×

சூரிய சூட்சுமங்கள்

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது போல் சூரியன்தான் தலைமைக்கழகம். ஒரு மனிதன் முழு உணர்வோடும்  எண்ணங்களோடும்   இயங்க வேண்டும் என்று சொன்னால், அவனுடைய மூளை நல்ல முறையில் இருக்க வேண்டும். அதுதான் அறிவின் பிறப்பிடம். அறிவு கெட்டு விட்டது என்பதை மூளை கெட்டுவிட்டது என்றுதான் சொல்வார்கள்.அதுதான் தலைமைச் செயலகம். அதிலிருந்து வரும் கட்டளைப்படித்தான் , மற்ற அங்கங்கள், அவயங்கள் வேலைசெய்யும். அதைப்போல கிரகங்களின் தலைமைச்செயலகம் சூரியன். சூரியனிடமிருந்து ஒளி பெற்றுத்தான் மற்ற ஒன்பது கிரகங்களும் ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கின்றன.

கிரகங்களின் பார்வைகள்

சூட்சும ரீதியாக சூரியனின் நேரடிப்  பார்வையை விட, சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கக்கூடிய கிரகங்களின் பார்வைகள் வலிமை படைத்தவை . ஆனால் அந்த கிரகங்கள் அப்படி வலிமையானஒளியைபெறுவதற்கு சூரிய ஒளி தான் காரணம் என்பதையும் மறந்து விடக்கூடாது. சூரியனை நம்முடைய கண்களால் நாம் நேரில் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் நம்முடைய கண்கள் பொசுங்கிவிடும். ஆனால் அந்த சூரிய வெளிச்சத்தில்தான் பகலிரவு போன்ற எல்லா காலங்களும் இருக்கின்றன.

குருவுக்கு சுயஒளி கிடையாது. ஆனால் சூரியனின் ஒளி பெற்ற குரு எந்த இடத்தைப் பார்த்தாலும் அந்த இடம் சுப பலம் பெறுகிறது. அதைப்போலவே புதனும் சுக்கிரனும் சூரியனுக்கு அருகில் இருக்கக்கூடிய  இரண்டு கிரகங்கள். இவை  மிகச் சிறந்த சுப கிரகங்களாக கருதப்படுகின்றன.பூமிக்கு அப்பால் வெகு தொலைவில் இருக்கக்கூடிய கிரகங்களில்,மிகப் பெரிய கிரகமான குரு, சுபகிரகமாகக் கருதப்படுகின்றது. சூரியனின் நேரடி ஒளி பயன்படுவதைவிட. சூரியனின் ஒளியைப் பெற்ற குரு கிரகத்தின் ஒளி, அதிக வலிமை பெற்று நன்மையைச் செய்கிறது.

 இன்னொரு உதாரணம் சொல்லலாம்

 ஒரு காகிதத்தை 12 மணி  உச்சி வெயிலில் வைக்கவும். அந்தக் காகிதம் எ ந்தப்  பாதிப்பும் அடையாது. அதே  காகிதத்தின் மீது ஒரு லென்ஸ் வைத்து சூரியஒளி  செலுத்துகின்ற பொழுது அது தீப்பற்றி எரிகிறது. நேரடி சூரிய ஒளி செய்யாததை, லென்ஸ் மூலமாக புகுந்த சூரிய ஒளி  செய்கிறது என்பதை கவனத்தில் கொண்டால், சூரிய ஒளியின் மூலமாக பிரகாசிக்கக் கூடிய சந்திரன், குரு,சுக்கிரன் முதலிய சுபகோள்களின் வலிமையைத் தெரிந்துகொள்ளலாம். அவை ஏன் செயல் அதிகம் பெறுகின்றன என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

சூரியகாரகத்துவம்

சூரியன் ஆண் கிரகம். அவருடைய நிறம் சிவப்பு. உடம்பில் தலை மற்றும் எலும்புகளுக்கு காரகத்துவம் பெறுபவர். வரத்தினங்களில் மாணிக்கம். திசைகளில் கிழக்கு.  பத்தாமிடத்தில் திக் பலம் பெறுகிறார். எண் கணிதத்தில் ஒன்றாம் எண்ணுக்குரியவர். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் பிரவேசிப்பார். 12 ராசிகளிலும்  சுற்றி வருவதை ஒரு ஆண்டு காலம் என்று சொல்லுகின்றோம். சிம்ம ராசியை ஆட்சி வீடாகக்  கொண்ட சூரியன், மேஷராசியில் முதல் 10 பாகையில் உச்சம் பெறுகின்றார். அதன் நேர் எதிர்  துலா ராசி முதல் பத்து பாகைகளில் நீச்சம் பெறுகின்றார்.

சனியின் வீடுகளான மகர கும்ப வீடுகளிலும், சுக்கிரனின் வீடான ரிஷபத்திலும்,  பகை பெறும் சூரியன் குரு மற்றும் செவ்வாய் வீடுகளில் நட்பு நிலையில் பெறுகின்றார். மற்ற ராசிகளில் நட்பும் இல்லை. பகையும் இல்லை. நட்சத்திரங்களில் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் சூரியனுக்கு உரியவை. சூரியனில் தசை  ஆண்டுகள் ஆறு. விம் சோத்தரி தசையில் மிகவும் குறைவான ஆண்டுகள் சூரியனுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
ஒரு ஜாதகத்தில் சூரியன் வலிமையிழந்து செயலற்ற நிலையில் இருந்துவிட்டால், அந்த ஜாதகம் மற்ற விஷயங்களில் எத்தனை பலம் மிகுந்ததாக இருந்தாலும் கூட, அவர் தைரியமற்றவராகவும், ஆத்ம பலம் அற்றவராகவும், எதையும் எதிர்கொள்ளும் திறன் இல்லாதவராகவும், கல்வி அறிவில் பின் தங்கியவராகவும், தந்தை மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதத்தை பெறாதவர்களாகவும்  இருப்பார்கள். சூரியனுக்கு சர்வ வியாகரண பண்டிதர் என்று பெயர் உண்டு. சூரியனுக்கு தூபம் சந்தனம். உலோகம் தாமிரம். சூரியனுக்குரிய காரகங்கள்: தந்தை, ஆத்மா, தமிழ், வலது கண், மருத்துவம், தலைவலி முதலிய நோய்கள், உஷ்ணம், வீரம், தைரியம், அரசாங்க வேலைகள், யானை, யாத்திரை, பகல்பொழுது.

சூரியன் லக்கினம் முதல் 12 ஸ்தானங்களில் நிற்கும் பொதுவான ஸ்தான பலன்கள்

சூரியன் லக்கினத்தில் நின்றால், பித்த சம்பந்தமான நோய்கள் வரும். கம்பீரமான தோற்றம் இருக்கும். அதிக உயரம் இருக்க மாட்டார்கள். சராசரி உயரத்தோடு, மெல்லிய சரீரமும் உஷ்ண தேகமும் கொண்டிருப்பார்கள். இருமல், சுவாசப்பை நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். இரண்டில் சூரியன் நின்றால் கவர்ச்சிகரமான பேச்சு இருக்கும். ஆனால் சம யத்தில் தீப்பிழம்புகள் போல பேசுவார்கள். செயல்களும் கடினமாக இருப்பதும் உண்டு. செவ்வாய் தொடர்பு கிடைத்து விட்டால் பேச்சு சற்று உக்கிரமாகவே  இருக்கும். சூரியன் பலவீனமாகி, ராகு,கேது, சனி தொடர்பு கிடைத்து விட்டால், கண் நோய்கள் வரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்திலும் பிரச்னைகள் வரும். மூன்றாம் இட சூரியன், நன்கு புகழ் உடையவர்களாக மாற்றுவார்.

சகோதரர்கள் நல்ல நிலையில் இருப்பார்கள். துணிவு உடையவர்களாக இருப்பார்கள். சூரி யன் கெட்டால் துணிவு இருக்காது. அச்சமும் கோழைத்தனமும் இருக்கும். நான்காம் இட சூரியனால், வெளிநாட்டில் புகழ் பெறும் வாய்ப்பு உண்டு. மெல்லிய சரீரம் உடையவர்களாக இருப்பார்கள்.  ஆனால் செயல்களில் தடங்கல்கள் வரும். தாயாருக்கு நல்லதல்ல. ஐந்தாமிட சூரியன் தகப்பனாருக்கு நன்மையைச் செய்யாது. சில நேரங்களில் தகப்பனாருக்கு ஆயுள்  தோஷத்தைத்  தரும் வாய்ப்பு உண்டு. ஆனால் சங்கீதத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு இது நல்ல அமைப்பாக சொல்ல முடியாது.
ஆறாம் இடத்தில் சூரியன் இருக்கும்பொழுது பெரும்பாலும் ஆரோக்கியக் குறைவு இருக்கும். வயிற்றில் பிரச்சனைகள் உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம்.

செவ்வாய் தொடர்பு பெற்றால் குடல் ஆபரேஷன் முதலியவைகள் நடக்கும். ஆனால் கலைத்துறையில் உயர்வு பெறுவார்கள். 7 ம் இடம் இல்லற வாழ்க்கை அல்லவா. பொதுவாக சூரியன் களத்திர ஸ்தா னத்தில் இருப்பது வரவேற்கத்தக்கதல்ல. மனைவியின் ஜாதகத்தில் இதை எதிர் கொள்கின்ற அமைப்பு இல்லாவிட்டால் மனைவியோடு சண்டை கருத்து வேறுபாடுகள் போன்றவை நடக்கும். மிகவும் தீமையான பலனாக சில நேரங்களில் கணவன் மனைவி பிரிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எட்டில் சூரியன் இருந்தால் நோய்நொடிகளோடு இருந்தாலும் கூட தீர்க் காயுளுடன் இருப்பார்கள். 9 ம் இடம் ,தகப்பனாருடைய இடம் என்பதால், இந்த இடத்தில் சூரியன் அதிக வலிமையோடு  இருப்பது  தகப்பனாருக்கு நல்லதல்ல.

காரகோ பாவ நாஸ்தி என்கின்ற அமைப்பின்படி  தகப்பனார் இல்லாத நிலையும் உருவாகலாம். ஆனால் சாஸ்திர நிபுணர்களாக இருப்பார்கள். கடல்கடந்த வாழ்க்கையில் நிலைத்து நிற்பார்கள். பத்தாமிடம் ஜீவன ஸ்தானம். 10ம் இடத்தில் சூரியன் தொடர்புகொள்வது என்பது நல்ல அமைப்பு. அரசாங்க உதவிகள் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, அரசாங்க உயர் பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். நல்ல கல்வி நிலையும் அரசியலில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவியும் கவுரவமும் பிரகாசமான வாழ்வும் கிடைக்கும். பதினோராம் இட சூரியன், செயல்களில் அதிக முயற்சி இன்றி நமக்கு வெற்றி யைத் கொடுக்கும் நிலையத் தருவார். சுபர் பார்வையும் இருந்து, நட்பு ஆட்சி வீடாக இருந்தால் நல்ல பலன்களைச் செய்வார்.

ஜாதகம் சுப பலன் பெற்று இருக்கும் போது, 11 ம் இட சூரியன், லாப ஸ்தானம் என்பதால் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் அதிகமான செல்வங்களைத் தருவார். பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் நல்ல வாழ்க்கையை தருவதோடு தெய்வ பக்தியையும் தருவார்.சூரியன் நீசத் தன்மை பெற்று ஒன்பதில் இருந்தாலும், சந்திரன் பாவ கிரகங்களோடு கூடியிருந்தாலும் குழந்தைகளின் ஆயுள் குறையும். சூரியன் தனது பகை கிரகமான சனி,செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரனுடன் கூடி, 1,9,12 ஆகிய இடங்களில் இருந்து குரு பார்வை இல்லாவிட்டாலும் குழந்தைக்கு ஆயுள் கண்டம் உண்டு. குழந்தையின் ஜாதகத்தில் ஆறில் சூரியன் இருக்க, சூரியனுக்கு ஏழில் செவ்வாய், சனி இருப்பது குழந்தையின் தகப்பனாருக்கு கண்டத்தை தரும். ஐந்தாமிடத்தில் சூரியன்சந்திரன் செவ்வாய் கூடி நின்றால் இருவருக்கும் கண்டம் உண்டாகும்.

சூரியன் கோசார நிலை

கோசார பலனைப்  பொருத்தவரையில், ராசியில்  சூரியன் வருகின்ற பொழுது செல்வாக்கு குறைவும்.ஆரோக்கியக் குறைவும் உண்டாகும். இரண்டாம் இடத்தில் வருகின்ற பொழுது பண நஷ்டமும் கண்ணில் நோயும்  உண்டாகும். மூன்றாமிடத்தில் வருகின்ற பொழுது ஆரோக்கியம் மேம்படும். புதிய பதவிகள் கிடைக்கும். செல்வாக்கும் உயரும். எதிரிகள் தோல்வி அடைவார்கள். நான்காம் இடத்தில் சூரியன் வருகின்ற பொழுது பெண்களால் பகை உண்டாகும். ஐந்தாம் இடத்தில் சூரியன் வருகின்ற பொழுது ஆரோக்கியக் குறைவு ஏற்படும். எதிரிகள் பெருமை பெறுவார்கள். ஆறாமிடத்தில் வருகின்ற பொழுது எதிரிகளை வெற்றி காண்பார்கள்.

செல் வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். ஏழில் சூரியன் இருந்தால் தன்னம்பிக்கை குறையும். குடும்பப் பிரச்னைகள் ஏற்படும். வயிற்றில் வலி ஏற்படும். எட்டில் சூரியன் வருகின்ற பொழுது அரசாங்க விரோதமும், அரசாங்க ஆதரவு கிடைக்காத நிலையும்  உருவாகும். ஒன்பதாம் இடமும் பத்தாம் இடமும் சூரியனுடைய உகந்த இடங்கள் அல்ல. ஆனால் பத்தாம் இடத்திலும் 11ம் இடத்திலும் வருகின்ற பொழுது ஆரோக்கியம் அதிகரித்தல், தொழில் லாபம், அரசாங்க நன்மைகள் முதலியவைகள் ஏற்படும்.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி