×

வேண்டியதை தரும் விருத்தகிரீஸ்வரர்

ஐந்து திருப்பெயர்கள்

விருத்தாசலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கு விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீசர், விருத்தகிரி என ஐந்து திருப்பெயர்கள் உண்டு.

ஐந்து விநாயகர்கள்

ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தச புஜ கணபதி, வல்லப கணபதி என ஐந்து விநாயகர்கள் உண்டு.

ஐந்து நந்திகள்

ஐந்து கொடிமரங்களின் முன்பும் ஐந்து நந்திகள் எழுந்தருளி உள்ளன. அந்த நந்திகளின் திருப்பெயர்கள், இந்திர நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மால் விடை நந்தி, தர்ம நந்தி.

ஐந்து தேர்கள் ஓடும்
ஐந்து திருச்சுற்று வீதிகள்

தேர்கள் ஐந்து. அந்த தேர்கள் ஓடும் திருச்சுற்றுகள்; தேரோடும் திருச்சுற்று, கைலாயத் திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்ச வர்ணத் திருச்சுற்று.

ஐந்து கோபுரங்கள்

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, கண்டராதித்தன் கோபுரம் என ஐந்து கோபுரங்கள் உண்டு.

பெயர் அதிசயம்

குன்றம் எனும் திருப்பெயரில் தெய்வத் தலங்கள் உண்டு. உதாரணமாகத் திருக்கழுக்குன்றம், திருப்பரங்குன்றம், திருக்கொடுங்குன்றம் முதலானவைகளைச் சொல்லலாம். அங்கெல்லாம் பெயருக்கேற்பக் குன்றுகளும் உண்டு. ஆனால், இங்கே `திருமுது குன்றம்’ என்ற பெயர் மட்டும் உண்டு; குன்று இல்லை. காரணம்? எல்லா மலைகளும் தோன்றுவதற்கு முன் தோன்றிய மலை இது. இது பூமியில் அழுந்தி இருக்கிறது. இதன் காரணமாகவே இங்கு பூமிக்கடியில் கற்பாறையாகவே இருக்கிறது. முதன் முதலில் தோன்றிய மலை என்பதால் `முது குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. வட மொழியில் `விருத்தாசலம்’ எனப்படும்.

கோயில் பெருமை

பெருங்கோயில் இது. கிழக்கு மேற்காக 660 அடியும், தெற்கு வடக்காக 392அடியும் கொண்டது. மதிற்சுவர்கள் 4அடி அகலமும், 26அடி உயரமும் கொண்டவை. நான்கு புறங்களிலும் உயரமான நான்கு, ஏழுநிலைக்கோபுரங்கள் உள்ளன. அவற்றில் புராண வரலாறுகளை விவரிக்கும் பல்வேறு வகையான வடிவங்கள் இடம் பெற்றிருப்பது, காண்பவர் மனதைக் கவரும் வகையில் உள்ளது.

அற்புதமான வடிவங்கள்

கீழ்க்கோபுர வாசலின் தென்பக்கத் சுவரில் 36ம் வடப்பக்கச் சுவரில் 36ம் ஆக, 72விதமான பரத நாட்டியவடிவங்கள், நடனமாடும் பாவனையில் அமைந்துள்ளன. பரத நாட்டியத்தின் பல்வேறு வகை முத்திரைகளையும் நடன அசைவுகளையும் விளக்கும் அற்புதமான வடிவங்கள் இவை. இதன் காரணமாகவே, நடனக்காரர்கள் முத்திரையிலோ அல்லது அசைவுகளிலோ சந்தேகம் வந்தால், இங்கு வந்து பார்த்துத் தெளிவு பெறுவது உண்டு.

ஆழத்துப் பிள்ளையார்

இங்கு ஆழத்துப் பிள்ளையார் எனும் பெயரில், கிழக்கு முகமாக விநாயகர் எழுந்தருளி இருக்கும் சந்நதி விசேஷம். பெயருக்கேற்ப இந்தப் பிள்ளையார், பதினெட்டு அடி ஆழத்தில் எழுந்தருளி உள்ளார். இறங்கித்தரிசிக்கப் படிக்கட்டுகள் உள்ளன. என்ன செய்வதென்று தெரியாமல் பிரம்மதேவர் திகைத்தபோது, அவருக்குத் திகைப்பை நீக்கி உண்மையை உணர்த்தியவர் இந்தப் பிள்ளையார். இதனால், என்ன செய்வதென்று வழியறியாமல் திகைப்பவர்கள் இங்கு வந்து ஆழத்து விநாயகரை வேண்டி, அவர் அருளால் திகைப்பு நீங்குவது இன்றும் கண்கூடு. இங்கு மட்டுமே இப்படிப்பட்ட `ஆழத்துப் பிள்ளையார்’ உள்ளார். வேறு எங்கும் இப்பெயரில் உள்ள பிள்ளையார் இருப்பதாகத்தெரியவில்லை.

திருமால் உண்டாக்கிய தீர்த்தம்
 
இங்கு கைலாசப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் திருமால் தன் சக்கராயுதத்தால் உருவாக்கிய `சக்கர தீர்த்தம்’ உள்ளது. அதைச்சுற்றி நந்தவனங்கள் அமைந்துள்ளன.

ஆகமக் கோயில்

வழிபாட்டு முறைகளை விவரிக்கும் ஆகமங்கள்இருபத்தெட்டு. அந்த இருபத்தெட்டு ஆகமங்களையும் இங்கே சிவலிங்கங்களாக வைத்து, முருகப்பெருமான் பூசித்தார். அந்த

ஆகமலிங்கங்களின் திருநாமங்கள்

காமிகேஸ்வரர், யோகஜேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீப்தேஸ்வரர், குட்சுமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சுப்பிரபேதேஸ்வரர், விஜயேஸ்வரர், நிசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அனலேஸ்வரர், வீரேஸ்வரர், ரௌரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முக பிம்பேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லளிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர்,வாதுளேஸ்வரர் என்பனவாம். சிவாகமங்களில் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய முக்கியத்திருத்தலம் இது.

 அன்னையின் ஆலயம்

இங்கே அன்னை கிழக்கு முகமாகப் பெரிய நாயகி எனும் திருநாமத்தில் கோயில் கொண்டி ருக்கிறாார். வடமொழியில் விருத்தாம்பிகை என்கிறார்கள். பசியால் அழும் குழந்தைக்குக் கனிவோடு பாலூட்டும் தாய்போலக் கருணை கசிந்தொழுகும் கனிந்த திருமுகத்துடன்காட்சி தருகின்றார் அன்னை.

வன்னி மரம்

மிகமிகப் பழமையான வன்னி மரம் தல விருட்சமாக உள்ளது. தேவலோகத்துக் `கற்பக’ விருட்சமே, இங்கே திருப்பணி நடைபெற்ற போது, வன்னி மரமாக வந்து, பழமலைநாதர் திருப்பணிக்கு உதவி செய்ததாகத் தல வரலாறு தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, ஆலயத் திருப்பணி செய்வோர் பொருள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க, இங்கு வந்து இந்த வன்னி மரத்திற்கு விசேஷ வழிபாடுகள் செய்வதுண்டு.

இளமை நாயகி பாலாம்பிகை

விருத்தாம்பிகை என அன்னையைச்சொன்னாலும், இங்கே அன்னைக்கு பாலாம்பிகை எனும் திருநாமமும் தனிக் கோயிலும் உண்டு.  

அபூர்வமான வரலாறு

குரு நமசிவாயர் எனும் மகான், திருவண்ணாமலையில் இருந்து தில்லையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் திருமுது குன்றத்தில் தங்கினார். இரவு நேரம் என்பதால், பசிதாங்கவில்லை மகானுக்கு. அவர் பசி மிகுந்த போதெல்லாம், அம்பிகையை வேண்டிப் பாடுவார். உடனே அம்பிகை வந்து உணவளிப்பார். அந்த முறைப்படி திருமுதுகுன்றூரிலும் அங்கு எழுந்தருளி இருக்கும் அம்பிகையை வேண்டிப் பாடினார்;
நன்றி புனையும் பெரிய நாயகி எனும் கிழத்தி
என்றும் சிவனார் இடக்கிழத்தி - நின்ற
நிலைக்கிழத்தி மேனி முழு நிலக்கிழத்தி
மலைக்கிழத்தி சோறு கொண்டு வா
எனப் பாடினார். அன்னை பெரியநாயகி ஒரு முதியவள் வடிவில் வந்து, “ஏனப்பா? என்னைப் பலமுறையும் கிழத்தி (கிழவி) என்று பாடினாயே! சோறும் நீரும் கிழவியால் எப்படியப்பா கொண்டு வர முடியும்?” எனக் கேட்டார். உடனே குருநமசிவாயர், பாடலை மாற்றிப்பாட அன்னை இளமைநாயகியாக வந்து உணவளித்தார். அந்த அன்னைதான் இங்கு `பாலாம்பிகை’ எனும் திருநாமத்தில் தனிக்கோயில் கொண்டிருக்கிறார்.

பெயரிட்ட அன்னை

கன்னட நாட்டு மன்னர் ஒருவர், துறவுபூண்டு நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் பேறையூர் சாந்தலிங்க அடிகள் எனும் ஞானியிடம் சிவஞான உபதேசம் பெற்றுத் திருமுதுகுன்றை நோக்கி வரும் வழியில், அவருக்குத் தாகத்தால், நாக்கு வறண்டது. அப்போது பழமலை நாதர், வழியில் தண்ணீர்ப்பந்தல் வைத்து, நீர் தந்து துறவியான மன்னருக்கு உதவி புரிந்தார். நீரருந்திக் களைப்பு தீர்ந்த அவர் திருமுதுகுன்றம் வந்ததும், பசி வாட்டத் தொடங்கியது. ஒரு அரசமரத்தின் அடியில் படுத்தவாறே அன்னை பெரியநாயகியைத் தியானித்துப் படுத்திருந்தார் அவர். அப்போது அன்னை பெரியநாயகி, ஒரு முதிய பெண்மணி வடிவில் வந்து, தரையில் பசியால் வருந்திக் கிடந்த துறவியான மன்னரை எடுத்துத் தன் மடிமேல் வைத்து, தங்கக் கிண்ணத்தில் கொண்டு வந்த பாலைப் புகட்டினார். களைப்பு நீங்கிய துறவி, ‘‘நீ யாரம்மா?” எனக்கேட்க, அன்னை பெரியநாயகி, ‘‘குமாரதேவா! நான்தான் உன் அன்னை பெரியநாயகி. உன் பசி தீர்க்க வந்தேன். நீ இங்கேயே இரு!” என்றார்.

அதன்படி அங்கேயே இருந்த அவர், அன்னை பெரியநாயகி இட்ட பெயரான `குமார தேவர்’ என்ற பெயரைக்கொண்டு, அற்புதமான வேதாந்த நூல்களான பதினாறு நூல்களை இயற்றினார். இங்கேயே வாழ்ந்த குமாரதேவர், ஒரு புரட்டாசி மாத பூர நட்சத்திரத்தன்று, பழமலை நாதருடன் இரண்டறக் கலந்தார். ஞானநூல்களைத் தந்த குமாரதேவரின் ஆலயம், திருமுதுகுன்றின் தென் கிழக்கு மூலையில் உள்ளது. வேதாந்த உண்மையை உணர விரும்புபவர்கள், இங்கு வந்து தனியாகத் தியானம் செய்வது வழக்கம்.

சக்கர நாயக சரவணபவன்

இங்கு எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு மேலே, மந்திர மயமான சக்கரங்கள் உள்ளன. இதன் காரணமாக விவரமறிந்த சுப்ரமண்ய உபாசகர்கள் இங்கு வந்து, மந்திரஸித்தி பெறுவதற்காகத் தியானம் செய்வதுண்டு.

கங்கை வழிபாடு

இங்கே ஐம்பொன்னால் ஆன `கங்கை’, விக்ரமாகத் தனி வடிவாக உள்ளது. காசிக்குச் சென்று கங்காதேவி பூஜை செய்ய விரும்புபவர்கள், இங்கே வந்து செய்யலாம். காசியில் கங்காதேவியைப் பூஜை செய்த பலன் கிடைக்கும். `காசிக்கு வீசம் அதிகம்’ எனப் பெருமை பெற்ற இத்திருத்தலம், இதை நிரூபணம் செய்யும்.

Tags : Viruthakriswarar ,
× RELATED விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்