×

பன்முகப் பார்வையில் பாரதியார்

 இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-78

‘வல்லமை தாராயோ! -
இந்த
மாநிலம் பயனுற வாழ்

வதற்கே!'

- என்று பராசக்தியிடம்

விண்ணப்பம் வைத்தார் மகாகவி பாரதியார். தான் புகழ்பெற்று வாழவோ, தன் குடும்பம் தன்னால் பொருள் பெற்று வளமுடன் வாழ்க்கை வசதிகள் பெறவோ தெய்வத்திடம் வரம் வேண்டவில்லை வரகவி பாரதியார். காளியிடம் ‘யோகசித்தி’ என்னும் தலைப்பில் பாரதி வைக்கும் வரம் என்ன தெரியுமா?

விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி --  வெற்றி
சூழும் வீரமறி வாண்மை
கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் --
 இவை
நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த
நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்கக் -- கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி


இப்படி தன் வேண்டுகோளை இறைவனிடம் வைத்த கவிஞர் தேடிப்பார்த்தாலும் திசைகள் எட்டிலும் அகப்படமாட்டார்.

ஆம்! விசால மனமும், விரிந்த பொதுநோக்கும், அற்புதமான கவியாற்றலும், துறைகள் பலவற்றிலும் தேர்ந்த ஞானமும், புதுமையைப் பூக்கச் செய்தே ஆக வேண்டும் என்ற உத்வேகமும், அனைத்திற்கும் மேலாகக் களத்தில் இறங்கி காரியம் ஆற்றும் வினைத்திட்பமும் ஒருங்கே பெற்ற ஒற்றை மனிதனே பாரதி!

வெள்ளையரின் உள்ளங்கைக்குள் அடங்கும் விரல்களாக மக்கள் அடிமைப்பட்டு, அந்த அடிமைத்தனத்லேயே ஒரு சுகம் கண்டு எவ்வித எழுச்சியும் இல்லாமல் இருந்த நேரத்தில்தான் சூடான கதிர்களைப் பரப்பும் சூரியனாக பாரதியார் தோன்றி னார். அப்போது நாட்டிலோ அடிமையின் அந்தகாரம் சூழ்ந்திருந்தது. மொழியிலோ பழமையின் இருள் படர்ந்திருந்தது. வாழ்வின் நடைமுறைகளிலோ செம்மறி ஆடுகளின் தன்மையே செறிந்திருந்தது!

‘நெஞ்சு பொறுக்கு தில்லையே! - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்’- என்று குமுறிய பாரதி தன் பாட்டுச் சங்கைப் பலமாக ஊதினார்.

‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு! - நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு!’


என்று தீர்க்க தரிசனப் பார்வையில்-தன் சுடர்விடும் விழிகளால் அன்றே சுதந்திர தேவியைக் கண்டார்.
தேசிய கவிஞராக மட்டுமா பாரதியார் பரிணமித்தார்?

அவர் ஒரு பட்டை தீட்டிய வைரம்! பன்முகமாகப் பார்த்தாலும், பல கோணங்களில் உற்று நோக்கினாலும் அவர் பளிச்சிடுகின்றார் பரிபூரணமாக கற்கண்டை எப்பக்கம் சுவைத்தாலும் இனிப்புதானே! பாவேந்தர் பாரதிதாசன் பாரதியாரை அற்புதச் சொற்பதங்களில் அழகாகப் படம் பிடிக்கிறார்.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும்
கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!
திறம்பட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!


முப்பத்து ஒன்பது வயதிலேயே முடிந்து விட்ட
பாரதி கற்ப கோடி காலங்கள்
நின்று நிலைக்கின்ற புகழைப் பெற்றார்!

நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்-என்று தனக்குத் தானே கட்டளையிட்டுக் கொண்டார்.இந்திய நாடு முழுவதையும் கரும எண்ணத்துடன் பார்த்து பாரத மாதா, பாரத அன்னை, சுதந்திர தேவி என்றெல்லாம் பாடுகிற, போற்றுகிற மனோபாவமே பாரதி என்ற மகாகவி மூலமாகத் தான் வந்தது என்று நாம் மார்பு நிமிர்த்திக் கூறலாம்.

முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனில்
சிந்தனை ஒன்றுடையாள்.
‘எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’
ஒருமை பாரதம் ஒளி விட வேண்டும்-


சுதந்திர பாரதம் சுடர்விட வேண்டும்!
என்று விடுதலைப் பாடல்களை வீறுடன் பாடினார்.

சொந்த நாட்டிற் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம்! இனி! அஞ்சிடோம்!


‘என்றெமது அன்னை கை விலங்குகள் போகும்?’
 - இப்படி தேசியக் கவிஞனாக, விடுதலை வீரனாகத் திகழ்ந்த
பாரதியார் வீரத் தமிழனாகச் செந்தமிழ்ப் பற்றாளனாகத் திகழ்கின்றார்!

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி
போல் இனிதாவ தெங்கும் காணோம்”
‘‘செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”


தன் உயிர் நண்பரான பரலி சு. நெல்லையப்பருக்கு பாரதியார் எழுதிய ஒரு கடிதம் ஜீவனுள்ள கவிதை போலவே சுடர் விடுகின்றது. அம்மடலில் தன் தீராத தமிழ்த் தாகத்தை பாரதியார் அற்புதமாக வெளிப் படுத்துகின்றார்.

‘தெய்வீகப் பாவலன் பாரதி’ என்று நாம் பார்த்தாலோ அவரின் விநாயகர் நான்மணிமாலை, கலைமகள், திருமகள், சூரியன் பாடல்கள் இவற்றிற்கெல்லாம் மேலாக புதிய ஆத்திசூடியில் பரம் பொருள் வாழ்த்துப் பாடல் ஒன்று போதும். பாரதியாரின் கடவுட் கொள்கையை எடுத்துக் காட்ட!

 ‘‘ஆத்திசூடி  இளம்பிறை யணிந்து
மோனத்திருக்கு முழு வெண்மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
பலவகையாகப் பரவிடும் பரம் பொருள்
ஒன்றே! அதனியல் ஒளியுறுமறிவோம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமர வாழ் வெய்துவோம்’’


அனைத்து மதங்களையும் இணைத்து, எல்லாவற்றிலும் இழையோடுபவர் ஒரே இறைவனே என்று ‘பொதுமை வணக்கம்’ புகன்ற முதல் முத்திரைக் கவிஞர் முண்டாசு பாரதியே என்று பெருமிதம் பொங்க முழக்கமிடுவோம்!

பெண்ணுரிமைக்குப் பெருங்குரல் கொடுத்து கவிதையிலும், வசனத்திலும் பேசியவர் பாரதியார்!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ் வையம் தழைக்குமாம்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, அஞ்சாத நெறி, ஞானச் செருக்கு நான்கும் செம்மை மாதர்களின் திறம் என்று பழைய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற அகராதிப்பட்டியலை அகழ்ந்து வெளியே வீசினார். தொழிலாளர்களைப் போற்றி ‘மேதினத்தில்’ இன்றும் பலர் மேற்கோள் காட்டி முழக்கம் இடுவது பாரதியின் ஒரு பாடலைத்தான்!

‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!’
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’
‘கலை வளர்ப்போம்! கொல்லர் உலை வளர்ப்போம்!’

திட்டங்கள் தீட்டும் நிபுணராக, அறிவியல் அறிஞனாக,
பொருளாதார மேதையாக பாரதியாரின் பல பாடல்கள்
நமக்கு அவரைப் படம் பிடிக்கின்றது.

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்

பாப்பாப் பாடல்களில் ‘குழந்தைக் கவினாக’ பாரதியார் நம்மோடு குலவுகின்றார்!

‘புதிய ஆத்திசூடியில் பழமையில் தள்ளவேண்டியதைப் பயப்படாமல் புறம் விடுத்து, புதுமையில் மனமுவந்து ஏற்க வேண்டியதைப்புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார். இத்தகைய பாங்கு பாரதியார் ஒருவர்க்கே கை வந்தது !

‘தமிழ் மகள்’ என்று ஔவையாருக்குப் பட்டம் சூட்டிய பாரதி அம்மையார் பாடிய ஆத்திசூடியை மாற்றிப் பாடிய மகோன்னதக் கவிஞர்.

ஆறுவது சினம் - ஔவை மொழி
ரௌத்திரம் பழகு    - பாரதியின் குரல்
தொன்மை மறவேல் - பாட்டியின் வாக்கு
தொன்மைக்கு அஞ்சேல் - பேரனின் நோக்கு
வெட்டெனப் பேசேல், தையல் சொற்கேளேல்,
பழைய ஆத்திச்சூடிவெடிப்புறப்பேசு,
தையலை உயர்வு செய் - புதிய ஆத்தி சூடி.


பரிமாணங்கள் பலவற்றிலும் தன்
பரிணாமத்தை முழுமையாகக் காட்டுகின்றார் பாரதியார்.

காவியம், நாடகம், சங்கீதம், மொழி பெயர்ப்பு, வரலாறு, உலகஞானம், பத்திரிக்கைப் பணி, கார்ட்டூன், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி என பன்மொழிப் புலமை, வேதாந்தம், விஞ்ஞானம் இவ்வாறாக அனைத்தும் இணைந்த அற்புதப் புருஷர், பாரதியார்.

உலகக் கவி, யுகக்கவிஞன் என போற்றப் பெறும் பாரதியார் புரட்சி, பொதுவுடைமை சொற்களைப் புதுமையாக உருவாக்கிப் புழக்கத்தில்விட்டவர். வேதக் கவிதை தொடங்கி வால்ட்விட்மன், ஜப்பானிய ஹைக்கூ என பரந்த பன்முக ஞானம் வாய்ந்தவர். புதிய ருஷியாவை வரவேற்றவர். அறத்தினால் வீழ்ந்து விட்டாய்’ என்று தோற்றுப்போன பெல்ஜியத்தை வாழ்த்தியவர், தெய்வத்தை ‘நாயகி’ பாவத்தில் போற்றிய முதல் ஆன்மிகவாதி. மொத்தத்தில் அவர் எல்லோரையும் போல்  ‘காலஞ் சென்ற’ என்ற சட்டத்திற்கு உரியவர் அன்ழ்று! ‘காலம்வென்ற’ என்ற பட்டத்தின் ஏக போக உரிமையாளர்.

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags :
× RELATED சுந்தர வேடம்