×

ஏன் இரவு நேர பண்டிகை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நவராத்திரி விழா மஹிஷாசுரனை, அன்னை பராசக்தி சண்டிகாதேவி, சாமுண்டியாக அவதரித்து வெற்றிகொண்டதை ஒட்டிக்  கொண்டாடப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் ராமலீலா, மேற்கு வங்காளத்தில் காளிபூஜை, துர்கா பூஜை, கர்நாடகத்தில் தசரா பண்டிகை, என்று பல்வேறு பெயர்களில் இந்த நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது, மூன்று சமயப் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் போன்றோருக்கு உரிய பண்டிகையாக இருந்தாலும் இது பெண் தெய்வத்துக்கு உரிய பண்டிகை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்து  இது இரவு நேரப் பண்டிகை. அதனால் “ராத்திரி” என்று இந்த பண்டிகைக்கு உரிய காலத்தை நிர்ணயித்திருக்கிறார்கள்.

இது புரட்டாசி மாதத்தில் வருவதால் தேவர்களுக்கு இரவு நேரம். ஆடி மாதத்தில் தொடங்கும் (தட்சிணாயணம்) இரவு காலத்தின், மூன்றாவது பகுதி புரட்டாசி என்பதால், அர்த்தஜாம பூஜைக்கு உரிய நேரம். வைணவத்தைப்  பொருத்தவரை, எல்லா திருமால் ஆலயங்களிலும் உள்ள தாயார் சந்நதிகளில், தாயாருக்கு பிரத்தியேகமாக நவராத்திரி உற்சவம் கோலாகலமாகக்  கொண்டாடப்படுகிறது. இதை ஒரு பிரம்மோற்சவமாகக்  கொண்டாட வேண்டும் என்று வைணவ ஆகம நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

மகா நவமி உற்சவம் என்றால் என்ன?

அனந்தாக்ய சம்ஹிதை என்கின்ற நூலில் திருமால் ஆலயங்களில் கொண் டாடப்படும் நவராத்திரி உற்சவம், மகா நவமி உற்சவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறுசில சம்ஹிதைகளிலும் இந்த உற்சவம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பாத்ரபத மாதம் என்று சொல்லப்படுகின்ற, கன்னிராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதத்தில், வளர்பிறை பிரதமை தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்பட்டு, பத்தாவது நாள் விஜயதசமி அன்று நிறைவு பெறுகின்றது.
 
எத்தனை நவராத்திரிகள் தெரியுமா?

ஆனி, ஆடி மாதங்களில் வருவது வராகி நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் நவராத்திரி உண்டு. அதற்கு வசந்த நவராத்திரி என்று பெயர். ஆனால் புரட்டாசி மாதம் வருகின்ற நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். தென்னகத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்
படுவது சாரதா நவராத்திரியாகிய புரட்டாசி நவராத்திரி.  

ஒற்றைப் படிகள்

கொலு என்பது நம்முடைய கற்பனைத்திறன், படைப்புத்திறன், எண்ணங்கள் எல்லாவற்றையும் பிரதிபலிப்பது மட்டுமல்ல; அதில் ஆன்மிக தத்துவமும் அடங்கியிருக்கிறது. அத்தனை உயிரினங்களிலும் அம்பிகை உறைகிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தத் தத்துவம். கொலுப்படிகளை பெரும்பாலும் ஒற்றைப் படையில் வைப்பதுதான் வழக்கம். 5,7,9 என்று ஒற்றைப் படைகளில் படிகளை அமைக்கலாம். மூன்று படிகள் வைத்தால் கூடத் தவறு இல்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பொம்மைகளைச் சேகரித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நீங்கள் படிகளை வளர்த்துக்கொள்ளலாம்.

தொகுப்பு - அருள்ஜோதி

Tags :
× RELATED காமதகனமூர்த்தி