருவாரூர் ஆந்தக் குடியில் உள்ள சோமேஸ்வரர் ஆலயத்திலும் துர்க்கை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள்.

தலை சாய்த்த துர்க்கை

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரை திருத்தலத்தில் அருள்புரியும் வக்ர காளியம்மன் கோயிலில் அருள்புரியும் துர்க்கை, தலைசாய்ந்த கோலத்துடன் வடக்கு நோக்கி பிரமாண்டமான தோற்றத்தில் அருள்புரிகிறாள்.

பிடாரியின் மீது நிற்கும் துர்க்கை

சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்ட ஈஸ்வரன் கோயிலில் பிடாரியின் மீது நிற்கும் கோலத்தில் துர்க்கை அருள்புரிகிறாள்.

வனதுர்க்கை

குடந்தையிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள கதிராமங்கலம் வனதுர்க்கா கோயிலில் அருள்பாலிக்கும் துர்க்கை, கிழக்கு நோக்கி லட்சுமியின் அம்சமாகத் தாமரைமலரில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

ஆறுகரத்துர்க்கை

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில், வடபுறமுள்ள கோஷ்டத்தில் காட்சி தரும் துர்க்கை, ஆறு கரங்கள் உடையவள். எருமைத்தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். மேலும், இக்கோயிலில் ராஜகம்பீரன் மண்டபத்தில் அர்த்த நாரீஸ்வரர் உருவம் உள்ளது. இங்கு மூன்று தலைகளுடைய துர்க்கைக்கு, எட்டுக் கரங்கள் உள்ளன. இத்திரு உருவை, எட்டுக் கரங்களுடைய இவளை லட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி என்ற முப்பெரும் தேவியர் இணைந்த வடிவம்.

மத்தூரில் உள்ள துர்க்கையின் திருவுருவின் கீழ்ப்புறம் மகிஷனின் முழு உடம்பும் காணப் படுகிறது. மற்ற இடங்களின் துர்காதேவியின் திருவுருவங்களில் பாதங்களின் கீழ் மகிஷாசுரனின் தலைமட்டும் இருக்கும். இங்கு மகிஷனின் ஆணவத்தை அழித்து, அவன் உடம்பின் மீது நின்று துர்காதேவி, ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறாள் என்பது இங்கு வழங்கும் ஸ்தலமான்மியம். புதுக்கோட்டை மலையப்பட்டி சிவாலய குடை வரைக் கோயிலின் சுவரில் துர்க்கை தாமரை மலரில் நின்றபடி எட்டுத் திருக்கரங்களுடன் தரிசனமளிக்கிறாள்.

தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி

Tags :
× RELATED சித்ரா பவுர்ணமி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்.!!