×

தசரதனும் ராமனும் எப்படி ஆண்டார்கள்? வால்மீகியும் கம்பனும் காட்டும் காட்சிகள்

ராமராஜ்ஜியம் என்கின்ற பெயர் “சிறப்பான அரசு”  என்ற பொருளில் தான் வழங்கப்படுகின்றது.
இதை மூன்று விதமாகப்  பார்க்கலாம்.

* ராமருக்கு முன்னால் இருந்த மன்னர்கள், குறிப்பாக தசரதன், ஆளு கின்ற பொழுது எப்படி இருந்தது என்பதையும்,

* ராமபிரான் அந்த நாட்டை எப்படி ஆளவேண்டும் என்று நினைத்தான் என்பதையும்,

* ராமபிரான்  ஆட்சியிலே எப்படி இருந்தது என்பதையும்,

வால்மீகி முனிவர் ராமாயணத்தில் விளக்கமாகப்  பாடியிருக்கிறார். கம்பனும் அதை பல பாடல்களிலே காட்டுகிறார்.ராமாயணத்தில் நல்ல அரசியல் பேசப்பட்டது. அரசியலில் நல்ல ஆன்மிகம் பேசப்பட்டது.இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து, மனிதனின் அக வாழ்க்கையையும், புற வாழ்க்கையையும் மேன்மையான நிலைக்கு உயர்த்தின என்பதை இக்கட்டுரை மூலம் தெரிந்து  கொள்ளலாம்.

தசரதன் ஆட்சியில் நாடு மக்கள்

தசரதனும் அவன் முன்னோர்களும் நாட்டை ஆண்டபோது, ஒருவருக் கொருவர் சோடை போகாமல் ஆட்சி செய்தார்கள். மக்கள் பரிபூரண சந்தோஷத்தோடும் மன நிம்மதியோடும் கவலையற்று வாழ்ந்தார்கள் என்பதை பாலகாண்டத்தில் விளக்கமாகக் கூறுகின்றார் வால்மீகி.

* சரயூ நதியின் இரு கரையிலும் கோசலம் என்கின்ற தேசம் உண்டு. அதில் அளவற்ற தனதான்யங்கள் உள்ளது.
(விவசாயம்)(agriculture)

* ஏராளமான மக்கள் எப்பொழுதும் கவலையற்று ஆனந்தமாக அங்கே வாழ்ந்தார்கள். அதில் அயோத்தியா என்ற ஒரு நகரம் உண்டு. மேடு பள்ளங்கள் இல்லாத சமதள பூமி. நேர்த்தியான தானியங்கள் ஏராளமாய் செழிப்புடன் வளரக்கூடிய பூமி அந்த பூமி. (soil development).

* அங்கே உள்ள தண்ணீரானது கரும்பின் சாற்றைப் போல் இருந்தது. (குடிநீர்) (water supply quality).

* அதிலிருந்து பல இடங்களுக்குப் போகும் சாலைகள் நன்கு பராமரிக் கப்பட்டன. (அடிப்படை கட்டமைப்பு)
(infra structure)

* அடர்ந்த மரங்கள் இருபுறத்திலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
(road arboriculture)

* கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்தன. எதிரிகள் பிர வேசிக்க முடியாத கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. (பாதுகாப்பு, காவல்) (security)

* எக்காலத்திலும் பழங்களும் நிறைந்த மரங்கள் உள்ள தோப்புகளும்  தோட்டங்களும் உண்டு. (சுற்றுச் சூழல்) (environment)

* ராஜ வீதிகள் கோணாமல் ஒழுங்கான நகரத்தின் எல்லை வரை  போகின்றன.(நகர அமைப்பு, டவுன் பிளானிங்) (town planning)

* அங்கே தினந்தோறும் தண்ணீர் தெளித்து புஷ்பங்களை கொண்டு அலங்கரிப்பார்கள்.(அழகு) (aesthetic)

* கடைவீதிகள் அகலமாகவும், ஜனங்களுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் நிறைந்து இருந்தன.( availability of commodity)

*  எப்பொழுதும் மங்களகரமான வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

*  மக்கள்வித்தையிலும் கலைகளிலும் நிபுணர்கள். (experts and specialists)

* அந்த நகரத்தை ஆண்ட மன்னன் தசரதன், நல்ல கல்விப் புலமை மிகுந்தவர். பின்னால் நடக்கப் போவதை முன்னாலேயே யோசித்து எதையும் செய்பவர். நகரத்திலும் நாட்டிலுள்ள மக்களுக்கு பிரியமானவர்.

* குளம் கிணறு வெட்டுவது, தோட்டம் போடுவது முதலிய நல்ல காரியங்களை சதா செய்து கொண்டிருப்பவர்.

* நல்ல  நண்பர்களை உடையவர்.சத்தியத்தில் மிகுந்த ஆசை உள்ளவர்.எந்த விஷயத்தையும் நியாயத்தோடு அனுபவித்தவர்.

* மக்கள் எல்லோரும் திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டி ருந்தார்கள். பிறர் மீது பொறாமை இல்லாமல் இருந்தார்கள்.

* அங்கே பிச்சை கொடுப்பதற்கும்  பிச்சை எடுப்பதற்கும் ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருந்தது.

* அற்பத்தனம் இல்லாதவர்களும், உழைப்பவர்களும்  இருந்தார்கள்.

* படிப்பு இல்லாதவன் யாரும் இல்லை  

* நற்குணமும் ஆசாரமும் பொருந்தியவர்கள் இருந்தார்கள்.

* திருட்டு பயம் அங்கே இல்லை.

* பொய்யன், சாஸ்திரம் அறியாதவன், பொறாமைப்படுபவன், இம்மை மறுமைக்கு வேண்டியதை அடைய முடியாதவன், வேத வேதாந்தங்களை கற்காதவன், விரதங்களை அனுஷ்டிக்காதவன், தானம் கொடுக்க மனம் இல்லாதவன், மனவருத்தம் உள்ளவன், நோயாளி, தேசபக்தி இல்லாதவன், என ஒருவரும் அங்கே இல்லை.

* எல்லோருக்கும் தீர்க்காயுசுடன்  இருந்து, பெண்டு பிள்ளை முதலி யோர்களோடு, சகலவிதமான சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

* தசரதன்  மந்திரிகள் அற்புதமானவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத் துடன் பேசுபவர்கள். அதனால்  மக்கள் சந்தோஷமாக கவலையில்லாமல் வைத்து கொள்வதே அவர்கள் நோக்கம்.
மந்திரிகள் அதர்மத்தில் புத்தியை செலுத்தாமல், ராஜநீதிகளை அனுஷ்டித்தார்கள்.

* நன்னடத்தை உள்ள அவர்கள், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள்.

அரசாங்க பணத்தை தனக்குள்ள பணமாக எடுத்துக் கொள்ளாதவர்கள். குற்றமற்றவர்கள். சாஸ்திரப்படி நடப்பவர்கள். பிறரையும் நடத்துபவர்கள். தேச பக்தி உள்ளவர்கள். தேசிய நலனுக்காக பலவிதமான யோசனை களைச் சொல்பவர்கள் என்று தசரதனுடைய ஆட்சியை மிக அற்புதமாக வர்ணிக்கிறார்.

* அயோத்தியில் கல்விசாலைகளும் மக்களின் கல்வி அறிவும் எப்படி இருந்தன என்பதை கம்பனும் காட்டுகின்றார்.இது தசரதனால் அறநெறிப்படி நிறுத்தப்பட்ட நாடு என அயோத்தியின் அறநிலையைப் பேசுவார் கம்பர்.

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்ணில் கேள்வி
ஆகம் முதல் திண் பணை போக்கி அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.
அரசன் (தசரதன்) எப்படி இருந்தான் என்பதை
தாய் ஒக்கும் அன்பின்; தவம்
ஒக்கும் நலம் பயப்பின்;

சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்
என்ற பாடலில் காட்டுவார்.

தாய் ஒக்கும் அன்பின்; - தன் குடிகள் மேல் அன்பு செலுத்துவதில் தாய் போன்றவன். தாய் அன்பை விட சிறந்த அன்பு ஒன்று இருக்க முடியுமா?
தவம் ஒக்கும் நலம் பயப்பின் - எவ்வளவு தவம் செய்கிறோமோ அவ்வளவு பலன் கிடைக்கும். அதுபோல்,
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்; - உடல் வலி குன்றி, நோய்வாய் பட்டு துன்பப்படும் போது, எப்படி பிள்ளைகள்  தாங்குவார்களோ, அது போல, தசரதன் மூத்த குடிமக்களை காப்பாற்றினான்.

நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; - ஒரு நாட்டில் நல்லவர்களோடு, தீயவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.தீயவர்கள் நோய் போன்றவர்கள். நோயை குணப்படுத்த வேண்டுமே அல்லாமால் நோயாளியை கொல்லக் கூடாது. தசரதன் நோய்க்கு மருந்து போன்றவன். மருந்து கசக்கும். பத்தியம் இருக்கவேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது. அது போல, அளவோடு தண்டனைகளை கொடுத்து, தீயவர்களை திருத்தி நாட்டை காப்பாற்றுவான்.

நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் - மிகவும்  ஆராய்ந்தால்
அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான். மனிதனுக்கு நீங்காத இன்பத்தை எப்போதும் தருவது அறிவு.
நிறைந்த இன்பத்தை தருவதில் அறிவு போன்றவன் தசரதன்.
இதைவிட ஒரு  அரசாட்சியின் சிறப்பை எப்படிச் சொல்ல முடியும்.

பரதன் ஆட்சி

அடுத்து ராமன் எப்படியெல்லாம் ஆள நினைத்தான் என்பதை தன்னைத் தேடி வந்த பரதனிடம் கேள்வி கேட்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
ராமர் பட்டாபிஷேகம் செய்ய முடியாமல் வனத்துக்குப் போய்விடுகிறார். ஆனால், அவர் தன் நாடு  இப்படித்தான் நாடு இருக்க வேண்டும் என் பதைப் பற்றி பலவிதமான எண்ணங்களை கொண்டிருந்தார். அந்த விதி களை எல்லாம் அவர் பரதனுக்கு எடுத்துரைக்கின்றார்.

*  நல்ல  மந்திரிப் பிரதானிகளிடம் ஆலோசனை கேட்கிறாயா?

* தேசபக்தி உள்ளவர்களை, சுயநலம் இல்லாதவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாயா?

*  உன்னுடைய ஆரோக்கியம் முக்கியம் அப்போதுதான் நீ மக்களுக்கு நல் லது செய்ய முடியும். தகுந்த காலத்தில் படுக்கிறாயா? தகுந்த காலத்தில் உணவு உண்கிறாயா?

* ஒவ்வொரு நாள் விடியல் காலையில் அந்தந்த நாளுக்குரிய வேலை களை யோசிக்கிறாயா?

* நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அந்த அரசாங்க ரகசியத்தை காப்பாற்றுகிறாயா?

*  நீ செய்கின்ற காரியம், அது  முடிவதற்குள் மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறதா?

* நீ எந்த விஷயத்தையும் ஒரு குறிப்பிட்டவர்களிடம்  மட்டும் தான் யோசிக்கிறாயா? இல்லை ஒரு குழுவாக பட்சபாதம்இல்லாதவர் களிடத்திலே ஆலோசிக்கிறாயா? (காரணம் நீ ஒருவரிடம் மட்டும் கேட்டால் அவர்கள் சொல்வது சரியாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.)

* தனியாக யோசிக்கும்போது பல குழப்பங்கள் வரும். நீ மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல விஷயத்தை கிரகிக்கிறாயா?

* குறைந்த செலவில்  மிக அதிகமான வளர்ச்சியும் லாபமும் வரும் படியாக யோசிக்கிறாயா?

(இதை ஆங்கிலத்தில் (COST BENEFIT RATIO) என்று சொல்வார்கள். நூறு ரூபாய் செலவு செய்தால் அதனுடைய விளைவு 200 ரூபாயாக வரவேண்டும். ஒருவனுக்கு கல்வி கற்பித்தால், அந்தக் கல்வி, அந்த நாட்டில் உள்ள எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.(NON TANGENTIAL) அவன் அறிவு பெறுவதால் அந்த அறிவு நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் அப்படிப்பட்டவனுக்கு செலவு செய்வதில் ஒன்றும் தவறு இல்லை என்பது போல சில விஷயங்கள் இதில் பேசப்படுகின்றன)

* எந்த காரியத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கிறாயா? இல்லை காலம் ஓடுகிறதா?

*  நீயும் மந்திரிகளும் தனிப்பட்ட முறையில் ஆலோசிப்பது மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றதா?

இல்லை வெளியிலே கசிந்து விடுகிறதா? (GOVT SECRECTS SHOULD NOT BE LEAKEDOFF)

*  நன்கு ஆலோசனை சொல்லக்கூடிய சுயநலமில்லாத அறிவாளிகளை உன்னுடைய குழுவில் நீ சேர்த்துக் கொண்டு இருக்கிறாயா? (EXPERT COUNCIL)

*  மக்களை மிக மோசமான முறையில் நீ தண்டித்து விடுகிறாயா? சாம தான பேத கடன்களை முறையாக பயன்படுத்துகிறாயா? இல்லை எடுத்த எடுப்பிலேயே நீ கடுமையைக்  காட்டுகின்றாயா?

* படைவீரர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளங்களை முறையாக கொடுத்து விடுகிறாயா? அவர்களுக்கு வேண்டிய சலுகைகளை கொடுத்து உனக்கு விசுவாசமாக இருக்கும்படி வைத்துக் கொண்டிருக்கிறாயா?

* உன்னிடத்தில் மிகுந்த அன்பு கொண்டு உனக்காக உயிரும் தரும் படியான நல்லவர்களை நீ உன்னை சுற்றி வைத்துக் கொண்டிருக்கிறாயா?

* உன்னுடைய தூதர்கள் உனக்கான நன்மையை மட்டும் யோசித்து உனக்கு துரோகம் செய்யாமல் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறாயா?

* உன்னிடத்தில் இருந்து பிரிந்து சென்று பிறகு காரணமில்லாமல் உன் னிடத்திலே திரும்ப வருகின்றவர்களை நீ பரிசோதிக்காமல்  சேர்க்கிறாயா?

அவர்கள் நோக்கம் அறிகிறாயா?

*  எந்த நேரத்திலும் உன்னுடைய ராஜ்ஜியத்தை காப்பாற்றுகின்ற அளவில் உன்னுடைய ஆயுத தொழிற்சாலைகளும் வீரர்களும் தயார் நிலையில் இருக்கிறார்களா? (HIGH ALERT OF MILITARY)

* ஒவ்வொரு நாளும் நீ மக்களோடு கலந்து பழகுகிறாயா? உன்னுடைய தரிசனம் ஒவ்வொருநாளும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இல்லா விட்டால் உனக்கு உடல் சௌகரியம் இல்லை என்றும், அவர்கள் உனக்கு ஏதோ அபாயம் நேர்ந்துவிட்டது என்று கதை கட்டி விடுவார்கள். (NO ROOM FOR GOSSIP) அதே நேரத்தில் ஒரு அளவுக்கு அதிகமாக நீ மிகவும் சகஜமாகப் பழகி விடக் கூடாது. அதுவும்  ஆபத்தாக ஆகிவிடும்.

* உன்னுடைய நிதிநிலை அறிக்கை, வரவு அதிகமாகவும்  செலவு கம்மியாகவும் இருக்கும் படியாக கவனத்துடன் தயாரிக்கிறாயா? (NON DEFICIT BUDGET) தேவை யில்லாத சில விஷயங்களுக்கு
அரசாங்கப்  பொருளை வாரி செலவுகிறாயா? (NO MISMANAGEMENT OF GOVT.FUNDS)

*  பணக்காரர்களிடம்  பணம் வாங்கிக்கொண்டு உன் அதிகாரிகள் தப்பு செய்கிறவர்களை விட்டுவிடுகிறார்களா ?(NO  BRIBE AND SCANDAL)  அவர்களுக்கு சரியான தண்ட னையை முறையாக வழங்குகின்றாயா? ஏழைகளுக்கும் பணக் காரர்களுக்கும் வழக்கு நடக்கின்றது பணக் காரர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு உன்னுடைய அதிகாரிகள் அவர்களுக்கு சார்பாக நடந்து கொள்வார்கள். அதை முறையாக நீ கட்டுப்படுத்துகின்றாயா ?

* வேட்டை, சூதாட்டம், பகலில் தூங்குவது, பிறரை குறை சொல்லிக் கொண்டே இருப்பது, பெண்களுடன் சதா கழிப்பது, மதுபானம், பாட்டு கூத்து வாத்தியம் என்று இவற்றிடையே காலத்தை கழிக்கின்றவர்களை தள்ளி வை.  

*  ராஜ்ஜியத்துக்கு தேவையான முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்துகின்றாயா ?
இன்னும் இது போன்ற ஏராளமான கேள்விகள் ராமர் பரதனிடம்  கேட்கின்றார்.

உண்மையில் ராமனின் பிரதிநிதியாக பரதன் அற்புதமாக நாட்டை ஆளுகின்றார்.

ராமன் எப்படி ஆண்டான்?

யுத்த காண்டம் நிறைவுப் பகுதியில் ராமராஜ்ஜியம் எப்படி இருந்தது என் பதை வால்மீகி விவரிக்கிறார்.

* ராமன் தன்னுடைய மக்களை தன் குழந்தைகளைப் போல  பாது காத்தான்.

* ராம ராஜ்யத்தில் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழ்ந்தார்கள். விவாகரத்து முதலிய வழக்குகள்  அங்கே நடக்கவில்லை. ஒருவருக்கொருவர் அனுசரித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.
* ஆரோக்கியம் நல்லபடியாக காப்பாற்றப்பட்டதால்  யாரும் நோய் நொடிகள் வந்து துன்பப்படவில்லை.

* துஷ்ட மிருகங்களின் உபத்திரவம் இல்லை. காடுகளும் நாடுகளும் தனித் தனியாக பாதுகாப்புடன் இருந்தன. பாம்பு கடிக்குமே என்ற பயமோ, வியாதி வருத்துமே என்ற கவலையோ இருக்கவில்லை. ராமன் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் நிம்மதியாக கஷ்டங்கள் எதுவும் இன்றி வாழ்ந்தனர். திருடர்கள் இல்லாமல் உலகம் கவலையின்றி இருந்தது. மற்றவர்கள் பொருளை யாரும் தொடக் கூட மாட்டார்கள்.  

*  மக்களின் பிரச்னைகள்  உடனுக்குடன் தீர்க்கப்பட்டன. காலம் இல்லாத காலத்தில் ஒருவரும்  மரணம் (அகால மரணம் ) அடைய வில்லை.

* எல்லோரும் தர்மத்திலேயே நாட்டம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

*  ராமனுடைய ஆசாரத்தையே மக்களும் அனுசரித்து, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் உபத்திரவம் இல்லாமல் வாழ்ந்தார்கள்.

* ‘‘ராம, ராம” என்றே ப்ரஜைகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், கதைகள் ராமனைச் சுற்றியே, ராமனைப் பற்றியே பேசினர். ராமன் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்களின் மனதில் ராமரே நிறைந் திருந்தார்.

* எல்லா பருவ காலங்களிலும் விசாலமான கிளைகளுடன், பழங்களுடன் மரங்கள் இருந்தன.

* மேகங்கள் அந்தந்த காலத்தில் மழையைப் பொழிந்தன. காற்று சுகமாக வீசியது.

* எல்லோரும் பேராசை அற்றவர்களாக அவரவர் தர்மத்தை அனுசரித்து வாழ்ந்தார்கள். தங்கள் தங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்தனர். தங்கள் செயல்களிலேயே திருப்தியுடன்
இருந்தனர்.

இப்படி அற்புதமாக ராம ராஜ்ஜியத்தைப்  பற்றி வர்ணித்துக் கொண்டே போகின்றார்.இப்படிப்பட்ட ஒரு ராஜ்ஜியம் இருந்தால்  அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
வருக்கும் பெருமை. அந்த ராஜ்யத்தில் இருப்பவர்களுக்கும் பெருமை அல்லவா. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால்,அந்த நாட்டை ஆள்பவர்கள், நாட்டு மக்களின் மீது பிரியம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

அதைப்போலவே நாட்டு மக்களும் நாட்டின் மீதும், நாட்டை ஆள் பவர்கள் மீதும், நம்பிக்கையும், அன்பும், விசுவாசமும் கொண்ட வர்களாக இருக்க வேண்டும்.
ஒருவருக்கு ஒருவர் இப்படி அமைந்த நாடானது, மிகச் சிறப்பாக முன் னேறும் என்பதுதான் இராமாயண மகாகாவியம் நமக்குத் தருகின்ற செய்தி.இப்படிப்பட்ட ஒரு நாட்டையும் அரசனையும் பற்றிய செய்தித்  தொகுப்பு  என்பதால், அரசியல் கற்பவர்கள்  ராமாயணத்தை  பாராயணம் செய்ய வேண்டும்.

அது சகல சௌகரியங்களையும் ஐஸ்வரியங்களையும் தரக்கூடியது என்று வால்மீகி பகவான் சொல்லுகின்றார்.‘பக்த்யா ராமஸ்ய யே சேமாம் சம்ஹிதாம் ருஷிணா க்ருதாம்  லேகயந்தீஹ சநராஸ் தேஷாம் வாஸஸ் திரி விஷ்டபே’இப்படிப்  பிரார்த்தனை செய்வதன் மூலமாகவே தனி மனிதர்களும் அவர் கள் வாழ்கின்ற நாடும்  சீக்கிரத்தில் முன்னேற்றம் காணும் என்று வால்மீகி ராமாயணத்தில் சொல்லுகின்றார். இது சந்தோஷமாக இருப்பதற்கும், சந்தோஷம் அடைவதற்காக வுமான  ஒரு பிரார்த்தனை நாள் என்பதை, நாம் மறக்கக் கூடாது.

பாரதிநாதன்

Tags : Dasarathan ,Rama ,Valmiki ,Kamban ,
× RELATED துபாயில் ஜுன்னா சர்புதீன் எழுதிய இராம காவியம் நூல் வெளியீடு